1/30/2010

அன்பின் சமூக உணர்வுள்ள தமிழ் பேசும் வாக்காளப் பெருமக்களே! உங்களுடன் சில நிமிடங்கள்


நடைபெற்று முடிந்த 6வது ஜனாதிபதித் தேர்தலில் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து, அவர் ஜனாதிபதியாக முடிசூட வேண்டும் என்ற தூயசிந்தையுடன் அயராது பாடுபட்டு, வாக்களித்த தங்கள் அனைவருக்கும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன். காலத்தின் தேவையுணர்ந்து தாங்கள் செயற்பட்டமையினையிட்டு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். கிழக்கு மாகணத்திற்;கான தெளிவான ஓர் பலமான அரசியல் கட்சியாக : t.m.v.P கட்சி மிளிர்கின்றது. அதன் கொள்கை மற்றும் அக்கட்சி எடுக்கின்ற முடிவு என்பதனை எமது கிழக்கு சார்ந்த தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்கின்ற சமூகமாக இருக்கவேண்டும். அப்போதுதான் எமது கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் எங்கள் கைகளிலே இருக்கும். மாறாக தேர்தல் காலங்களில் தங்களின் சுயலாபம் கருதி பெருந்தொகைப் பணத்தினை பெற்று எமது மக்களை திசை திருப்ப முனைந்தவர்கள் பலர் எமது சமூகத்திற்கு துரோகமிழைத்திருக்கிறார்கள்.இதன் மூலம் எமது சமூகத்தின் நலன் சார்ந்த அபிவிருத்திகள், உரிமைகள் போன்றவை மேலும் பல வருடங்கள் பின் செல்வதற்கு இவர்கள் வழி வகுத்திருக்கின்றார்கள். இவர்கள் இலாபம் அடைந்தது மட்டும்தான் எச்சம். வெறுமனே தாமும் தமது குடும்பத்தினரும் இலாபம் அடைந்ததே தவிர, சமூகத்தினை தோல்வியடையச் செய்திருக்கிறார்கள். இவர்களால் சமூகத்திக்கு எதுவித நன்மையும் இல்லை. எனவே இவர்களையும் எதிர்வருகின்ற தேர்தலில் மக்கள் இனங்காண வேண்டும்.
தமிழ் மக்கள் காலம் காலமாக விட்டு வருகின்ற தவறினை பெரும்பாலானவர்கள் விட்டுள்ளது மனவேதனை தருவதாகவே உள்ளது. தேர்தல் கால கட்டங்களில் விடப்படும் பொய்யான பிரச்சாரங்களையும்,ஏமாற்றுக் கதைகளையும் நம்பி நம்பி 30 வருடங்களுக்கு மேல் உயிர், உடமை, எதிர்காலம் எல்லாவற்றையும் தொலைத்த நிலையில் 6வது ஜனாதிபதித் தேர்தலிலும் பெரும்பாலான தமிழ் மக்கள் மீண்டும் தவறினை விட்டிருப்பது வேதனைக்குரியதே. தவறுக்கு மேல் தவறு விட்டு தொடர்ந்தும் அழுகின்ற, வேதனைப்படுகின்ற சமூகமாக நாம் மாறக்கூடாது. தங்களின் குறைநிறைகள்.ஒற்றுமை, உரிமை, தனித்துவம் என செயற்படுவது மட்டுமல்லாது, எதிர்கால அபிவிருத்தி குறித்தும் தூரநோக்குடன் சிந்திக்க வேண்டும். விழிப்படையாத சமூகமாக தொடர்ந்து இருப்பதற்கு நாம் ஒருபோதும் தயாராக இருக்கக்கூடாது. நாளாந்தம் சுயதேவைகளை அடுக்கிக் கொண்டு செல்லும் எம் மக்கள், அபிவிருத்திக்கான பாதைகளை தங்களின் சார்பாக நாம் முன்னெடுபதற்கு வழிவகுத்துக் கொடுக்க வேண்டியது தங்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பது போல் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் தலைமைத்துவங்கள் சோரம் போன ஒன்றல்ல. என்றும் சோரம் போகப்போவதுமல்ல, என்பதனை உணர்ந்து, எமது கரங்களைப் பலப்படுத்துவதற்கு நீங்கள் தயாராக உள்ள போதும் சில சுயநலம் கருதும் முறையற்ற அரசியல் தலைமைத்துவங்களை நம்பி கடந்த காலத் தவறுகளை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தாமல் எதிர்வருகின்ற காலங்களிலும் ஒருமித்த குரலாய் ஓசை எழுப்புவதன் மூலம் புத்துயிர் பெறுவோம். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். எதிர்வரும் காலங்களில் நாம் எதிர்கொள்கின்ற அனைத்து சவால்களுக்கும் ஒருமித்த சிந்தனையுடன் செயற்பட்டு கட்சியினையும் எமது கிழக்கு மாகாணத்தினையும் ஒளி பெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைவோம்! நன்றி என்றும் அன்புடன் உங்களில் ஒருவன் சி.சந்திரகாந்தன்
தலைவர்-த.ம.வி.பு.கட்சி முதலமைச்சர்-கிழக்கு மாகாணம்
ஒற்றுமை உரிமை தனித்துவம்

0 commentaires :

Post a Comment