1/26/2010

மீண்டும் தவறுவிடும் சந்திரகா விஜய குமாரரணதுங்க (பண்டாரநாயக்கா) (சாகரன்


இதுவரையும் இலங்கை அரசுகள் முன்வைத்த அரசியல் தீர்வுத்திட்டங்கள் எல்லாவற்றையும் விட சிறந்த தீர்வுத்திட்டத்தை முன்வைத்து ஒரு முன்மாதிரியாகவும், நம்பிக்கைக்குரிய அரசுத் தலைவராக திகழ்ந்தீர்கள். அன்று இவ் தீர்வுத்திட்டதை பாராளுமன்றத்தில் எரித்து சாம்பல் ஆக்கியது ஜதேக. இதற்கு எல்லா வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்தாசையாக இருந்தது. புலிகளின் வேண்டுதலுக்கு ஏற்ப செயற்பட்டே சம்மந்தன் கோஷ்டி அவ்வாறு செய்தது. தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கவிருந்த நல்ல தீர்வுத்திட்டத்தை இல்லாமல் செய்தது மட்டும் அல்லாமல் இவ் தீர்வுத்திட்டத்தை வரைந்த நீலன் திருச் செல்வத்தையும், கேதீஸ்வரனையும் புலிகள் கொன்றொழித்த வரலாற்றை கொண்டது உங்கள் ஆட்சிக்காலம். இதற்கு உங்கள் அமைச்சரையில் இருந்த உங்கள் தாய்மாமன் அனுருத்த ரத்தவத்த உங்களுடனேயே இருந்து உங்களுக்கே குழி பறித்தார் என்பதுவும் யாவரும் அறிந்ததே. இவை எல்லாவற்றையும் மீறி தைரியமாக தீர்வுத்திட்டததை அமுல்படுத்தும் செயல் முறைகளை உங்களால் செய்யமுடியாமல் போனது. இது நீங்கள் ஒரு ‘இரும்பு மனுஷி’ என்பதை நிலைநிறுத்த முடியாமல் போய்விட்டது.

அன்றைய கால கட்டத்தில் புலிகளின் மேலாதிக்கம், இராணுவத்தின் மேலாதிக்கம் என மாறி மாறி கைமாறி நின்றது யாழ்பாணக்குடாநாடு. நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது புலிகளின் ஆதிக்த்தில் இருந்த யாழ்பாணத்தை புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து உங்கள் திறமையையும், தைரியத்தையும் நிலைநாட்டின்னீர்கள.; யாழ்பாணத்து தமிழ் பேசும் மக்களும், சிங்களம் பேசும் மக்களும் மகிழ்ந்து பூரித்துப் போனார்கள். யாழ்பாணத்தை இலங்கை அரசு முதல் முறை கைப்பற்றியபோது புலிகளால் பலாத்காரமாக வன்னிக்கு அடித்து நடையாக மந்தைகள் போல் மழையில் சாய்த்துச் செல்லப்பட்டனர். வன்னியில் புலிகளால் அகதிகள் ஆக்கப்பட்ட யாழ்பாணக் குடாநாட்டு மக்கள் புலிகளின் ‘விருந்தோம்பலை’ நன்றே அனுபவித்தனர்.

அதனால்தான் மீண்டும் உங்கள் ஆட்சிக்காலத்தில் யாழ் குடாநாடு இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபோது அவர்களை புலிகளால் சாய்த்துச் செல்ல முடியவில்லை. எதுவாகினும் நாம் யாழ்பாணத்தில் தங்கிவிடுகின்றோம் என்ற அவர்களின் முடிவை புலிகளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதில் புலிகள் மீதான வெறுப்பு என்பதுடன் உங்கள் மீதான நம்பிக்கையும் காரணம். நீங்களும் அவ் நம்பிக்கையை வீணடிக்காமல் இராணுவத்திற்குள் சிவில் நிர்வாகப் பிரிவை அமைத்து இராணுவத்திற்கு பதிலாக ‘இராணுவ’ சிவல் நிர்வாகிகள் மூலம் ‘அப்பக் கடை’ போட்டு அரசுக் கட்டுப்பாட்டு தமிழ் பகுதியில் ஆட்சி செய்து மக்களிடம் நல் மதிப்பை பெற்றீர்கள்.

1983 ம் ஆண்டு இனக்கலவரம் உட்பட தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கலவரங்களுக்காக அரசுத் தலைவர் என்ற முறையில் தமிழ் பேசும் மக்களிடம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரி நின்றீர்கள். உங்கள் செயற்பாட்டின் மூலம் எங்கள் கண்களில் கண்ணீரை அன்று வரைவழைத்தீர்கள். சிங்களப்பகுதி எல்லாம் ‘வெண்மை’ அமைப்பின் மூலம் தமிழ், சிங்களம் பேசும் மக்களிடையே நல்லெண்ணத்தையும், நம்பிக்கையும் பரஸ்பரம் ஏற்பட ஆவன செய்தீர்கள். இவற்றை நாம் நம்பிக்கையுடன் பார்த்து ஆதரித்து நின்றோம். இதுவரைக்கும் எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது.

இதன் பின்பு சராசரி இலங்கை அரசுத் தலைவர் போல் புலிகளை அடித்து பலவீனப்படுத்துவது, பின்பு பேசுவது, ஆசுவாசப்படுத்திக் கொள்வது, பின்பு அடிபடுவது என்ற புலிகளுடனான விளையாட்டை நீங்களும் செய்ய முற்பட்டீர்கள். பிள்ளைக்கு விளையாட்டு (தமிழ் பேசும் மக்கள்)சுண்டெலிக்கு உயிர் போன கதையாய் விளையாடினீர்கள் நீங்கள் இருவரும். என்னதான் புலிகளை அடித்தாலும் இறுதியில் அவர்களுடன்தான் பேசவேண்டும் என்ற சராசரி அரசுத் தலைவருக்குரிய அணுகு முறையை மேற்கொண்டீர்கள். ஏமாற்றம் அடைந்தோம். இதன் தொடர்சியாக கருணா அம்மான் புலிகளில் இருந்து பிரிந்து கிழக்கு மாகாணத்தில் தனது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்தார். பிரபாகரனின் ‘வன்னிப் புலிகள்’ அவரையும், அவருடன் கூட நின்ற சகாக்களையும் கொன்றொபழிப்பதற்காக வாகரையில் மட்டக்களப்பை நோக்கி பெரும் படையுடன் முன்னேற முற்பட்டபோது, இராணுவத்தை பாராமுகமாக நிற்கச் (சொல்லி)செய்து கிழக்கின் பல நூறு இளைஞர்களின் மரணத்திற்கு மறைமுகமாக காரணமாகி நின்றீர்கள்.

இதற்கு பிரதி உபகாரமாக பாராளுமன்றத்தில் உள்ள தங்கள் சிறுபான்மை அரசின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற புலிகளின் தமிழ் தேசியக் கூட்டைமைப்பை ஆதரவாக வாக்களிக்கச் செய்வதாக புலிகளுடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தம் மூலம் மாபெரும் தவற்றை செய்த போது நாம் வெதும்பி நின்றோம். இறுதியில் வழமைபோல் புலிகள் உங்களை ஏமாற்றியது மட்டும் அல்லாது கொழும்பில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் மூலம் உங்கள் உயிரைப்பறிக்க முற்பட்டனர். அதில் உங்கள் ஒரு கண்ணைப் பறி கொடுத்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொண்டீர்கள். நாங்கள் அப்போதும் உங்களுக்காக அனுதாபப்பட்டு நின்றோம்.

நீங்களும் ‘கண் கெட்ட பின்பு’ புலிகளை புரிந்து கொண்டீர்கள். ஆனால் காலங் கடந்த ஞானம். எல்லாம் உங்கள் கைகளை நழுவிப் போய்விட்ட நிலமை. நீங்களும் உங்கள் அரசாட்சிக் காலத்தை முடித்துக் கொண்டீர்கள். உங்கள் குடும்பத்தில் பலமான வாரிசு அற்ற நிலையில், மகிந்தா ‘வாரிசு’ அரசிலை எதிர்த்து லாவகமா ஆட்சியைப் பிடித்துக் கொண்டார். உங்களை தவிர்த்தும் வந்தார். பண்டாரநாயக்கா மண்டபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் நீங்கள் உட்கார கதிரை ஒதுக்காமல் இருந்ததைக் கேள்விப்பட்டு மனம் புழுங்கினோம். ஆனாலும் தொடர்ந்தது உங்கள் மௌனம். உங்கள் மீதான மரியாதை சற்று கூடிக் கொண்டே வந்தது எங்களுக்குள்.

உங்கள் தந்தையின் கொலைக்கு காரணமானவர்கள், உங்கள் வாழ்கைத் துணைவரின் கொலைக்கு காரணமானவர்களின் பொது வேட்பாளர் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக நீங்கள் வெளியி;ட்டுள்ள பத்திரிகை செய்தி மூலம் எல்வாவற்றையும் தவிடு பொடியாக்கி விட்டீர்களே!. நாம் தற்போது இடிந்தே போனோம். நீங்களுமா என்று? உங்கள் பட்டப்படிப்பை முடித்த ஐரோப்பிய நாடுகளில் உங்களுக்கு கிடைத்த ‘இடதுசாரி’ தாக்கம் உங்களின் எகாதிபத்திய ஒத்துழையாமை தொடர்ந்தும் பேணி வரும் என்ற நம்பினோம். உங்கள் தந்தையின் சுதேசிய சிந்தனையும், வாழ்க்கைத் துணைவரின் இடதுசாரிச் செயற்பாடுகளும் உங்களைத் தொடர்ந்தும் வழி நடத்தும் என்று நம்பினோம். ஏமாற்றி விட்டீர்களே! இது அநியாயம் அல்லவா? வரலாற்று துரோகம் அல்லவா?

ஏதிரியை பலமடையச் செய்யும் தவறான உங்கள் முடிவிற்கு மகிந்தவின் அணுகுமுறையால் ஏற்பட்ட மன உழைசை;சல் ஒரு காரணம் என்று நீங்கள் வாதிடலாம். இதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் நீங்கள் தனி மனிதர் அல்ல. இலங்கை இனப் பிரச்னைக்காக தன் உயிர் கொடுத்த பண்டாரநாக்காவின் மகள், அதே காரணத்திற்காக உயிரைப் பறிகொடுத்த விஜய குமாரரணதுங்காவின் துணைவியார். இவற்றிற்கு அப்பாலும் இலங்கைத் தமிழர் பிரச்சனைத் தீர்க்க உண்மையாக? புறப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் கூட. எனவே தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கு இடம் கொடாது செயற்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குறைந்த பட்சம் மௌனம் காத்திருக்க வேண்டும். அப்படி செய்திருப்பீர்களாயின் எங்கள் இதயங்களில் மேலும் உயர்ந்து பூஜிக்கப்பட்டிருப்பீர்கள். மீண்டும் ஒரு கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் உங்களுக்கு ஏற்படப் போகின்றது என்ற ஆதங்கம் எங்களுக்குள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ம்… மீண்டும் சந்திப்போம்.

(சாகரன்) (தை 25, 2010)


0 commentaires :

Post a Comment