1/24/2010

இலங்கையில் ‘இராணுவ’ ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம், துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம் (சாகரன்)

இன்னும் 5 நாட்களே ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கும் நிலையில், இலங்கையில் இராணுவ ஆட்சி வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்ற நிலைமைகளை நோக்கி இலங்கை அதிபர் தேர்தல் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. சரத் பொன்சேகா போன்ற இராணுவத் தளபதியை இலங்கையில் ஆட்சியில் அமர்த்தி தென்கிழக்கு ஆசியாவில் இராணுவ ஆட்சியில் இதுவரையில் உள்படாத ஒரு நாட்டை அதற்குள் வீழ்த்தி தனது வர்க்க நலன்களை பூர்த்தி செய்ய துடிக்கின்றன மேற்குலக நாடுகள். அதற்கு கண்டு பிடிக்கப்பட்ட நபர்தான் சரத் பொன்சேகா. ஐக்கிய தேசியக் கட்சியினால் தமது விருப்பங்களை நிறைவேற்ற முடியாத மேற்குலகம் ஜேஆர் ஜெயவரத்தனவிற்கு பிறகு தனக்கு ஒரு பலமான தங்களது சக்தியின் பிரதிநிதி இலங்கையில் இல்லாமல் போனதால் மீண்டும் இந்தத் தேர்தலில் விட்ட இடத்தை பிடிக் கங்கணம் கட்டி நிற்கின்றன. இதற்கு தமிழர் தரப்பில் இவர்களுக்கு எல்லாவகையிலும் உற்ற தோழனாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்மந்தர் அணி இவருக்கு எல்லாவகையிலும் தோளோடு தோள் கொடுக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்.

உலக அரங்கில் எப்போதும் மற்றய எல்லோரையும் விட அமெரிக்காவையும் அவர் தம் கூட்டாளிகளையும் நம்பும் (புலம் பெயர்) புலிகள் தமது தமிழ் தேசியம் என்ற சுலோகத்திற்காய் தற்போது பெற்றெடுத்த முடமான பிள்ளைதான் ‘நாடுகடந்த தமிழ்ஈழம்’. இப் பிள்ளையிற்க சொத்து சேர்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது இலங்கைப் பிரநிதிகளாக வரிந்து கட்டி சரத் பொன்சேகாவிற்கு தமது ஆதரவுக்கரத்தை நீண்டி நிற்கின்றனர். ஒரு காலத்தில் தற்கொலைக் குண்டு மூலம் கொல்ல முயன்று தோற்றப் போன புலிகளும், அவர்களின் இலக்கு சரத் பொன்சேகாவும் தற்போது ஒரு கூட்டமைப்பில். புலிகளும், அவர்களின் தலையாட்டித் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது (இலங்கை) தேசியத் தலைவராக பொன்சேகாவை ஏற்றக் கொண்டுள்ளனர். இதனை தமிழ் மக்களும் எற்றக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

இலங்கையில் ஈராக், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ளது போன்ற இராணுவ மேலாதிக்க ஆட்சியொன்றை நிறுவி தமது சமாதானப்படைகள் மூலம் தமது வியாபாரத்தையும், மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்த எடுத்து வரும் ஒரு பலப் பரீட்சையின் உச்சக்கட்ட நிலையில் இலங்கையின் தேர்தல் களம் தற்போது பயணித்துக் கொண்டு வருகின்றது. இதில் சரத் பொன்சேகா வெற்றி பெறுவார் ஆகின் தெற்காசிய நாடுகள் சிலவற்றில் நிலவி வரும் ஒருவகை இராணுவத் தன்மையுடைய ஆட்சியினை ஜனநாகத் தேர்தலில் வென்றவர் என்ற பட்டத்துடன் இலங்கையில் அமைத்திட முயலும் சதிச் செயற்பாடுகள் நடைபெற்றக் கொண்டு இருக்கின்றன.

ஏகாதிபத்தியம் நிமித்த முடியாமல் சரிந்து வரும் தனது பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பி மீண்டும் பழைய பாணியில் ஒரு யுத்தத்தை அங்கங்கே ஆரம்பித்து தமது ஆயுத வியாபாரத்தையும், மேலாதிக்கத்தையும், சுரண்டலையும் நிலைநாட்டும் முயற்சிக்கு இலங்கை மக்கள் முற்றப் புள்ளி வைத்தாக வேண்டும். அன்றேல் இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும், மியான்மாரிலும், ஈராக் போன்ற நாடுகளில் நடைபெறும் வெடிகுண்டுச் சத்தங்களும், மரண ஓலங்களும் புதிய வடிவில் இன்னும் அகோரமாக இலங்கையில் மீண்டும் உருவெடுக்கும் சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கு இல்லை. குட்டையை குழப்பி மீன்பிடிக்கும் வன்செயலை மேற்குலகம் வேண்டி நிற்கின்றது.

25 வருட காலத்திற்கு பின்பு வெடிகொழுத்தி கொண்டாடி முடிந்த தைப் பொங்கலை கடைசியான சந்தோஷத் தைப்பொங்கலாகவும் முடிக்கும் நிலமைகளை ஏற்படுத்தும் நோக்கோடு இலங்கையில் ஆட்சி மாற்றம் கோரி நிற்கின்றனர் சிலர். இலங்கை மீதும், இந்து சமுத்திரப் பிராந்தியம் மீதும் மேலாதிக்கம் செலுத்த விரும்பும் சக்திகளின் விருப்பு அதுவே. இலங்கை நாடு தற்போது கொண்டுள்ள உறவு நாடுகளில் எரிசல் அடைந்து இவற்றை செய்ய முயல்கின்றன. சீனா, ஈரான், வியட்நாம், இந்தியா, ரஷ்சியா போன்ற நாடுகளுடனான இலங்கையின் தற்போதைய உறவு இவர்களால் ஏற்றக் கொள்ள முடியவில்லை.

இதற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே அவர்களின் விரும்பமாகும். இதற்கு அவர்களுக்கு தேவை இலங்கையில் ஒர் இராணுவ ஆட்சித்தன்மையுடைய நபர். அவர்தான் சரத் பொன்சேகா. இவரைத் தமது திறவு கோலாகக் கொண்டு இலங்கைக்குள் புகுந்து விடத்துணியும் ஏகாதிபத்தியம் தற்செயலாக சரத்தின் வெற்றி மூலம் புகுந்து விட்டால் கடந்த 30 வருடகாலமாக நாம் அனுபவித்து வந்த போர் கொடுமைகளை ஒருவருடத்தில் மொத்தமாக அனுபவிக்க வேண்டிய பயங்கர நிலைமைகளுக்கு உள்ளாக வேண்டிய அபாய நிலமைகளை மக்களால் தடுக்க முடியாமல் போய்விடும்.

மாற்றம் வேண்டும் என்பது அவர்கள் பாஷையில் சொல்வதாயின் ஒரளவிற்கு ஜனநாயகத்தன்மையுடன் உள்ள தற்போதைய நிலமைகளை இல்லாமல் செய்து இராணுவ ஆட்சிக்கு ஒத்த ஆட்சியொன்றை இலங்கையில் நிறுவுவதே.

இப்படியான ஒரு பயங்கரமான நிலமைகளை இலங்கை மக்கள் ஆகிய நாங்கள் அனுமதிக்கப் போகின்றோமா? அல்லது இதனை முளையிலேயே கிள்ளி எறியப் போகின்றோமா? என்பதே தற்போதுள்ள பிரதான கேள்வி. இவற்றை ஏற்படுத்த எல்லாவகையிலும் உதவி ஒத்தாசையாக இருக்கும் சம்மந்தர் - தமிழ் தேசியக் கூட்;டமைப்பை தமிழ் மக்கள் இனம் கண்டு தூக்கி கடாச வேண்டும். 60 வருடகால தமிழ் பிற்போக்குத் தலைமைகளின் காட்டிக் கொடுப்பின் உச்சக்கட்டமாக தற்போது சம்மந்தன் கோஷ்டி வரிந்த கட்டிக் கொண்டுநிற்கும் இராணுவ ஆட்சிக்கான முஸ்தீபுக்களை இல்லாமல் செய்ய வேண்டும்.

ஐதேக இன் ஏகாதிபத்திய சார்பு நிலை இன்று இராணுவ ஆட்சிக்கு வழி வகுத்து தன்னையே அழித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளி அவர்களை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றது. தமது அமைப்பின் உடைவுக்கு காரணம் மகிந்தாவே என்று பழிவாங்கும் நோக்குடன் செயற்படும் ஜேவிபி தமது தற்போதைய ஏகாதிபத்திய சார்ப்பு நிலைப்பாட்டின் தவற்றிற்காக எதிர் காலத்தில்; வருந்தக்கூடிய வாய்பே இல்லாமல் காணாமல் போய்விடும் வாய்பக்கள் நிறையவே உள்ளன. ஜேவிபின் தற்போதைய கூட்டாளி ரணில் விக்ரமசிங்க இன் அமைச்சர் அவைதான் ஜேவிபி இயக்கத்தின் தலைவர், சக தோழர்களை சுட்டு அழித்ததைக் கூட மறந்து, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மகிந்தாவை பழிவாங்கத் துடிப்பது இலங்கையில் ஒரு இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விட உதவலாம் என்ற கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போல் பின்பு உணரப்பட்டால் அன்று ஜேவிபியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இலங்கை மக்களே! (தனித்து தமிழ் பேசும் மக்களையோ அல்லது சிங்களம் பேசும் மக்களையோ விழித்துக் கூப்பிட விரும்பவில்லை) நாம் ஒரு மிகவும் இக்கட்டான அபாயகரமான பொறிக்குள் சிக்க வைப்பதற்கான நிகழ்வுப் போக்குகள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் என்ற போர்வையில் நிறைவேற்றிட ஏகாதிபத்தியம் கங்கணம் கட்டி நிற்கின்றது. அது சரத் பொன்சேகா என்ற இராணுவத்தளபதி மூலம் ஒரு இராணுவ ஆட்சியை இலங்கையில் நிறுவ முயலும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதில் தமிழ் மக்கள் தரப்பில் சம்மந்தன் - தமிழ் தேசியக் கூட்டைப்பும், முஸ்லீம் மக்கள் தரப்பில் முஸ்லீம் காங்கிரசும், சிங்கள் மக்கள் மத்தியில் ஐதேக என்ற ஏகாதிபத்திய நண்பனும் மாற்றம் வேண்டி நிற்கும் ஜேவிபி யும் உள்ளன. உதிரிகளாக மனோ கணேசன், மங்கள் சமரவீர, இன்னும் சில மலையக பெருந்தோட்ட முதலாளிமார்கள், கொழும்பு முதலாளிமார்கள் அடங்குவர்.

மகிந்தாவுடன் உங்களுக்கு பிரச்னை என்றால் அதற்காக இராணுவத்தன்மை ஆட்சியை இலங்கையில் ஏகாதிபத்தியங்களின் விருப்பிற்கு ஏற்ப அமைத்து ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறும் தினம் தினம் குண்டு வெடிப்புக்களுடன் கூடிய கொலையாட்சிகளை அமைதிப்படை என்ற பெயரில் எற்பட வாய்பளிகாதீர்கள். இது உங்களை எப்போதுமே மீள முடியாமல் படுகொலைக் குழிக்குள் தள்ளவிடும். இது வந்த பின்பு பார்ப்போம் முதலில் மகிந்தாவை அகற்றுவோம் என்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டும் அல்ல.

எமது நாட்டில் யுத்தம் நடைபெற்றது உண்மைதான். அரசு படைகள் தமிழ் பேசும், சிங்களம் பேசும் மக்களை கொலை செய்ததும் உண்மைதான். புலிகளும், ஜேவிபி யும் மாற்றக் கருத்தாளர்களையும், விடுதலை இயக்கங்களையும், பொது மக்களையும் கொலை செய்ததும் உண்மைதான். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனையவிடுதலை அமைப்பக்கள் நடைமுறைத் தவறுகள் செய்ததும் உண்மைதான். ஆனால் எமது நாட்டில் இது வரையில் ஒரு இராணுவ ஆட்சி நடைபெறிவல்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள், மாற்றக் கருத்தாளர்கள், புத்திஜீவிகள், மாற்று விடுதலை அமைப்பு உறுப்பினர்கள், புலிகளின் கட்டாய ஆள்ச்சேர்பிற்கு மறுத்தவர்கள் என நபர்களாக கொல்லப்பட்டதும் உண்மைதான். முஸ்லீம் மக்கள், சிங்கள மக்கள் கிராமங்களாக இங்கொன்றும் அங்கொன்றமாக கொலை செய்யப்பட்டதும் உண்மைதான். இந்திய இராணுவம் தாக்குதல் செய்ததும் உண்மைதான். இதற்காக வலிந்த தாக்குதலை புலிகள் மேற்கொண்டு தாக்குதலுக்கான காரணங்களைத் தேடிக்க கொடுத்ததும் உண்மைதான்.

ஆனால் இராணுவ ஆட்சியாளர்கள் , கிட்லர், முசோலினி, பொல்பொட் செய்தது போல் பொதுப்படையாக வகை தொகையில்லாமல் மிகவும் திட்டமிட்டு தொடர்சியாக படு கொலைகள் நிகழ்த்தப்படவில்லை இலங்கையில். தினம் தினம் தெடர்சியாக நூற்றுக்கணக்கான உயிர்களை பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு கொலைகள் நிகழ்த்தப்படவில்லை. இனக்கலவரங்கள், கைதுகள் வதை முகாங்கள் என்ற நிலமைகள் இருந்த நிலமையிலும் ஒரு இராணுவ ஆட்சிக்குரிய பரிணாமத்தை இலங்கை இதுவரை கொண்டிருக்கவில்லை. ஆபிக்க நாடகளின் நடைபெற்றது போல் இலட்சம் மக்கள் சிலதினங்களுக்கள் கொன்று குவிக்கப்படவில்லை. மாற்ற மொழி பேசும் மக்கள் என்பதற்காக அறைக்குள் பூட்டி நச்சு வாயு செலுத்தி ஒரு சில மணி நேரத்தில் பல ஆயிரம் மக்களை திட்டமிட்டு கொல்லவில்லை. ஏன் முன்னாள் புலி உறுப்பினர்களையும்(சரணடைந்த) அவ்வாறு யாரும் செய்யவில்லை. கந்தன் கருணை, வெலிக்கடை, சூரியகந்த(அன்கும்புற), காத்தான்குடி, பொலநறுவ, அனுராதபுரம் போன்ற இடங்களில் ஒரு நாளில் நடைபெற்ற கொலைகளைத் தவிர. இவற்றில் இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் கைகள் இருந்தன.

இவ்வளவிற்கு மத்தியலும் ஏதோ சில, பல ஜனநாய நிலைமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து கொண்டுதான் இருந்தது. ஜனநாகபூர்வமான தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன. புலிகளின் கட்டுப்பாட்டு தமிழ் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பல கட்சி ஜனநாகம் இருந்து கொண்டுதான் இருந்தது. இவ்வாறான நிலமையை இல்லாமல் செய்யும் ஒரு மோசமான இராணுவ மேலாதிக்க ஆட்சி வேண்டாம் எமக்கு. இவற்றை நாம் எமது நாட்டிற்குள் குறுகிய சிந்தனையின் அடிப்படையில் அனுமதிப்போமானால் இதனை எம் நாட்டில் இருந்து விரட்ட முடியாது. இதனை விரட்ட நாம் பெரும் மனித இழப்புக்களை சந்திக்க வேண்டிவரும். எனவே வரு முன் காப்போனாக ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவை தவிர்த்தே வையுங்கள். மேற்குலக நாடுகளுக்கு எமது ஒற்றுமையை வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற நடைமுறையினூடாக காட்டுங்கள்.

எனவே இலங்கை மக்கள் நன்கு சிந்தித்து எமக்கு இராணுவ ஆட்சி தேவையில்லை. மேற்குலக நாடுகள் மனித உரிமை, போர் குற்றங்கள், நிவாரணங்கள், நியாமான தேர்தல் என்ற கோதாவில் எமது நாட்டிற்குள் நுழைய அனுமதியாதீர்கள். அப்படியான ஒரு வரலாற்றத் தவற்றை நீங்கள் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் எச்சரிக்கை உணர்வுடன் இதனை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம்.

இராணுவ மேலாதிக்க ஆட்சி ஏற்பட்டாலும் தமது படோபகரமான வாழ்வை உறதிப்படுத்தப்படும் என்பதினால் தனிநபர் சரத் பொன்சேகா, சம்மந்தர் - தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குழு, ஐதேக, முஸ்லீம் காங்கிரஸ், மனோகணேசன், மங்கள் சமரவீர, ஜேவிபி சோமவன்ச அமரசிங்க போன்றவர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களைப்பற்றி கவலை அடையாதீர்கள். மக்களே நீங்கள் விரும்பாத இராணுவ மேலாதிக்க ஆட்சி அமைவதை தடுத்து நிறுத்துங்கள். இது தமிழ் மக்களுக்கும் நல்லது, இலங்கைக்கும் நல்லது, இந்த சமுத்திர பிராந்தியத்திற்கும் நல்லது, ஏன் உலகிற்கும் நல்லது. மனித குலத்திற்கும் நல்லதே. வருமுன் காப்போனாக செயற்படுவோம்.

(சாகரன்) (தை 20, 2010)

0 commentaires :

Post a Comment