1/20/2010

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதுவும் கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை



சம்பந்தன் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்கிறார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.

சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம முழுமையாக நிராகரித்தார். அரசியல் லாபம் பெறுவதற்காக இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாகவும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் வேறு எவரும் குடியேற்றப்படமாட்டார்கள் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணத்தில் முற்றிலும் பெரும்பான்மையினரிடம் பறிபோகும் எனவும் அம்பாறை - அரந்தலாவை முதல் மட்டக்களப்பு வரை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது அரசியல் லாபம் கருதி மக்களைத் திசை திருப்புவதற்காகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இதில் எதுவித உண்மையும் கிடையாது.

போர்ச் சூழல் காரணமாக கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இவர்கள் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களின் புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படு கின்றனர். இந்தச் செயற்பாட்டில் எதுவித அரசியல் தலையீடும் கிடையாது.

இதற்கு முன்னரும் சம்பந்தன் எம். பி. இவ்வாறு சிங்களக் குடியேற்றம் குறித்து குற்றஞ் சுமத்தியிருந்தார். அவரின் தலையீட்டினால் வேறு நபர்களின் இடங்களில் முறைகேடான மீள்குடியேற்றங் கள் இடம்பெற்றுள்ளன.

வேறு பகுதிகளில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப் பட்டு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் ஒருபோதும் குடியேற்றப்படவில்லை. 20 வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய மக்களும் இன்று தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

1981 இல் திருகோணமலையில் அதிகமான சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர். போர்ச் சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

சட்ட விரோதமான மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றிருந்தால் அது குறித்து அந்தப் பிரதேச அரச அதிபரிடமோ பிரதேச செயலாளரிடமோ முறையிடலாம்.

தேர்தல் நெருங்கியுள்ளதால் பொய் வதந்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.


0 commentaires :

Post a Comment