அது 1990ம் ஆண்டு. சந்திசேகரனின் திருமணம் நடந்த ஆண்டு. நாங்கள் தலவாக்கலை நகரில் கடை மேல் மாடியில்தான் தங்குவோம். நாங்கள் காலையிலேயே வெந்நீர் வைத்து குளித்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்போம். அன்று காலை 11 மணிக்கு அவருக் குக் கலியாணம். காலையில் எழுந்த அவர் வழக்கம் போல வெந்நீர் வைத்தார். பின்னர் என்னிடம் ‘வெந்நீர் போட்டிருக்கேன்... முதலில் நீ குளிடா!’ என்றார். அப்போது கதவை யாரோ தட்டினார்கள். திறந்தால் வெளியே ஒரு தொழிலாளி நின்று கொண்டிருந்தார். சத்திய பிரமாண கடிதம் ஒன்று வேண்டும் என்று கேட்டார் அவர். தன் தலைவருக்கு அன்றுதான் திருமணம் என்பது அவருக்குத் தெரியாது போலும்... நாங்கள் ஏதேனும் சொல்வதற்கு முன்னர் அவராகவே முந்திக்கொண்டு தொழிலாளியை உள்ளே வரச்சொன்னார். அப்போது தலைவர் குளிப்பதற்கு ரெடியாக ஒரு டவலை மட்டுமே கட்டிக்கொண்டிருந் தார். நான் குளிக்கப் போனபோது அவர் அதே கோலத்தில் கதிரையில் அமர்ந்து சத்தியப் பிரமாண கடிதத்தைத் தயாரிப்பதில் ஈடுபட்டி ருந்தார். இதுதான் நான் கண்ட சந்திரசேகரன்.’ தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மிகுந்த சோகத்தோடு எம்மிடம் சொல்லத் தொடங்கினார் மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் விஜயகுமார். இரவெல்லாம் பட்டாசு வெடித்து, கூத்தும் கும்மாளமுமாக 2010 புத்தாண்டை வரவேற்ற தமிழ் மக்களை காலை எட்டு மணியளவில் வந்த அந்தச் செய்தி உலுக்கிப் போட்டுவிட்டது. 31ம் திகதி இரவிலும் அரசியல் சந்திப்புகளை நடத்திக் கொண்டு நன்றாகவே இருந்த அமைச்சர் சந்திரசேகரனை விடியலில் வந்தத் திடீர் மாரடைப்பு அவரை எம்மிடமிருந்து பிரித்துவிட்டது 1956ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி, ஒரு வசந்த காலத்தில் வர்த்தகரான பெரியசாமிக்கும் பாப்பாத்தி அம்மாளுக்கும் மெறாயா பேடெப் தோட்டத்தில் எட்டுப் பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாவதாகவும் ஒரே ஆண் மகனாகவும் பிறந்த சந்திரசேகரன், அரசியல்வாதி என்ற வகையில் பார்த்தாலும் கூட, மிகமிக இளமையான 53 வயதில்தான் மரணமடைந்திருக்கிறார். 1977ம் ஆண்டு மலையக அரசியல் வானில் ஒரு உதய தாரகை போலவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் தோன்றிய சந்திரசேகரன் உதய சூரியனாகவே அஸ்தமித்துப் போனார். ‘நான் எத்தனையோ பேரின் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை சந்திரசேகரனையே நான் சிறந்த பேச்சாளனாகக் காண்கிறேன். எளிமை யாகவும், தெளிவாகவும், எடுத்துக் கொண்ட விஷயத்தைவிட்டு விலகாம லும் ஆழமாகவும் பேசவல்லவர் சந்திரசேகரன். அவரிடம் தமிழர்களைப் பற்றி பொதுவாகவும் மலையகத் தமிழர்கள் பற்றி குறிப்பாகவும் ஒரு அரசியல் தொலைநோக்கு இருந்தது. இப்படி ஒரு அரசியல் தொலைநோக் குக் கொண்ட அரசியல் கட்சி மலை யகத்தில் தோன்றியது இதுவே முதல் தடவை. இப்படி ஒரு கட்சி இன்றுவரைத் தோன்றவும் இல்லை’ இப்படிச்சொல்கிறார் ம. ம. மு. வின் ஆரம்பகால உறுப்பினர் லோரன்ஸ். மறைந்த அமைச்சரின் பள்ளித் தோழரும் அவரைத் தன் அரசியல் குருவாகவும் கருதும் பொதுச் செயலாளர் விஜயகுமார், ‘அமைச்சரின் அரசியல் சிந்தனைகள் அவர் கட்சி ஆரம்பித்த 1989ம் ஆண்டுதான் வெளிப்பட்டன என்று எவராவது கருதினால் அது தவறு’ என்கிறார். ‘அவை எல்லாம் பள்ளிக் காலத்திலேயே முகிழ்ந்து விட்டன. ஹட்டன் ஹைலண் ட்ஸ் கல்லூரியில் நாங்கள் படித்தபோது எங்களுக்கு படிப்பித்த ஆசிரியர் திருச் செந்தூரன் அரசியல் ரீதியாக சிந்திப்பது எப்படி என்பதை எங்களுக்குக் கற்றுத் தந்தார். அரசியல் மண்வாசனையை எங்களில் ஏற்படுத்தியவர் அவர்தான்’ என்று சொல்லும் விஜயகுமார், 1989ம் ஆண்டை யும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளையும் எழுச்சி மிக்க காலம் என வர்ணிக்கிறார். மாணவ பருவத்தில் மறைந்த சந்திரசேகரன் நல்ல பேச்சாள ராகவும் நிறைய வாசிப்பவராக வும் திறமைமிக்க மாணவராக வும் விளங்கினார் என்றும் குறிப்பிடுகிறார். படிப்பை முடித்துவிட்டு அப்பாவுடன் பிசினஸ் பார்த்துக் கொண்டிருந்த சந்திரசேகரன், கணக்கு வழக்கு மாத்திரம் தன் வாழ்க்கையாக இருந்துவிட முடியாது எனத் தீர்மானித்திருக்க வேண்டும். அவருக்குள் குறுக்கும் நெடுக்குமாக மின்னலாக ஓடிக் கொண்டிருந்த வேகமும் எழுச்சியும் அவரை ஓரிடத்தில் கட்டிப்போட்டு வைத்திருக்கவும் விடாது. அக்காலத்தில் அவர் தமிழரசுக் கட்சியின் ஏடான சுதந்திரனில் எழுதிக்கொண்டிருந்தார். இந்தக் கட்டுரைகளை வாசித்துப் பார்த்த செளமிய மூர்த்தி தொண்டமான், ‘நம்ம தலவாக்கலை பொடியன் தெளிவான சிந்தனையுடன் எழுதுகிறானே!’ என வியந்தார். அந்தப் பையனை அழைத்து, ‘ஏன் நீ இ. தொ. காவில் இணைந்து கொள்ளக்கூடாது?’ எனக் கேட்டதோடு அவரை இ. தொ. காவில் சேர்த்துக்கொள்ளவும் செய்தார். அவரது தொழிற்சங்க மற்றும் அரசியல் பிரவேசம் இப்படித்தான் ஆரம்பித்தது. தலவாக்கலை - அகரபத்தனை பகுதிக்கான அரசியல் பிரிவு பொறுப்பாளர் பதவியையும் 21 வயதான அந்த இளைஞனிடம் ஒப்படைக்கவும் செய்தார். இதன்பின்னர் தலவாக்கலை நகர சபை உறுப்பினராகத் தெரிவானார். நுவரெலியா மாவட்டத் சபைத் தேர்தலில் போட்டியிட்டு அச் சபையின் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். தொழிற் சங்கம், பாராளுமன்றத்தில் நியமன எம்.பியாக அமர்ந்திருத்தல் ஆகியவற்றுக்கு அப்பால் மலையக மக்கள் சிந்திக்க வேண்டும் அரசியல் உரிமை பற்றி அவர்கள் பேச வேண்டும், போராட வேண்டும். அரசியல் உரிமை பெறாமல் மலையக மக்கள் எதையுமே சாதிக்கப் போவதில்லை என்ற சிந்தனையை நெடுஞ்செழியனுக் குப் பிறகு மலையகத்தில் இருந்து வெளிப்படுத்திய புரட்சி வீரனாகவே சந்திரசேகரனைக் கருத வேண்டும்.< சந்திரசேகரனின் வேகத்துக்கு இ. தொ. காவினால் தீனிபோட முடியாது என்ற நிலையில் இ. தொ. காவை விட்டு அவர் விலகினார். 1989ம் ஆண்டு மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். காதர், தர்மலிங்கம், லோரன்ஸ், சரத், விஜயகுமார், மு. சிவலிங்கம் என படித்த, இளமை வேகமும் இனப் பற்றும் கொண்ட இளைஞர்கள் இக் கட்சியை அமைக்கவும் தோள் கொடுக்கவும் முன்வந்தார்கள். இதற்கு முன்னர் இலங்கை தி. மு. க.வை எழுச்சியுடன் நடத்தி வந்த தோழர் இளஞ்செழியன்தான் மலையக சமூக பொறுப்புணர்வையும், மாற்றுச் சிந்தனையையும், அரசியல் தீர்வு தொடர்பான சிந்தனையையும் ஊட்டியவர். அவருக்குப் பின் இதே சிந்தனைகளை உருவாக்கி படித்த மலையக இளைஞர்களையும், தொழில் செய்யும் இளைய சமூகத்தையும் தன்னைச் சுற்றி அணி திரளச் செய்தவர் சந்திரசேகரன் மட்டுமே. கல்லைக் கலைப் பொருளாக்குவான் சிற்பி என்பார்கள். மலையக இளைஞர்களை அரசியல் சிந்தனையும், சமூக உணர்வும் கொண்டவர்களாக அவர் புடம்போட்டதால், தமது தொழில்களைத் துறந்து கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற ஏராளமான இளைஞர்கள் முன்வந்தனர். மலையகத்தின் பொருள் பொதிந்த எழுச்சிக்கு இது அடையாளமாகத் திகழ்ந்தது. இ. தொ. கா. வுக்கு மாற்றாக ஒரு அறிவுபூர்வமான மாற்றுக் கட்சியாக ம. ம. மு. மிளிரும் என்ற பரவலான எதிர்பார்ப்பு மலையகத்தில் உருவாகியது. ‘தனிப்பட்ட ரீதியில் இவர் மிகவும் இனியவர். கடிந்துகொள்ள மாட்டார். இன்றைய மலையகத் தலைவர்களை எடுத்துக் கொண்டால் எந்தச் சமயத்திலும் தொழிலாளர்களும் தொண்டர்களும் சந்திக்கக்கூடிய தலைவராக இவர் விளங்கினார். ஒருவர் தன் பிரச்சினையைச் சொன்னால் அமைதியாக அதைக் கேட்பார். அதைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பார். அர்ப்பணிப்புடன் செயல்படுவார்’ என்று இவரது இயல்புகள் பற்றிக் குறப்பிடுகிறார் லோரன்ஸ். இவர் ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தார். எவருமே இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது என்பது ம. ம. மு. வின் கொள்கையாக இருந்தது. இது உங்கள் நாடு. நீங்கள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள். இந்தத் தாய் நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று தொழிலாளர்களிடம் கேள்வி எழுப்பிய இவர், இங்கே உரிமையுடன் வாழ்வதற்காகப் போராடுவது நமது உரிமை என்றார். இந்திய கடவுச் சீட்டு வைத்திருந்த தொழிலாளர் குடும்பங்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அன்றைய அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தீவிரமாக இருந்த போது மலையக மக்கள் முன்னணி அதைக் கடுமையாக எதிர்த்தது- ‘இதை எதிர்த்து தலவாக்கலையில் நாங்கள் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தோம். அந்தப் பேரணியில் பத்தாயிரம் இந்திய கடவுச் சீட்டுகளை கிழித்துப் போட்டு தீயிட ஏற்பாடு செய்திருந்தோம். இதைக் கேள்விப்பட்ட சந்திரசேகரன் மகிழ்ந்துபோய் தானே இதை முன்நின்று செய்வேன் என்று கூறினார். அவர் ஆணையிடும் தலைவராக இருக்கவில்லை. அந்த பேரணியில் கலந்துகொண்டு கடவுச் சீட்டுக்களைக் கிழித்து தீயிட்டுக் கொளுத்துவதில் முன்நின்று நடத்தினார்’ என்று நினைவுகூர்கிறார் ம. ம. மு. வின் முன்னாள் பொதுச் செயலாளரும் படைப்பாளருமான மு. சிவலிங்கம். இதன் எதிரொளியாகத்தான், இத்தகைய அழுத்தங்கள் மக்களிடம் இருந்து கிளம்பியதால்தான் மலையக மக்களுக்கு வாக்குரிமையையும் குடியுரிமையையும் வழங்க அன்றைய ஐ. தே. க. அரசு முன்வந்தது என்கிறார் மு. சிவலிங்கம். தமிழர்கள் செறிந்து வாழும் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி போன்ற பகுதிகளில் தமிழ் மக்களுக்கென பிரதேச செயலகங்கள் வேண்டும். பின்னர் இவை பிரதேச சபைகளாக மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து 20 செயலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். இந்திய – பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அல்லது அச் சட்டத்தை முற்றாக விலக்கிக் கொள்வதன் மூலம் தேசிய குடிகள், வந்தேறு குடிகள் என்றிருக்கும் பாகுபாட்டை முற்றாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.< “இனப் பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும்போது மலையக மக்களுக்கு தனி அலகு அவசியம்; அது நிலத் தொடர்பற்ற அதிகார அலகாக வரையறை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ம. ம. மு. வினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளே.’ இவ்வாறு கட்சிக் கொள்கைகள் சித்தாந்த ரீதியாக முடிவு செய்யப்பட்டு இலக்குகளாக முன்வைக்கப்பட்டதால் தலைவரும் சரி அவரது தளபதிகளும் சரி எங்கே பேசினாலும் அப்பேச்சுகள் அனைத்தும் ஒரே மாதிரியானவையாக இருந்தன. முரண்பாடுகள் எழவில்லை” என்கிறார் லோரன்ஸ். “நாங்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். சந்திரசேகரன் அவற்றில் முன்னணியில் நிற்பார். இது எங்களுக்கெல்லாம் புத்துணர்ச்சியைத் தந்தது. துடிப்புடன் செயலாற்றச் செய்தது. பொலிஸ் கெடுபிடி அதிகம் என்றால் தரையில் அமர்ந்து கொள்வோம் என்று கூறி முதல் ஆளாக தெருவில் அமர்ந்து கொள்வார்” என்று சிவலிங்கம் கூறியபோது, சந்திரிகா அரசு காலப் பகுதியில் ஐ. தே. க. கொழும்பில் நடத்திய ஒரு பேரணியில் சந்திரசேகரன் துணிச்சலாகக் கலந்துகொணடு தனி நபராக பொலிஸாரை எதிர்த்து நின்றதை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் நினைவுக்கு வந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்தது. தோட்ட மின்சாரத் திட்டத்தின் கீழ் மட்டகல தோட்டமொன்றுக்கு முதல் தடவையாக மின்சாரம் வழங்கியது. தோட்ட உட்கட்டமைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தது என்று சந்திரசேகரனின் குறிப்பிடத்தக்க பணிகளைப் பட்டியலிட்டுச் சொல்லலாம். இவர் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பிப்பதற்கு முன்னர் புளொட் இயக்கத்தின் வேட்பாளராக நங்கூரம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு 11 ஆயிரம் வாக்குகளைப் பெற்றதை இங்கே குறிப்பிட வேண்டும். கொழும்பில் கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்திய வரதனுக்கு அபயமளித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டிருந்தபோது, 1993ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு இவர் அத்தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால் அவர் சத்தியப் பிரமாணம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. பின்னர் 1994ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சிறையில் இருந்து வெளியே வந்திருந்த சந்திரசேகரன் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரது அந்த ஒரு ஆசனமே சந்திரிகா பண்டாரநாயக்கா அமைத்த அரசாங்கத்தை கவிழ்ந்துவிடாமல் காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் நிகழ்வு. மலையகத்துக்கென ஒரு அரசியல் தூர நோக்கும், அரசியல் செயல் திட்டங்களும் கொண்டு இளைஞர்களையும் தொண்டர்களையும் கட்டுக்கோப்பாக இயக்கியதால் இலங்கை தேசிய கட்சிகளை மட்டுமின்றி இந்தியாவையும் உற்றுக் கவனிக்கச் செய்த ஒரு தலைவன் மிக இளைய வயதில் காலமாகியிருக்கிறார். எனினும் பிற்காலத்தில் இக்கட்சியில் ஒரு தளர்ச்சியும் அயர்ச்சியும் காணப்பட்டதும் மக்களில் இருந்து அந்நியப்பட்டுப் போனதும் பல சறுக்கல்களில் சிலவாக அமைந்தன.
க்கச் செய்யும், விழிப்பூட்டும் மற்றும் கொள்கைப் பற்றுக் கொண்ட கட்சியாகத் தொடர்ந்தும் திகழ வேண்டிய அவசியம் அப்படியே இருப்பதால் கட்சியை விட்டு அகன்ற மூத்த உறுப்பினர்கள் மற்றும் கொள்கைப் பற்று கொண்டவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து கட்சியை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதுவே அதன் நிறுவனருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். கட்சியை பெருக்கி சுத்தம் செய்து புது இரத்தம் பாய்ச்சி பழைய வேகத்துடன் கட்சி செயல்படும் நந்நாளுக்காக மலையக மக்கள் - இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்
0 commentaires :
Post a Comment