1/15/2010

ஹெய்ட்டி பூகம்பத்தில் சுமார் ஓர் இலட்சம் பேர் பலி; இடிபாடுகளுக்குள் அவலக்குரல்கள்

ஹெய்ட்டியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தில் ஒரு இலட்சம் பேர் மரணமடைந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை ஹெய்ட்டியில் 7.3 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. மாலை நேரமானபடியால் அலுவலகங்கள்.

வணிக நிலையங்களிலிருந்தோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தலைநகர் உட்பட ஹெய்ட்டியின் முக்கிய இடங்கள் இப்பூகம்பத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்ப ட்டன. கோடிக்கணக்கான டொலர் பெறுமதியான சொத்துக்கள் இதனால் நாசமடைந்தன.

ஆயிரக்கணக்கில் கட்டடங்கள் இடிந்து விழுந்த தால் பாதை முழுவதும் இடிபாடுகளால் சூழப் பட்டது. இதனால் தரைமார்க்கமான போக்குவரத்துகள் தடைப்பட்டன. காயமடைந்தோர் இடிபாடுகளுக்குள்ளும் இரத்த வெள்ளத்திலும் சிக்கிக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்பினர். வீதியெங்கும் காயமடைந்தோர் கிடத்தி வைக்கப்பட்டனர்.

மீட்புப் பணிகள் முற்றாக நிறைவடைந்த பின்னரே ஓட்டுமொத்தமான இழப்பீடுகளை மதிப்பிட முடியுமென அறிவித்துள்ள அரசாங்கம் ஐம்பாதாயிரம் பேர் வரை பலியானதாகத் தெரிவித்தது.

ஹெய்ட்டியில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தம் தொடர்பாக உலக நாடுகள் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ள துடன் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் முன்வந்துள்ளன.

தொண்டர் நிறுவனங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்பதில் மும்முரமாகச் செயற்பட்டுள்ள போதும் தொலைபேசிகள் செயலிழந்தமை, மின்சாரம் துண்டிக்கப்பட்டமை போன்ற காரணங்களால் மீட்புப்பணிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

ஹெய்ட்டின் நிலைமை சம்பந்தமாக ஆராயவென அவசரமாக கூடிய ஐ. நா. உதவியாளர் குழுக்களை ஹெய்ட்டிக்கு அனுப்பவும் உணவு, உடை தங்குமிட வசதிகளைச் செய்யவும் விசேட ஏற்பாடுகளை செய்தது. ஹெலிகொப்டர்கள், கப்பல்கள் என்பவற்றை அமெரிக்கா ஹெய்ட்டிக்கு அனுப்பியுள்ளது.

பிரிட்டன், கனடா, ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் மீட்புப் பணியாளர்களை ஹெய்ட்டிக்கு அனுப்பியுள்ளன.




0 commentaires :

Post a Comment