1/03/2010

யோகராஜன், சச்சி ஆகியோரின் வெளியேற்றத்தால் பாதிப்பில்லை-ஆறுமுகன்

மலையகத்தில் பெருந்தொகையான வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கும். இது உறுதி


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான ஆர். யோகராஜன் மற்றும் பிரதி அமைச்சரான எம்.சச்சிதானந்தன் ஆகியோரின் வெளியேற்றத்தால் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்குழு கூடி ஆராயந்து முடிவெடுத்த போது சத்தமின்றி இருந்துவிட்டு தற்பொழுது புதுப்புதுக் கதைகளை கூறுவதானது வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம் என்பது போன்றுள்ளது. எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று இளைஞர் வலுவூட்டல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்துக் கூறுகையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு ஆலமரம் போன்றது. அது எமது மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானுடைய காலம் தொட்டு ஒரு கட்டுக்கோப்புடன் இருந்து வருகிறது. எனவே, அவ்வாறான எமது கட்சி ஒரு முடிவை எடுத்தால் அதில் உறுதியுடன் இருக்கும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூடி ஆராய்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளது. அவரை ஆதரிப்பதற்குவிருப்பமில்லையென்றால் அல்லது இ.தொ.கா.வின் செயற்பாடுகள் சரியில்லை என்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்னர் இவர்கள் வெளியேறியிருக்கலாம். ஆனால், இவர்கள் அப்படி செய்யாமல் , தற்பொழுது திடீரென விலகியிருக்கிறார்கள். இதைப்பற்றி நான் என்ன சொல்வது அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

வெளியேறிய அந்த இரண்டு உறுப்பினர்களையும் கடைசி வரை நாம் நம்பியிருந்தோம். அவர்கள் திடீரென இப்படி செய்திருப்பதானது அவர்களுடைய சுயநலத்திற்காகவிருக்கலாம். ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்னர் அரசாங்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் யோகராஜன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து பேசியிருந்தார்.

ஆனால், தற்பொழுது திடீரென ஜனநாயகமில்லை. இ.தொ.கா.வால் பெருந்தோட்ட பிள்ளைகளுக்கு வாய்ப்பில்லை. அப்படி இப்படியென பேசுகின்றார்கள். இவர்களைபோல எடுத்த முடிவை அடிக்கடி மாற்றுவதற்கு நாம் தயாரில்லை. நாங்கள் எடுத்த முடிவில் நாம் உறுதியாக உள்ளோம்.

ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 10250 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். அவர்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். மலையக பகுதிகளில் சுகாதாரம் போன்ற பலதுறைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என்றெல்லாம் கூறுகிறார். இவையெல்லாம் வென்றால் செய்வதாகத்தான் ஜெனரல் சரத் பொன்சேகா கூறுகின்றார்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அப்படியல்ல. பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து காட்டிவிட்டுத்தான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். கண்முன் அவர் செய்துள்ள வேலைகளை நாம் பார்க்கின்றோம். ஆகையாலேயே நாம் அவருக்கு ஆதரவு வழங்குகின்றோம். மலையகத்தில் பெருந்தொகையான வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்கும். இது உறுதி ஏனென்றால் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்தளவு சேவைகளை கடந்த நான்கு வருடங்களில் அவர் செய்திருக்கின்றார்.

அது ஒருபுறமிருக்க பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாத சம்பளத்தை 10250 ரூபாவாக அதிகரிப்பதாக அவர் கூறியிருக்கின்றார். தற்பொழுது தொழிலாளர் ஒருவர் நாளொன்றுக்கு 405 ரூபாய் சம்பளம் பெறுகின்றார். எனவே, மாதத்தில் 25 நாட்கள் அவர்கள் வேலை செய்தால் அவர்கள் இந்த தொகையை விட பெற்றுக்கொள்வார்கள்.

எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த நான்கு வருடங்களில் எமது மக்களுக்கு செய்திருக்கின்ற வேலைகளை பார்க்கின்றபோது அவரை ஆதரிப்பதே சிறந்தது என நாம் நினைக்கின்றோம். அதன் அடிப்படையிலேயே நாம் ஆதரவினை வழங்குகின்றோம் எனவும் அவர் கூறினார்.



0 commentaires :

Post a Comment