துப்பாக்கிக் கலாசாரத்திற்கு நாட்டை மீண்டும் இட்டுச் செல்லாமல் இதனை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மட்டக்களப்பு நகரில் மகாத்மா காந்தி சிலையருகில் நடைபெற்றது.
அமைச்சர்களான ஏ. எல். எம். அதாவுல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், எம். எஸ். எஸ். அமீரலி, எஸ். பி. திசாநாயக்க, கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
மீன்பாடும் தேன் நாட்டில் கடந்த 30 வருடங்களாக மீன்கள் பாடுவதில்லை. யுத்தம் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1970ம் ஆண்டில் நான் நீதிமன்ற கடமைகளுக்காக மட்டு நகருக்கு வந்துள்ளேன். அப்போது இரவிரவாக விழிந்திருந்து மீன்கள் பாடுவதைக் கேட்க ஆவலுற்றமை இப்போதும் நினைவில் உள்ளது.
நான் கடந்த இரு தினங்களாக யாழ்ப்பாணம், மன்னார் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்தேன்.
யாழ். துரையப்பா விளையாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பாரிய ஜனத்திரள் என்னை வரவேற்றதைக் கண்டு நான் மகிழ்ந்தேன். அவர்களின் உற்சாகம் கண்டு நான் வியப்படைந்தேன்.
கொடூர யுத்தம் காரணமாக ஏராளமானோர் பலியாகியதுடன் குடும்பங்கள் பிரிந்து பல பெண்கள் விதவைகளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற விசேட திட்டமொன்றை நாம் நடைமுறைப்படுத்தவுள்ளோம். அவர்களை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவு ள்ளோம். இன்று கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இப்பிரதேச மக்களை அதன் பங்காளிகளாக்குவதற்குத் தயாராக வேண்டும். நான் பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவனல்ல. உங்கள் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. நாம் சொல்வதை செய்வோம். நீங்களும் எம்மை முழுமையாக நம்பலாம்.
இன, மத, ரீதியான அரசியல் நோக்கங்கள் இனித் தேவையில்லை. இன, மத, குல பேதம் இல்லை. சிறுபான்மை என்ற பேச்சுக்களுக்கும் இனி இடமில்லை. மக்களின் கஷ்டகாலம் நீங்கிவிட்டது. வளமான எதிர்காலத்திற்காக நாம் உழைக்க வேண்டும். இந்நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது எனது பொறுப்பு.
இப்பிரதேச விவசாயிகளின் நலன்களில் நாம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். அதேபோன்று மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுப்போம். இப்பிரதேச பட்டதாரிகள் படித்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக் கவும் உரிய நடவடிக்கை எடுப்போம்.
மண்முனைப் பாலம் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் படுவான்கரை மக்கள் பெரும் நன்மை அடைவர். இப்பகுதி இளைஞர் யுவதிகளும் ஆங்கில அறிவினைப் பெற்றால் அவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment