1/01/2010

கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி


மலர்கின்ற புதுவருடமானது அனைத்து மனித உள்ளங்களிலும் மனிதநேயத்தையும், அன்பையும் விதைக்கட்டும் என்று வாழ்த்தியவனாக எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றேன். விடைபெற்று சென்ற ஆண்டில் நிறைகுறைகள் பல கண்டாலும், மலர்ந்திருக்கின்ற புத்தாண்டானது புதுமைகள் படைத்து, மாற்றம் ஏற்படுத்த வேண்டி உள்ளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, குறிப்பாக இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் உள்ளங்களில் அச்சத்தினை நிரந்தரமாக போக்கி, முழுநாட்டிற்கும் உண்மையான சமாதானத்தையும் அபிவிருத்தியினையும் தரவேண்டும் என்பதே எனது உளப்பூர்வமான அவாவாகும்.

மற்றைய வருடங்களையும்விட இவ்வருடமானது இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் முக்கியமான காலப்பகுதியாகும். மக்களின் பெயரால் ஒரு சாராரினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுத வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கான தமது அரசியல் பேரம் பேசும் சக்தியின் யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டிய காலம் இதுவாகும். இவ்வேளையில்தான் எமது நாட்டின் முக்கியத்துவம் மிக்க ஜனாதிபதி தேர்தலும் ஜனவரி 26ம் திகதி நடைபெற உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான சிறந்த வழியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நடைபெற உள்ள தேர்தல்களில் சிறுபான்மை மக்கள் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளமை எமக்கு கிடைத்த ஓர் மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் இரண்டையும் தமது பேரம் பேசும் சக்தியின் ஊடாக வென்றெடுத்து அரசியல் அபிலாசைகளையும் அதிகாரப்பகிர்வினையும் பெற்றுக்கொள்வதற்கான சிறந்த திருப்பமாக பயன்படுத்தி கொள்வேண்டும்.

இது தொடர்பில் அனைத்து சிறுபான்மை இன மக்களின் உள்ளங்களில் தெளிவான அரசியல் சிந்தனைகளும் கருத்தூட்டல்களும் நிலைபெற வேண்டும் என இப்புதிய ஆண்டில் முதல் தினத்தில் நான் பிரார்த்திக்கின்றேன். அதே போன்று சிறுபான்மை சமுகங்களின்பால் உள்ள சுயநலம் மிகுந்த கொள்கைப்பிடிப்பாளர்களும் மனம் திருந்தி, மக்களுக்காக தமது அரசியல் பாதையினை மாற்றிக் கொள்ளவேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன். மலர்கின்ற இப்புத்தாண்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டாக அமைய மீண்டும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

முதலமைச்சர்,
கிழக்கு மாகாணம்




0 commentaires :

Post a Comment