12/20/2009
| 0 commentaires |
தமிழ் மக்களின் அவலத்துக்கு சிவாஜpலிங்கமும் பொறுப்பாளி
டொனமூர் அரசியலமைப்பின் கீழ் முதலாவது சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது யாழ்ப்பாணத்தில் ஒருவரும் போட்டியிடவில்லை. தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாகவே தேர்தல் பகிஷ்கரிப்பு இடம்பெற்றது. பிற்காலத்தில் நல்ல முற்போக்குச் சிந்தனையாளர்களாக விளங்கிய பலர் அப்போது வாலிபர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களாக இருந்தனர். தேர்தலைப் பகிஷ்கரித்ததன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. வாலிபர் காங்கிரஸ் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. இறுதியில் எப்படியாவது தேர்தலை வைக்கப்பண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. பல அமைப்புகள் விடுத்த வேண்டுகோளின் பேரில் யாழ்ப்பாணத்தில் எல்லாத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலைப் பகிஷ்கரிப்பது பிழையான முடிவு என்பதற்கு இது ஒரு உதாரணம். இப்போதைய ஜனாதிபதித் தேர்தலையும் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழாமலில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் ஒரு சாரார் பகிஷ்கரிப்பை வலியுறுத்தினார்கள். ஆனால் பகிஷ்கரிப்பதில்லை என்று கூட்டமைப்பு சரியான முடிவை எடுத்தது. ஒரு வேட்பாளரை நிறுத்துவதில்லை என்றும் கூட்டமைப்பு முடிவு செய்தது. தனியான வேட்பாளரை நிறுத்துவது பகிஷ்கரிப்பதைப் போன்றதே. பகிஷ்கரிப்பதன் மூலம் வாக்குகள் பயனற்றுப் போகின்றன. வெற்றியை நினைத்தும் பார்க்க முடியாத வேட்பாளருக்கு அளிப்பதன் மூலமும் வாக்குகள் பயனற்றுப் போகின்றன கூட்டமைப்பின் முடிவுக்கு மாறாகக் கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் போட்டியிடுகின்றார். இவர் போட்டியிடுவதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமென்றால் அவர் போட்டியிடுவதில் நியாயம் உண்டு. இவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரப் போவதில்லை. பதவியிலுள்ள ஜனாதிபதி யாராக இருந்தாலும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். தீர்வுக்குச் சாதகமானவர் யார் என்பதை ஆராய்ந்தறிந்து அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வகையில் செயற்படுவதன் மூலமே தமிழ் மக்கள் தங்கள் நலன்களை உறுதிப்படுத்த முடியும். தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் யார் என்ற ஆராய்ச்சியிலும் பார்க்க இப்போது தமிழ் மக்களுக்குத் தேவை என்ன என்பதே முக்கியமானது. தமிழ் மக்களின் இப்போதைய தேவை இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் தொடராமல் தவிர்ப்பது. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்துவது. பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் யார் என்று ஆராயப் போனால் சிவாஜிலிங்கமும் குற்றவாளிக் கூண்டுக்கு வருகிறார். தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறுகளே தமிழ் மக்களின் இன்றைய அவலத்துக்குக் காரணம். சிவாஜிலிங்கமும் அவர்களில் ஒருவர்.
0 commentaires :
Post a Comment