“மக்களினது வரிப்பணத்தினை ஊதியமாக பெறுகின்ற நாம் அவர்களின் தேவைகளை இனம் கண்டு சரியான முறையில் சேவையினை வழங்க வேண்டும்”-உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளிடம் முதலமைச்சர் வேண்டுகோள்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ளுராட்சி மன்றங்களின் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்யும் செயலமர்வு கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுதலின் பேரில் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்று வருகின்றது. கடந்த 3.12.2009 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்யும் செயலமர்வு மட்டக்களப்பு உள்ளுராட்சி திணைக்கள காரியாலயத்தில் இடம் பெற்றது. இன்று (09.12.2009) திருமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வேலைத்தட்டங்கள் தொடர்பான மீளாய்வு செயலமர்வு முதலமைச்சர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் இதுவரை உள்ளுராட்சி மற்றும் நகரசபை தாம் மேற்கொண்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மற்றும் பெற்றுக்கொண்ட நிதிமூலங்கள் தொடர்பாகவும் இதுவரை முடிவு பெறாமல் இருக்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும் திருமலை உள்ளுராட்சி மன்றங்களுக்காக மொத்தமாக கிட்டத்தட்ட 57 மில்லியன் ரூபாய் அபிவிருத்தி வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் CBG-24 மில்லியன் ரூபாயும் PSDG-14 மில்லியன் ரூபாயும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒதுக்கீட்டின் மூலம் 6.69 மில்லயன் ரூபாயும் கமநெகும வேலைத்திட்டற்காக 12.24 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் நிதியினூடாக திருமலை மாவட்டத்தில் மொத்தமாக 285 வேலைத்திட்டங்கள் செய்ய வேண்டி உள்ளது ஆனால் தற்போது 64 வேலைத்திட்டத்திட்டம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாகாண உள்ளுராட்சி அமைச்சரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் உள்ளுராட்சி மன்றங்களுள் மக்களின் அதிக தேவைகள் பூர்த்தி செய்கின்ற ஓர் அமைப்பாக காணப்படுகின்றது. இலகுவாக மக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவித்து பலன் பெறக்கூடிய ஓர் இடமாக உள்ளுராட்சி மன்றம் நகராட்சி மன்றங்களே விளங்குகின்றது. மக்களினது வரிப்பணத்தினை ஊதியமாக பெறுகின்ற நாம் அவர்களின் தேவைகளை இனம் கண்டு சரியான முறையில் எமது சேவையினை உள்ளுராட்சி மன்றங்கள் வழங்க வேண்டும் இதற்கு தவிசாளர்கள் செயலாளர்கள், மற்றும் அங்கு கடமையாற்றும் அதிகாரிகள் ஆகியோர் அற்பணிப்போடும் சேவையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
0 commentaires :
Post a Comment