தேசிய போராட்டம் எதிர்கொள்ளும் இறுதி சவாலை சந்திக்கின்ற தருணமிது. பிரபாகரன் ஆயுதம் மூலம் செய்ய முடியாமற் போனதை டொலர்களினால் சாதிக்க முற்படும் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றி இலங்கை மாதாவின் பிள்ளைகளாக அச்சமின்றி சகலரும் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து செயற்படுவது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்க சில சக்திகள் முயல்கின்றன. இதனை நாட்டு மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். நம்மை விட நம் தாய் நாட்டை நேசிப்பவர்களாக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
தேசிய இணக்கச் சபை தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் அனுஷ்டிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியிலிருந்து இணக்கச் சபைகளின் உறுப்பினர்கள் 4,000 க்கும் மேற்பட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புலிகளுக்குக் கப்பம், வரிகளைச் செலுத்திய காலமும், பாதாள உலக அச்சுறுத்தல் மற்றும் போதை காரணமாக விளைந்த பாதிப்புகளையும் எம்மால் முடிவுக்குக் கொண்டு வர முடிந்துள்ளது.
சட்டத்தை மதிக்கின்ற சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப தேவையான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். மக்கள் நலன் கருதிய தீர்மானங்களை எச்சந்தர்ப்பத்திலும் நாம் மாற்றத் தயாரில்லை.
இது தேர்தலுக்காகவோ அல்லது எமது அதிகாரத்திற்காகவோ எடுக்கும் தீர்மானமல்ல நாட்டு மக்களின் நலனைக் கொண்டது.
கல அரசியல் கட்சிகளும் எமது அமைச்சரவையில் உள்ளன. நாம் ஒருபோதும் அரசியல் பலிவாங்கலில் ஈடுபடுபவர்களல்லர். எந்த செயற்பாடுகளிலும் நகரம் - கிராமம் என்ற பேதத்துடன் செயற்படுபவர்களில்லை. நாம் அனைவரும் ஒரே நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எமக்கு வர வேண்டும்.
இதற்கு சமூகத்திலுள்ள அரசியல் வைராக்கியத்தை இல்லாதொழிக்க வேண்டும். தாய் நாட்டைப் பாதுகாத்து ஐக்கியப்படுத்துவதில் இணைந்து செயற்பட்டது போல் அச்சம் - சந்தேகமற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் நாம் கைகோர்த்துச் செயற்படுவோமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
0 commentaires :
Post a Comment