இலங்கையின் ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கவே ஐ.தே.க. - ஜே.வி.பி கூட்டு சரத் பொன்சேகாவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டியூ குணசேகர நேற்றுத் தெரிவித்தார். எந்த விதத்திலும் ஒத்துச் செல்ல முடியாத ஐ.தே.கவும், ஜே. வி. பியும் கூட்டுச் சேர்ந்திருப்பது ஜனநாயகத்தைப் பெற்றுத் தரவோ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ அல்ல. மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்தும் உரையாற் றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் முடிவுறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தொடக்கம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வெளிநாடுகள் யுத்தத்தை நிறுத்தும்படி கடுமையாக அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்த அழுத்தங்களுக்கு தலை சாய்க்காது எமது ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினார். இந்த சமயத்தில் மூன்றாம் மண்டல நாடுகள் தான் எமக்கு பக்கபலமாக இருந்தன. மேற்குலக நாடுகள் எமக்கு உதவிகள் நல்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்திருப்பதால் வோஷிங்டனின் இணக்கப்பாட்டுடன் சரத் பொன்சேகாவை எதிரணி அபேட்சகராக கொண்டு வந்துள்ளனர். இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதிர்கொள்ளுகின்ற மிக மோசமான அரசியல் சூழ்ச்சியே இது. வெளிநாட்டு சதியாளர்களின் தேவையை நிறைவேற்றவே ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டு இந்த சூழ்ச்சியில் பங்காளியாகியுள்ளது. எதிரணி அபேட்சகர் இராணுவத்தில் 40 வருட காலம் சேவையாற்றியவர். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அதனால் அவரது அரசியல் பிரவேசம் இந்நாட்டு ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாகும். யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்தில் சரத் பொன்சேகா இராணுவத்திற்கு ஒரு இலட்சம் பேரைத் திரட்ட வேண்டும். முப்படைகளுக்கும் கட்டளை இடக்கூடிய அதிகாரம் தமக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இது அவரது உள்நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றது. இதனால் இந்நாட்டின் ஜனநாயக அரசியல் இராணுவ மயமாகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. |
12/12/2009
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment