12/27/2009

வவுனியாவில் 32 சிறுவர் போராளிகள் விடுதலை


வவுனியாவில் சிறுவர் போராளிகளில் 32 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தத் தகவலை, சிறுவர் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்கா தெரிவித்திருக்கின்றார். வவுனியா பூந்தோட்டம் பகுதியில் செயற்பட்டு வருகின்ற சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இவர்களுக்குப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புனர்வாழ்வு நிலையத்தை ஒரு தடுப்பு முகாமாகத் தாங்கள் கருதவில்லை என்றும், அது ஒரு பாடசாலையாகவே இயங்கி வருகின்றது என்றும் விடுதலை பெற்றுள்ள சிறுவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கல்வி கற்பதற்கும், தொழில் பயிற்சி பெறுவதற்கும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இங்கு வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

இந்தச் சிறுவர்களின் விடுதலை குறித்து கருத்து வெளியிட்ட அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க அவர்கள், எஞ்சியுள்ள சிறுவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment