11/05/2009

துணுக்காய், முழங்காவில் பிரதேசங்களுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம் ‘நான் உங்கள் சொந்தக்காரன்:’ மக்களுடன் தமிழில் உரையாடினார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய்க்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முழங்காவிலுக்கும் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.
துணுக்காய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் வைத்து மனிதாபிமான நடவடிக்கைக்குப் பங்களித்த முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட படை வீரர்களை சந்தித்த ஜனாதிபதி முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் விஜயம் செய்தார்.
துணுக்காய் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு வரும் பெருந்திரளான மக்களை துணுக்காய் 65 ஆவது படைப் பிரிவு தலைமையத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். மேடைக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு கட்டளையிடும் தளபதிகள், முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மீள்குடியேற்றப்படும் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி தனது உரை முடிவடைந்த பின்னர் அவர்களின் அருகில் சென்று மக்களுடன் சுமுகமாக உரையாடினார்.

மக்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்தத் தேசத்தை மீண்டும் ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். ‘நான் உங்களின் தோழன்; சொந்தக்காரன்; நீங்கள் என்னை நம்பலாம்; உங்களுக்கு சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறினார். மேலும் உரையாற்றிய ஜனாதிபதி
உங்களை மீளக் குடியமர்த்துவது போல ஏனைய மக்களையும் விரைவில் குடியமர்த்த உள்ளோம். அதற்காக முதலில் மிதிவெடிகளை அகற்ற வேண்டும். அந்தப்பணியை துரிதமாக பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்
நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த கஷ்டங்களை நான் நன்கு அறிவேன். பயங்கரவாதிகள் உங்களை தவறான பாதையில் இட்டுச் சென்றனர். அதனால் நீங்கள் அங்கும் இங்குமாக கஷ்டப்பட நேரிட்டது. எமது மக்களுக்கு சொந்த நாட்டிற்குள் அகதிகளாக இடம்பெயர நேரிட்டது.

இது எமது நாடு. இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒரே தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டும். இங்கு இன, மத, குல, பிரதேச வேறுபாடு இருக்க முடியாது. எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம்.
இந்த நாட்டின் மீது அன்பு காட்டும் அனைவரும் இலங்கை மக்களே. நீங்கள் பணயக் கைதிகளாக்கப்பட்ட அந்த கஷ்ட காலம் இனி கிடையாது. புதிய வாழ்க்கை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த நாட்டில் வாழும் சகல மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.
அதனை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன். சகல மக்களும் பயம், சந்தேகம் இன்றி வாழவேண்டும். நீங்கள் சம உரிமையுடன் வாழும் சூழல் உருவாக்கப்படும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலைதூக்க இனியும் இடமளியோம்
வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக இதற்கு முன்பு காணாத அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இடம்பெயர்ந்த சகல மக்களுக்கும் நிச்சய மாக வீட்டு வசதி வழங்கப்படும். சகலருக்கும் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உருவாகும்
ங்கள் பிள்ளைகள் தான் உங்கள் சொத்து. அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். அதனூடாக அவர்கள் நாட்டில் முக்கிய பதவிகளை பெற வேண்டும்.
நீங்கள் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றார்.
அடுத்து முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி படைவீரர்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். சுமார் 4 ஆயிரம் படை வீரர்கள் இங்கு குழுமியிருந்தனர். அதனைத் தொடர்ந்து முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் ஜனாதிபதி விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.



0 commentaires :

Post a Comment