11/24/2009

வாகரையில் அத்துமீறிய குடியேற்றம் இல்லை - பிரதேச செயலாளர்


மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச அரச காணிகள் அபகரிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை என வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் வாகரை,கிரான்,பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் அரசகாணிகளில் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைகளை சமரப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை கோரியிருந்தது. இந்நிலையில், பா.அரியநேத்திரனின் புகாரில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் ராகுலநாயகி கடிதம் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார்.

அக் கடிதத்தில்,

"கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பனிச்சங்கேனி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சல்லித்தீவு கிராமத்தில் காணி அத்து மீறல்கள் எதுவும் நடைபெறவில்லை.

மேலும் இப் பகுதியில் சுனேலா ஜனவர்தனா தனியார் கம்பனியினால் உயிரியல் ஆய்வு மையம் அமைப்பதற்காக நீண்ட கால குத்தகையில் காணி கோரப்பட்டு மாகாண காணி ஆணையாளரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.அத்துடன் மாவட்ட காணி பயன்பாட்டுக் குழுவின் அனுமதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புச்சாக்கேனி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தோணிதாண்டமடு கிராமத்தில் எல்லை தொடர்பான பிரச்சினை உள்ள போதிலும் காணி அத்து மீறல்கள் எவையும் நடை பெறவில்லை என்பதை தங்களின் நடவடிக்கையின் பொருட்டு அறியத் தருகின்றேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 commentaires :

Post a Comment