கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பல்லாயிரக் கணக்கான காணிகள் ஐ.தே.க அரசாங்க காலத்திலேயே பலாத்காரமாக பறித்தெடுக்கப்பட்டன என்பதை மு.கா. செயலாளர் ஹசனலி பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூறியுள்ள நிலையில் மு.கா. ஐ.தே. கவுக்கு ஆதரவாக இருப்பது கிழக்கு முஸ்லிம்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகமாகும் என உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
ஐ. ம.சு. முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உலமா கட்சியிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க அதன் மாவட்ட தேர்தல் ஒருங் கிணைப்பாளர்களைத் தெரிவு செய்யும் உயர் சபைக் கூட்டத்தின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மு.கா செயலாளர் ஹசனலி அண்மையில் பராளுமன்றத்தில் உரையாற்றும்போது கிழக்கு மாகாண முஸ்லிம்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான காணிகள் பலாத்காரமாக புறக்கப்பட்டதாக விலாவாரியாக தெரிவித்திருந்தார். இத்தகைய காணிகளில் மிகப் பெரும்பாலானவை 1987ம் ஆண்டிலேயே பறிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனாலும் 1987ம் ஆண்டு இந்த நாட்டில் ஐ.தே. க அரசாங்கமே ஆட்சி செய்தது என்பதை ஏன் அவரால் பகிரங்கமாக சுட்டிக்காட்ட முடியாமல் போனது என்று நாம் கேட்க விரும்புகிறோம்.
அதேபோல் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நிந்தவூர் முஸ்லிம்களுக்கு 1959ம் ஆண்டிலிருந்து சொந்தமாகவுள்ள முல்லைத்தீவு கிராமத்திலுள்ள 11000 ஏக்கர் காணியை சீனிக் கூட்டுத்தாபனம் 1987ம் ஆண் பலாத்காரமாக பறித்தெடுத்ததாக ஹசனலி பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இதுவும் நடைபெற்றது ஐ.தே.க ஆட்சியின் இருண்ட யுகத்தில்தான் என்பதை அவரும் மு. காவினரும் மறந்து போய் விட்டார்களா அல்லது சமூகத்தை ஏமாற்ற முனைகிறார்களா.
1978 முதல் 94 வரை இந்த நாட்டில் ஆட்சி செய்த ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் பறிக்கப்பட்ட முஸ்லிம்களது காணிகள் எவை என்பதை மட்டும் தனியாக பிரித்து ஹசனலி போன்றவர்களால் பாராளுமன்றத்தில் பேச முடியுமா என நாம் சவால் விடுகின்றோம். அவ்வாறு பேசினால் அவர்களுக்கே புரியும் 98 வீதமான முஸ்லிம்களின் காணிகள் ஐ.தே.க ஆட்சிக் காலத்தில்தான் பறிபோயின என்பது.
இவ்வாறு பாரிய அநியாயங்களை முஸ்லிம்களுக்குச் செய்த ஐ.தே.கவுக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவது கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்குச் செய்யும் பாரிய துரோகமாகும் என முபாறக் மெளலவி தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment