
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னரே ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை, நான்கு வருட காலத்துக்குள் கூடுதலான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியமை, இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தியதில் ஈட்டிய சாதனை, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஆகியவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகிக்கவுள்ளன. எதிரணியின் பொது வேட்பாளர் எவராக இருந்தாலும் அவரது தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகிக்கப் போவது நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கும் விடயமாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது என்ற ஒற்றைக் கோரிக்கையின் அடிப்படையிலேயே எதிரணிக் கூட்டு அமைந்திருக்கின்றது. தங்கள் பொது வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டு ஆறு மாதத்துக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவார் என்று எதிரணித் தலைவர்கள் கூறுகின்றார்கள். இதைப் போன்ற ‘புலுடா’ வேறு எதுவும் இருக்க முடியாது. ஆரம்பத்திலேயே இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றார்கள். நிறைவேற்று ஜனாதிபதி முறை இன்றைய அரசியலமைப்பின் அடிப்படையான அம்சங்களுள் ஒன்று. ஜனாதிபதியினால் அதை மாற்ற முடியாது. பாராளுமன்றத்துக்கே அந்த அதிகாரம் உண்டு. அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற வேண்டும். அதன்பின் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இந்த நடைமுறைக்கூடாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க முடியும். பொது வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவார் என்று எதிரணித் தலைவர்கள் கூறுவது அப்பட்டமான ஏமாற்று வித்தை. ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றியீட்ட முடியும் என்ற இவர்களின் கற்பனையை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டு பார்த்தாலும், ஆறு மாதத்துக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இவர்களால் நீக்க முடியாது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்திலேயே முடிவடைகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடைபெறுவதும், புதிய பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்த மசோதா மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதும், அதன்பின் சர்வசன வாக்கெடுப்பு நடைபெறுவதும் இன்றிலிருந்து ஆறு மாத காலத்துக்குள் நடக்க முடியாதவை. ஆரம்பத்திலேயே மக்களை ஏமாமற்றுகின்றார்கள் எதிரணியின் பொது வேட்பாளர் யார் என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்படாத போதிலும், சரத் பொன்சேகாவே தங்கள் வேட்பாளர் என்று ரணில் கூறுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான ‘புள்ளிகள்’ பலர் இந்த முடிவை ஏற்கவில்லை. ஏற்காதவர்களில் சிலர் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்துச் செயற்குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறியிருக்கி ன்றார்கள். மற்றவர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். அவர்களும் தங்கள் எதிர்ப்பை ஏதோவொரு விதத்தில் வெளிப்படுத்தவே செய்வார்கள். செயற்குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறியவர்களில் கொழும்பு மாநகரின் முன்னாள் உதவி மேயர் அஸாத் சாலியும் ஒருவர். சரத் பொன்சேகா கடந்த காலங்களில் தெரிவித்த இனவாதக் கருத்துகளை விலாவாரியாக எடுத்துக்கூறியே அஸாத் சாலி தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார். தன்மானமுள்ள சிறுபான்மையினர் இவருக்கு எப்படி வாக்களிக்க முடியும் என்று கேள்வியும் எழுப்பியிருக்கின்றார். இந்தக் கேள்வி ரணிலின் மனதி லும் தோன்றியிருக்க வேண்டும். அதனால்தான் தமிழ் மக்களின் உரிமைகளுக்குத் தான் உத்தரவாதம் அளிப்பதாகக் கடந்த வியாழக் கிழமை கூறினார். இவரே தமிழ் மக்களின் உரிமைகளில் அக்கறை இல்லாதவர். இன்னொருவருக்காக இவர் உத்தரவாதம் அளிக்கிறார். இனப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சி நழுவல் போக்கையே பின்பற்றி வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் முழுக்க முழுக்கப் பேரினவாத நிலைப்பாட்டையும் எடுத்திருக்கின்றது. எவர் தலைவராக இருந்தாலும் இதுதான் நிலை. ரணிலும் நழுவல் போக்கையும் கடைப்பிடித்திருக்கின்றார். பேரினவாத நிலைப்பாட்டையும் எடுத்திருக்கின்றார் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததும் அத் தீர்வுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற முடியாத நிலையை ஏற்படுத்தியதும் ரணிலின் பேரினவாத முகம். அன்று ரணிலுக்குப் பின்னால் நின்றுகொண்டு இத்தீர்வுத் திட்டத்தை எரித்தவர்களும் கிழித்து எறிந்தவர்களும் தமிழினத்தின் துரோகிகள். அத்துரோகிகளுக்குத் தலைமை தாங்கியவர் ரணில். ரணிலின் நழுவல் போக்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தொடர்பானது. இக் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்றவில்லை. பங்குபற்றாமல் இருப்பதற்கு ரணில் கூறிய காரணங்கள் பொய்யானவை. நழுவல்தான் உண்மையான காரணம். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் பங்குபற்றினால் குழுவின் ஆலோசனைகளை ஏற்க வேண்டும். அல்லது கட்சி தனியாக ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும். ரணில் இரண்டையும் விரும்பவில்லை. தீர்வுக்காக எவ்வித ஆலோசனையையும் முன்வைக்காமல் தமிழ் மக்களின் நண்பனாக வேஷம் போடுவது தான் ரணிலின் நோக்கம். அதனால்தான் இன்று வரை அரசியல் தீர்வுக்கான எந்தவொரு ஆலோசனையையும் அவரது கட்சி முன்வைக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப் போகின்றாராம். கட்சிக்குள் முக்கியமானவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பொது வேட்பாளரை நிறுத்துவதில் ரணில் கூடுதலான அக்கறை செலுத்துவதற்கு அவரது சுயநல நோக்கமே காரணம். மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியாது என்பது ரணிலுக்குத் தெரியும். ஏற்கனவே எல்லாத் தேர்தல்களிலும் தோல்வியடைந்ததால் கட்சிக்குள் &?ஸிl8நிlழி முகங்கொடுக்கின்றார். இந்தத் தேர்தலிலும் தோல்வியடைந்தால் கட்சியின் தலைவர் என்ற அந்தஸ்து அம்போ ஆகிவிடும். கட்சிக்குள்ளிருந்து வேறொருவரை வேட்பாளராகப் போட்டாலும் தலைவர் பதவிக்கு ஆபத்து. எனவேதான், வெளியிலிருந்து ஒருவரைப் பொது வேட்பாளராகப் போடும் முடிவுக்கு வந்தார். அதனால்தான் வழமையான பாணியில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பொது வேட்பாளருக்குப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். ரணிலின் முயற்சி ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கேட்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குள் ஒரே கருத்துடையவர்கள் இல்லை. ஆரம்பத்திலேயே வேறுபட்ட கருத்துநிலைகளைக் கொண்டவர்களின் கூட்டணி தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்ற இலக்குடன் ஒன்று சேர்ந்தவர்களைப் புலிகளின் ஆயுதபல அச்சுறுத்தல் பிணைத்து வைத்திருந்தது. இப்போது புலிகள் அரங்கில் இல்லை. அதனால் மாறுபட்ட கருத்துகள் வெளிவருகின்றன. புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்குத் தீங்கு விளைவித்துவிட்டதைச் சிலர் உள்ளூர உணர்கின்றார்கள். புலிகளின் பாதைதான் சரியானது என்ற குரலும் அங்கிருந்து கேட்கின்றது. சுருக்கமாகக் கூறுவதானால் ஒருமித்த நிலைப்பாடொன்றுக்கு வர முடியாத நிலையில் இன்று கூட்டமைப்பு இருக்கின்றது. அரசாங்கம் சரியான பாதையில் செல்கின்றது என்றும், அந்த முயற்சிக்குக் கைகொடுக்க வேண்டும் என்றும் பலர் கருதுவதாகத் தெரிகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலென்ன, இக் கூட்டமைப்பு உருவாகுவதற்கு முன் வெவ்வேறாக இயங்கிய கட்சிகளாக இருந்தா லென்ன இனப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் தவறுகள் புரிந்திருக்கின்றன. இத் தவறுகளால் இக் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. தமிழ் மக்களே பலவிதங்களில் பாதிக்கப்பட்டார்கள். மக்களைத் தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாக்காத விதத்தில் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு.
முதலில் சமகால யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் செயற்படுகின்றன. வட மாகாணத்தில் மாகாண சபை செயற்படவில்லை. இந்த மாகாண சபை இனப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு என்று கூறுவதற்கில்லை. அதே நேரம் நிராகரிக்கப்பட வேண்டியது என்றும் கூற முடியாது. மாகாண சபை மூலமும் ஓரளவு சுயாட்சி அதிகாரம் கிடைக்கின்றது. ஆனால் அது போதுமானதல்ல. மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான ஒரு தீர்வைப் பெற வேண்டுமானால் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்துக்கு வெளியே உள்ள கட்சிகளிடமிருந்து அப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான சூழ்நிலையும் இல்லை.
இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுத் தனிநாட்டுப் பாதையிலே பயணித்தன. இதன் விளைவு தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்து விட்டது. ஆயுதப் போராட்டமோ, தனிநாடோ சாத்தியமில்லை என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகிவிட்டது. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுதான் தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரே வழி என்பது தெளிவாகிவிட்டது. உடனடியாக அத்தகைய தீர்வை அடையக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை.
நியாயமான அரசியல் தீர்வுக்கு எதிரான இனவாத சக்திகள் அரசியல் அரங்கில் ஓரளவு பலமடைந்திருக்கின்றன. தமிழ்த் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற சில முடிவுகளே இந்த நிலை ஏற்படுவதற்கும் காரணம். இந்தப் பின்னணியிலேயே அரசியல் தீர்வுக்கான முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டும். முழுமையான அரசியல் தீர்வை அடையக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை என்பதால் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அவரே வெற்றிவாய்ப்பு உள்ளவராகவும் இருப்பதால் அவருடன் இணைந்து அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுக்கலாம். பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறுவதற்குத் தமிழ் பேசும் மக்கள் கைகொடுப்பதன் மூலம் அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுப்பதற்கு உதவ முடியும். இவ்வாறு அமையும் தீர்வு முழுமையான அரசியல் தீர்வை அடையும் முயற்சியில் வலுவான அடியெடுப்பாக இருக்கும்.
0 commentaires :
Post a Comment