11/28/2009

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத நிலையில் ஐ.தே.க



இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடியாத நிலை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சரும் தேசிய அபிவிருத்தி தொடர்பான பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்ன நேற்றுத் தெரிவித்தார். தமது வேட்பாளரை களமிறக்க முடியாமல் போன ஐ. தே. கவும், ஜே. வி.யும் சேர்ந்து உறுப்பினர்களே இல்லாத 14 கட்சிகளுடன் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யுத்தத்தை வெற்றி கொண்டு, பாரிய அபிவிருத்தி பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டி போட முடியாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மாத்தறை மாவட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது செயலமர்வின் அங்குராப்பணம் வைபவம் கம்புருகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல, தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் ஆரிய ரூபசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த செயலமர்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், கடந்த நான்கு ஆண்டு காலத்திற்குள் அபிவிருத்தி பணிகளுக்காக அரசாங்கம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாவை செலவு செய்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், வீதி, நீர்ப்பாசனம், மின்சாரம், கல்வி, உட்பட சகல துறைகளிலும் பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிராம அபிவிருத்திக்காக சேவையாற்றும் உறுப்பினர்களை கெளரவிக்கும் வகையில் அவர்கள் ஆற்றிய சேவைகள் அடங்கிய புத்தகம் ஒன்று தேசிய ஊடக மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இந்த புத்தகம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தான் செய்த சேவைகளை தேர்தல் காலங்களில் மக்களுக்கு தெரியபடுத்த உதவியாக அமையும் என்றார். 2012 ஆண்டு நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும். சகல உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் ஜனாதிபதியின் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் மூலம் யுத்தத்தை வெற்றிக் கொண்டது போன்று அபிவிரு த்திகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

0 commentaires :

Post a Comment