தோல்விகளில் துவழும்போது மட்டுமே உதயமாகும் கூட்டணிகள் என்பது மீண்டும் ஒருமுறை தமிழர்வரலாற்றில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழர் தலைமைகள் என்று கடந்தகாலங்களில் முத்திரை பதித்தவர்கள் யாரும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. மக்களின் நலன்சார்ந்து ஒற்றுமைப்படவேண்டிய அனேகமான தருணங்களில் தத்தமது நலன்சார்ந்த, வர்க்கம் சார்ந்த லாபநட்டக் கணக்குகளுக்காக பிளவுபட்டுநிற்பதே கடந்தகாலத்தில் நாம் கண்ட உண்மையாகும். ஆனால் தமது கட்சிகளின் தோல்விகளிலும், அழிவின் விளிம்புகளிலும் மட்டுமே சுடலை ஞானம் வந்துவிட்டவர்களாக அவசரக் கூட்டுகளும், கூட்டணிகளும், கூட்டமைப்புகளும் ஏற்படுவது எமது அரசியலில் வழமையானதாகும்.
அந்தவகையில்தான் தமிழ் அரசியல் வானில் புதியதொரு கூட்டுக்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவருகின்றன. இதுபோன்ற கூட்டுகளின் பயனாக மீண்டும் மீண்டும் பயனடைவது, மேட்டுக்குடி அரசியல்வாதிகள் மட்டுமேயாகும். சாமானிய மக்கள் கூட்டம் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவது இக்கூட்டுகளின் ஊடாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதுபற்றி கவனம் கொள்வதற்கும் தட்டிக்கேட்பதற்கும் எமது சமூகம் இனியாவது தயாராக வேண்டும்.
1970 ஆம் ஆண்டுவரை சமஸ்டி, தமிழீழம், தேசியம் என்று அடிப்படையில் ஒரே கோசங்களாக இருந்தபோதும் அவற்றை மாறி மாறிப் பேசிக்கொண்டு இருபெரும் கன்னைகளாக தமிழ் காங்கிரசும், தமிழரசுக்கட்சியும் பிரிந்து நின்றன. 1970 ஆண்டுத் தேர்தலில் இக்கட்சிகள் இரண்டுமே படுதோல்வியடைந்த நிலையில் பெருந்தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், சுந்தரலிங்கம், அ.அமிர்தலிங்கம் போன்றோர் தமது ஆசனங்களை இழந்தனர். வடக்கின் பெரும்பாலான இடங்களை இடதுசாரிகள் வெற்றிகொண்டனர்.
இதற்குக்காரணம் தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் போன்றவை வடமாகாணத்தில் இ;டம்பெற்ற தலித்மக்களின் போராட்டத்தின்போது எடுத்திருந்த ஆதிக்கசாதி சார்புநிலைப்பாடுகளேயாகும். இதன்காரணமாக தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்த தமிழின் பெயரால் அரசியல் நடத்திய கட்சிகளை தூக்கியெறிந்தனர்.
இந்தத் தோல்விகளின் மூலம் தமக்கு எதிர்காலம் இல்லையென்று உணர்ந்துகொண்ட போதுதான், தமிழ்தேசியவாதக் கட்சிகளான தமிழ் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் தமது இருபது வருட பகைகளை மறந்து தமது சொந்த எதிர்கால நலன்கருதி ஒற்றுமை வேசம்போட முனைந்தனர். 1950 ஆம் ஆண்டில் இருந்து இருபெரும் துருவங்களாக இருந்துவந்த இக்கட்சிகள் மக்களின் நலனுக்காக ஒற்றுமைப்படவில்லை. தமக்கு எதிர்காலம் இல்லை என்று உணர்ந்துகொண்டபோது தமிழ்மக்களிடையே புதிய தலைமைகள் உருவாவதை தடுக்கும் முகமாக தமிழர்கள் ஒற்றுமைப்படவேண்டும் என்று கோசமிட்டனர். 1975 இல் போலியாக தமிழர்விடுதலைக் கூட்டணியை இவர்கள் உருவாக்கினர். தலித் மக்களிடமிருந்து புதியதலைமைகள் எழுவதைத் தடுக்கவும், இடதுசாரிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தவும் ஏற்படுத்தப்பட்ட மேட்டுக்குடி அரசியல் சதியே தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிறப்பும், அவர்கள் ஏற்படுத்திய தமிழீழத்தைக் கோரிய வட்டுக்கோட்டைப் பிரகடனமுமாகும். இந்த போலி ஒற்றுமையில் தமிழ் பேசும் மக்கள் ஏமாந்ததன் விளைவே கடந்த 30 (முப்பது) வருடமாக தமிழ் சமூகம் எதிர்கொள்ள நேர்ந்துள்ள அவலநிலைகளாகும். இதேபோன்றுதான் மீண்டுமொருமுறை இதுவரை காலமும் எதிர் எதிர் அணியில் இருந்த சங்கரியும், சம்பந்தரும் இன்று கைகோர்த்திருக்கிறார்கள். இந்த அரைவேக்காட்டு இனவாத மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கு சிறிதரனும், சித்தார்தரும் முட்டுக்கொடுக்க முயல்வது தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.
கடந்த வடமாகாண உள்@ராட்சித் தேர்தல்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் போன்ற அமைப்புகள் அடைந்த படுதோல்வியே இந்த துரோகத்தை செய்யும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் சிலநூறு வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்ட சங்கரியாருக்கு யாருடனாவது கூட்டுக்சேர்வதைவிட வேறு வழியில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் போன்ற அமைப்புகள் தாம் எடுத்திருந்த மதில்மேல் ப+னை நிலைப்பாடு அவர்களைத் தோல்விகாணத் தள்ளியது. அதாவது ஈ.பி.டி.பி., ஈரோஸ், ரெலோ, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்றவை அரசுடன் இணைந்து செயற்படுவது ஒன்றே சரியானது என்கின்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். அதையே மக்களிடமும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் புலிகள் போராட்டம் முடிவடைந்தாலும் தமது போராட்டம் தொடரும் என்று மே-18 இல் அறிக்கை விட்ட சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு வழமைபோலவே இனவாத அணுகுமுறையுடன் மக்களை அணிதிரட்டினர். இவற்றில் எது சரி, எது பிழை என்பதற்கப்பால் இருவேறு நிலைப்பாடுகளை இவர்கள் வகுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் சங்கரியோ, புளட்டோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். இனரோ ஒரு உறுதியான நிலைப்பாடு இன்றி இருதலைக்கொள்ளி எறும்புகளாக தேர்தலை எதிர்கொண்டனர். கொழும்புக்கு வாலையும், வடக்குக்கு தலையையும் காட்டிக்கொண்டு அரசியல் நடத்த முனைந்ததன் பயனை கடந்த தேர்தலில் கண்டுகொண்டனர். தாங்கள் செய்யவேண்டியது எது என்பதை, மக்களுக்கு இவர்கள் சொல்லும் செய்தி என்ன என்பதை தீர்மானிக்க முடியாதவர்கள் எப்படி மக்களுக்கு தலைமையேற்க முடியும். அத்தோடு இந்த நங்கூரக் கூட்டணியினர் தங்களுக்குள் கூட ஒற்றுமையாக செயற்படும் அளவிற்கு அவர்களிடம் விட்டுக்கொடுப்புகளோ, சகிப்புத்தன்மைகளோ காணப்படவில்லை. கடைசிநேரத்தில் சங்கரி தனித்துவிடப்பட்டார். இது போன்ற பல்வேறு காரணிகள் இந்த மூன்றாவது அணியினரை தோல்வியில் தள்ளியது. யாழ் மாநகர சபையில் மட்டுமல்ல, புளட்டின் கோட்டையென வர்ணிக்கப்பட்ட வவுனியா நகரசபையில் கூட இவர்கள் தோல்வி கண்டனர். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது போல் இன்று இவர்கள் தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளும் தேவையெழுந்துள்ளது. அரச ஆதரவா?, அரச எதிர்ப்பா? என்கின்ற கேள்விகளே இன்று இவர்கள் முன்னுள்ளது. அதன் விளைவாகவே இதுவரைகாலமும் புலிகளின் அனைத்துகொடுமைகளுக்கும் அரசியல் நியாயங்கள் சொல்லிக்கொண்டிருந்த கூட்டமைப்பினரைச் சார்ந்து முடிவுகள் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனூடாக புளட், ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற கட்சிகள் தாம் இதுவரைகாலமும் கட்டிக்காத்த மாற்று கருத்துக்களை கைவிடத் துணிந்திருக்கிறார்கள். புரட்சிகர சிந்தனைகளும், இடதுசாரி தோழமைகளும் பேசிய சுமார் 25 வருட கால வரலாற்றை தூக்கியெறிய முனைந்திருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள்தான் கூட்டமைப்புடன் சேர முனைகிறார்களே தவிர, சம்பந்தரோ, கூட்டமைப்போ தமது நிலைப்பாடுகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. கூட்டமைப்பினது கூட்டாளிகளான ஹக்கீமும், மனோகணேசனும் எப்படியும் ஐக்கிய தேசியக் கட்சி அரசியலை கைவிடப்போவதில்லை. எனவே புதிதாக உருவாகி வருகின்ற கூட்டணியானது அடுத்த ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உருவாக்கித் தருவதற்காகவே உழைக்க முனையும். இலங்கையை ஏகாதிபத்தியங்களுக்கு தாரைவார்த்துக்கொடுக்க தயாராக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதா? தேசிய பொருளாதாரத்தையும், தென்னாசிய நாடுகளின் கூட்டமைப்பையும் வளர்த்துவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பதா? என்கின்ற கேள்விக்கு புளொட்டும், ஈ.பி.ஆர்.எல்.எவ். இனரும் சொந்தமாக முடிவெடுக்கும் சந்தர்ப்பங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?.
கு.சாமித்தம்பி-
0 commentaires :
Post a Comment