11/09/2009

அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்கும் மறியல் போராட்டம் கொழும்பில் நாளை நடாத்த விரிவான ஏற்பாடு



அரசாங்கத்திற்கு எதிரான சதி, சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான மறியல் போராட்டம் நாளை 10ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு. புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட தொழிற் சங்கத் தலைவரும், மேல் மாகாண ஆளுனருமான எஸ். அலவி, மெளலானா தலைமையில் நடைபெறவுள்ள இம்மறியல் போராட்டத்தில் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் திணைக்களங்கள், நியதிச் சபைகள், உள்ளிட்ட அரச, தனியார் நிறுவனங்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம், கூட்டுத் தொழிற்சங்க கமிட்டி உட்பட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இணைந்து இம்மறியல் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன.

இம்மறியல் போராட்டம் தொடர்பாக மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா குறிப்பிடுகையில், சுமார் முப்பது வருடகாலம் நாட்டுக்குப் பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் ஒழித்துக்கட்டி நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தியது எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

இருந்தும் அற்ப அரசியல் பெறும் நோக்கில் சிலர் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இதன் முதற்கட்டமாகவே நாளை இந்த மறியல் போராட்டம் நடாத்தப்படுகின்றது.

ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலான இம்மறியல் போராட்டம் மாகாண மட்டத்திலும் நடாத்தப்படும் என்றார்.

0 commentaires :

Post a Comment