11/04/2009
| 0 commentaires |
தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் : அமைச்சர் சிறிபால டி சில்வா
"இருண்ட காலம் முடிவடைந்துவிட்டது. வடக்கிற்கு இப்போது வசந்தம் வந்துள்ளது. பல அபிவிருத்திப் பணிகள், உட்கட்டமைப்புப் பணிகள், மனித மேம்பாட்டு நடவடிக்கைகள் என்பன நடைபெறுகின்றன. ஜனாதிபதி அவர்கள் வெறும் அபிவிருத்தியை மட்டும் பாராமல் ஒரு தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அவரது கரங்களை அனைவரும் பலப்படுத்த முன்வர வேண்டும்" என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
வவுனியா பொது மருத்துவமனையில் மருத்துவ விடுதி, மார்பு சிகிச்சை நிலையம் என்பவற்றைத் திறந்து வைத்த பின்னர், குடும்ப நல பயிற்சி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
வவுனியா தாதியர் கல்லூரியின் பயிற்சி மண்டபத்தில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரனின் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான ரீ.சித்தார்த்தன், யுனிசெவ் நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் போஷாக்குப் பிரிவு அதிகாரி டாக்டர் மோஸிம் ஹுஸைன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.மகேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவிக்கையில்,
"மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே வைத்தியசாலைக்கான விடுதிகள், சிகிச்சை நிலையங்கள், தாதியர் பயிற்சிக் கல்லூரி என்பன அமைக்கப்படுகின்றன. இவற்றின் ஊடாகப் பொதுமக்களின் வாழ்க்கையைக் கட்டி எழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் இனமத, மொழி, மாகாணம், பிரதேசம் போன்ற எந்த வேறுபாடுகளுமின்றி, ஐக்கியப்பட்டு, ஒன்றிணைந்து செயற்படத்தக்க பக்குவத்தை அவர்களது மனதில் ஏற்படுத்த வேண்டியுள்ளது. எந்த ஒரு அபிவிருத்திப் பணியும் ஒன்றிணைந்த மக்கள் வாழ்க்கையையும் செயற்பாட்டையும் முன்னோக்கியதாக அமைய வேண்டும் என்பதுதான் மகிந்த சிந்தனையின் அடிப்படையாகும்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான சுகாதார சேவைகள், சமமான கல்வி வாய்ப்புக்கள், சமமான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மகிந்த சிந்தனையின் இலக்காகும்.
நாங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வைத்தியர்கள், தாதியர்கள், வைத்திய ஊழியர்களைக் கொண்டு வரவேண்டியதில்லை. அந்தந்த மாவட்டங்களிலேயே இவர்களை உருவாக்க வேண்டும். வவுனியா, செட்டிக் குளம், மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் தமிழ் வைத்தியர்கள் பணிபுரிய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் அவ்வாறு தமிழ் வைத்தியர்கள் இங்கு வந்து பணிபுரிவதற்குத் தயாராக இல்லை.
யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுபவர்களில் 99 சதவீதமானவர்கள் தமிழ் பிரதேசங்களில் பணியாற்ற விரும்புகிறார்களில்லை. அவர்கள் கொழும்பில் பணியாற்ற வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இந்த மனப்போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். எனவே தமிழ்ப் பிரதேசங்களில் பணியாற்றுவதற்குத் தமிழ் வைத்தியர்கள் உடனடியாக முன்வர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
0 commentaires :
Post a Comment