11/09/2009

மல்லாவி, பூநகரி மற்றும் துணுக்காய் 28,500 பேர் டிசம்பருக்குள் மீள்குடியேற்றம் ஆயிரம் பேர் இன்று மீள்குடியமர்வு

மல்லாவி, பூநகரி மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் டிசம்பர் மாத முடிவுக்குள் 28 ஆயிரத்து 500 பேர் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வுள்ளனர். இதற்கு ஏற்றவகையில் அரசாங்க நிர்வாக கட்டமைப்பினை ஒழுங்கமைப்பது தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் துணுக்காயில் நேற்று அராயப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வட மாகாண பிரதம செயலாளர் சிவசாமி, கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லைதீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டம் தொடர்பாக ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி குறிப்பிடுகையில், இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருக்கும் துணுக்காய் பிரதேசவாசிகளில் ஆயிரம் பேர் இன்று (9 ஆம் திகதி) சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவர். இதேநேரம் துணுக்காய், யோகபுரம் மகாவித்தியாலயம் ஆயிரம் மாணவர்களுடனும், 16 ஆசிரியர்களுடனும் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றது. என்றாலும் துணுக்காயில் மேலதிகமாக இரண்டு பாடசாலைகள் அடுத்த வாரமளவில் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன. இப்பாடசாலையில் கடமையாற்றும் பத்து ஆசிரியர்களுக்கு பத்து துவிச்சக்கர வண்டிகளும் மாணவர்களுக்குப் பாடசாலைப் புத்தகங்களும், உபகரணங்களும், சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. யாழ். குடாநாட்டில் அண்மையில் 650 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. அதேபோல் துணுக்காயைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்துக்கான விண்ணப்பங்களை வடமாகாண ஆளுநர் கல்வியமைச்சிடம் கையளிக்கவுள்ளார் மல்லாவி மக்களின் வைத்திய வசதி கருதி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வைத்தியசாலைக்கு உடனடியாக இரண்டு அம்பியுலன்ஸ் வண்டிகளை வழங்குவதற்கும் நேற்றைய சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. மல்லாவியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் போக்குவரத்து வசதிகருதி இரண்டு பயணிகள் பஸ்ஸை பெற்றுத்தருமாறு போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் ஒத்துழைப்புடன் 750 ஏக்கர் வயல் நிலத்தில் உடனடியாக விவசாய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக இவர்களுக்கு விதைநெல், உரம், உழவு இயந்திரங்கள் ஆகியன விநியோகிக்கப்படவுள்ளன. இதேவேளை மல்லாவி, துணுக்காய் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் மாகாண சபையின் கீழ் வரும் அரச அதிகாரிகள் கடமைக்கு திரும்ப ஆரம்பித்து விட்டதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், இதுவரையில் கடமைக்கு திரும்பாமல் இருப்பவர்களையும் உடனடியாக கடமைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டம் சுமார் 4 மணித்தியாலங்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் என்பன குறித்து ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டத்தைத் தொடர்ந்து ஆளுநரும், அரசாங்க அதிபர்களும் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பகுதிகளையும் மீளக்குடியமர்த்தப்படவிருக்கும் பிரதேசங்க ளையும் பார்வையிட்டனர். -


0 commentaires :

Post a Comment