கிண்ணியா மக்களின் நீண்ட கால துன்பம் நீங்குகிறது
இலங்கையில் மீக நீளமான கடல் மேல் பாலம் எனக் கருதப்படும் கிண்ணியாவையும் சீனன் குடாவையும் இணைக்கும் பாலம் இன்று 20ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
495 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் உடைய இப்பாலம் 7.4 மீற்றர் அகலத்தில் வாகனப் போக்குவரத்துக்கும் 1.5 மீற்றர் நடபாதைக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு சவூதி அரசாங்கம் நீண்டகால கடன் திட்டத்தின் கீழ் வழங்கிய 710 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
350 வருட கால வரலாற்றைக் கொண்ட கிண்ணியா மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, நிர்வாக, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளிலும் பல்வேறு வழிகளிலும் பெரும் பாதிப்பைச் செலுத்தி வந்த இந்த கடல் வழிப் பயணத்திற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
சில நிமிடங்களில் கிண்ணியாத் துறையை கடக்க வேண்டிய பயணிகள் படகிற்காக பல மணித்தியாலங்களாக இறங்கு துறையில் காத்திருந்த யுகம் இப்போது மாறுகின்றது.
வர்த்தக ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மற்றும் சீனன்குடா நகரங்களுக்கு தினமும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் கிண்ணியா துறையை கடந்து செல்கின்றன.
இப்பிரதேசத்தில் இருந்து மேற்படி நகரங்களுக்குச் செல்லும் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் முதல் படகைப் பிடிப்பதற்காக அதிகாலை 4.00 மணிக்கே கிண்ணியா துறையை வந்து சேர வேண்டியிருந்தது.
ஏனெனில் முதல் படகைத் தவறவிட்டால் காலை வேளை ஏராளமான சனநெரிசல் காரணமாக படகு அக்கரைக்குச் செல்வதற்கு பல மணி நேரங்களை எடுக்கும்.
இதனால் ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாதிருந்தது. அதேபோன்று மாலை 4.00 மணிக்கு அலுவலக நேரம் முடிந்தாலும் இரவு 8.00 மணிக்கு பின்பே இவர்கள் வீடு வந்து சேர வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய ஓர் ஊழியர் சுமார் 15 மணி நேரங்களை செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது. இதன் மூலம் ஊழிய மணித்தியாலங்கள் அதிகமாக வீண்விரயம் செய்யப்பட்டது.
அத்தோடு சீனன்குடாவில் அமைந்துள்ள பிரிமா மாஆலை, மிட்சுபி சீமெந்து ஆலை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் கிண்ணியா பிரதேச இளைஞர்கள், யுவதிகள் தொழில் தேடிச் செல்வதற்கும், இப்பிரதேச விவசாய உற்பத்திப் பொருட்களை வெளியிடங்களில் சந்தைப்படுத்துவதற்கும் இந்தப் படகுப் பயணமே பெரும் தடையாக இருந்து வந்தது.
கிண்ணியாப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்து வருவதும் இந்த படகுப் பயணமே. கல்வி அபிவிருத்தியில் பெரும் முன்னேற்றமடைந்துள்ள திருகோணமலை நகரிலே இலங்கை திறந்து பல்கலைக்கழக கிளை, தொழில் நுட்பக் கல்லூரி, கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடம் மற்றும் ஏராளமான தனியார் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளன. இவற்றை நாடிச் சென்று தங்களது கல்வியைத் தொடருவதற்கு போக்குவரத்து பிரச்சினையே பிரதான காரணமாக இருந்தது.
அத்தோடு, தொழில்நுட்ப நிறுவனங்களையும் உயர் கல்வி நிறுவனங்களையும் கிண்ணியாவில் அமைப்பதற்கு காலகாலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கிண்ணியாவுக்கான போக்குவரத்து பிரச்சினையை காரணமாகக் காட்டி அவை தட்டிக்கழிக்கப்பட்டன.
அடுத்து சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால் 80 ஆயிரம் மக்கள் வாழும் இந்தப் பிரதேசத்தில் ஏனைய துறைகளைப் போன்று இதுவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றது.
2005ஆம் ஆண்டுவரை ஒரு மாவட்ட வைத்திய சாலையைக் கொண்டிருந்த இப் பிரதேசத்தின் கடல் போக்குவரத்து பிரச்சினையை மையமாக வைத்து திருகோணமலையில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் இங்கு வந்து சேவை செய்வதற்கு தயக்கம் காட்டினர்.
கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் நஜீப் அப்துல் மஜீதின் அயராத முயற்சியின் பயனாக 2005 ஆம் ஆண்டு தள வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. எனினும் அது இன்னும் ஒரு தள வைத்தியசாலைக்குரிய கட்டமைப்பு வசதியினை பெறவில்லை. இதற்கும் இந்த கடல் வழிப் பயணமே பிரதான காரணமாக இருந்தது.
கிண்ணியாவில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நோயாளிகள், அக்கரைக்குச் சென்ற படகு திரும்பி வரும் வரை காத்திருந்த சமயம் மரணமடைந்த சம்பவங்களும், கர்ப்பிணித் தாய்மார்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவங்களும் கிண்ணியா மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.
கடந்த காலங்களில் சேவைத் துறைகளிலும் சரி நிர்வாகத் துறைகளிலும் சரி சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் கிண்ணியா பிரதேச மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கிக் கொண்டு வந்தனர்.
கடமை நேரங்களில் காரியாலயங்களில் உரிய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் இருப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
கிண்ணியாவுக்கு போக்குவரத்து செய்வதில் ஏற்படும் இடர்பாடுகள் காரணமாக மேலதிகாரிகள் இங்கு அடிக்கடி விஜயம் செய்து அரச நிறுவனங்களையும் திணைக்களங்களையும் மேற்பார்வை செய்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
ஆனால், இந்தப் பால நிர்மாணத்தால் போக்குவரத்து இலகுவாக்கப்படுகின்றது. இதன் மூலம் எந்நேரமும் மேலதிகாரிகளின் மேற்பார்வைக்கு ஆளாவோம் என்ற உணர்வு இவர்களுக்கு ஏற்பட்டு வினைத்திறன் வாய்ந்த சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
அபிவிருத்திக்குத் தேவையான கடல் வளம், நீர் வளம், காட்டு வளம், மனித வளம் அனைத்தையும் தாராளமாகக் கொண்ட இப்பிரதேச மக்கள் துரதிஷ்டவசமாக போக்குவரத்துத் துறையால் தாம் இழந்து வந்த நிலையான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. மக்கள் அனுபவித்து வந்த சொல்லொணா துயரங்களுக்கு விடிவு ஏற்பட்டுவிட்டது.
கிண்ணியா துறைக்கு பாலம் அமையும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நாம் உயிருடன் இருக்கும்போது பார்க்க மாட்டோமா என்று ஏங்கித் தவித்த எத்தனையோ மூதாதையர்கள் மரணித்துவிட்டார்கள். எனினும் அவர்களின் சந்ததியினர்களுக்காவது அந்தக் காட்சியைப் பார்க்கக் கூடிய பாக்கியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கிடைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்
0 commentaires :
Post a Comment