10/23/2009

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எஞ்சிய குடும்பங்களை அடையாளம் கண்டு அழைத்து வருவதற்காக மாவட்ட குழுவொன்று இன்று வவுனியா சென்றுள்ளது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எஞ்சிய குடும்பங்களை அடையாளம் கண்டு அழைத்து வருவதற்காக மாவட்ட புனர்வாழ்வு திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் மற்றும் 10 கிராம சேவை அலுவலகர்கள் உள்ளடக்கிய குழுவொன்று இன்று வவுனியா சென்றுள்ளது.
வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 847 குடும்பங்கள் 2349 பேர் நேற்று வரை 4 தொகுதிகளில் மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்டு சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அழைத்து வரப்பட்ட 298 குடும்பங்களைச் சேர்ந்த 787 பேர் இறுதி தொகுதியினராகக் கருதப்பட்டாலும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 34 குடும்பங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்தே குறிப்பிட்ட அதிகாரிகள் குழு அவர்களை அடையாளம் கண்டு அழைத்து வர சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நேற்று அழைத்து வரப்பட்ட குடும்பங்களில் 3 பெண்கள் உட்பட 6 பேர் தவிர்ந்த ஏனையோர் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட 6 பேரையும் வவுனியாவுக்கு அனுப்பி வைப்பது குறித்து பாதுகாப்பு தரப்பு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

Categories: செய்திகள்

Tags:

-->

0 commentaires :

Post a Comment