அரசாங்கத்தின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கோடு சதித் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள, நோர்த் ஈஸ்டன் என்ற சஞ்சிகையின் அச்சீட்டாளரான வெற்றிவேல் ஜசீதரனையும் அவரது மனைவியையும் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்ய தயாராகுமாறு இலங்கையின் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, பயங்கரவாத புலனாய்வு பணியகத்திற்கு எதிராக, பிரதிவாதிகளால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவினை அவர்கள் விலக்கிக் கொண்டால் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை விலக்கிக் கொள்ள சட்டமாதிபர் தயாராகவுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்துக்கு பதிலளித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, முதலில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை விலக்கிக்கொண்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ததன் பின்னர் தமது அடிப்படை உரிமை மனுவை விலக்கிக்கொள்வதாகக் கூறினார்.
இதன்போது, குறிக்கிட்ட நீதிபதி இரண்டு தரப்பினரும் இணக்கங்கண்டு வழக்கினை விலக்கிக் கொள்ள முன்வரவேண்டும் எனவும் எதிர்வரும் 26ம் திகதி அவர்கள் தமது தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர் பிரதிவாதிகளை விடுவிப்பது குறித்த தமது முடிவை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதே நோர்த் ஈஸ்டன் சஞ்சிகையின் ஆசிரியர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அண்மையில் 20 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment