10/01/2009

கள்ளங்கபடமற்ற குழந்தைப் பருவத்தை கணநேரக் கிளர்ச்சிக்காக சீரழிக்கலாமா? ஆசிரியர் எஸ். எல். மன்சூர் அட்டாளைச்சேனை


“பிள்ளை தனது இனத்தினதும், கலாசாரப் பின்னணியினதும், குடும்பத்தினதும், சமூக சூழ்நிலையினதும், அன்பு, காப்பு, போசாக்கு என்பவற்றினதும் உருவாக்கமே பிள்ளையாகும்.
ஆதலால்தான், அவனது எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் பாதையானது சிறுபருவத்திலேயே பசுமரத்தாணி போல ஆழமாகப் பதிந்த அனுபவங்கள்தான் என்பதை நாம் நினைவில் நிறுத்தி இன்றைய உலக சிறுவர் தினத்தில் அவர்களது உரிமைகள், பாதுகாப்பு என்பவற்றை சற்றுப் புரட்டித்தான் பார்ப்போமே!
ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் மூலம் சர்வதேச ரீதியாக சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயதிற்குக் குறைந்த சகலரும் சிறுவர்களேயாவர்.
ஆகவேதான் சிறுவர்களுக்கு பல்வேறு உரிமைகளும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். எல்லா பிள்ளைகளுக்கும் உள்ள உரிமைகளை வரையறுத்துள்ளதோடு அதிகமான நாடுகள் அவற்றில் ஒப்பமிட்டு ஏற்றுக்கொண்டு அமுல்படுத்தியும் வருகின்றன.
சிறுவர்களுக்கான 54 உறுப்புரைகள் பற்றி அச்சரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின் சிறுவர் உரிமைகள் பற்றிய ஐ. நா. அமையம் சகல பிள்ளைகளும் உயிர்வாழ, விருத்தியடைய, பாதுகாப்புப் பெற, சமூக நடவடிக்கைகளில் பங்குகொள்ள உரிமையுடையவர்கள்” என கூறுகிறது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் சிறுவர்களது உரிமைகள் பாதுகாப்பு, பராமரிப்பு விடயங்களில் நீண்டகாலமாகவே பின்பற்றப்பட்டு வருகின்ற, பாரம்பரியத்தை கடைப்பிடித்து வருகின்றமையானது ஒரு சிறப்பம்சமாகும்.
எனினும் எவ்வாறு சட்டங்கள் இருந்த போதிலும் அவற்றைத்தாண்டி சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் பரவலாக நடைபெற்றே வருகின்றமை வேதனை தரும் விடயமாகும். எனவேதான் ஒவ்வொருவரும் சிறுவர்களுக்கான உரிமைகளை அறிந்து கொண்டு அவ்வுரிமைகள் மீறப்படுகின்ற வேளை அவற்றைத் தடுப்பதும், உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதும் வளர்ந்தோர் மீதான கடமையுமாகும்.
எனவே, சிறுவர் துஷ்பிரயோகத்தினை தவிர்த்து, அவர்களது உரிமைகளை சரியான முறையில் வழங்குவதன் மூலம் அது அவர்களது (பிள்ளையின்) ஆளுமை விருத்திக்கு கூடுதல் நன்மை பயக்கும்.
வளர்ந்தோரைப் போன்று பேச்சுச் சுதந்திரம் தமது கருத்தைத் தெரிவிக்கும் சுதந்திரம், மத கலாசார சுதந்திரம், தன் மொழியை பேசும் சுதந்திரம் கூடிப் பேசும் சுதந்திரம் போன்ற சுதந்திரங்கள் சிறுவர்களுக்கு எமது அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சில சுதந்திரங்களாகும்.
இலவசக்கல்வி, சுகாதாரம், அநாதரவான குழந்தை பராமரிப்பு, சட்டத்தில் சில சலுகைகள் என்பன சிறுவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள இன்று நடைமுறையிலுள்ள பொதுவான சில சுதந்திரங்களாகக் கொள்ளலாம்.
பெற்றோருடன் பிள்ளை வாழ்தல், பெற்றோரின் கடப்பாடுகளை அறிதல், சமூகப் பாதுகாப்பின் அனுகூலங்களைப் பெறுதல், கல்வி பெறுதல், போதைப்பொருள் பாவிப்பது, துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது, தொழில் புரிதல், போரில் அல்லது ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுதல் போன்றவைகளைத் தடுத்தல் போன்ற உரிமைகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை கவனிக்க வேண்டியதும் நம் சமுதாயத்தில் காணப்படுகின்ற அனைத்து (வளர்ந்தோரினதும்) மக்களினதும் கடமையாகும்.
இவ்விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் மனித குலத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் சிறார் மீதான பற்றுணர்வு ஏற்பட வேண்டும். இன்று சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதில் அமர்த்துபவருக்கு கிடைக்கும் தண்டனை பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளாது சிறுவர் தொழில்கள் அதிகமாகவே நடைபெறுகிறது.
அதனால் பாதிக்கப்படுகின்ற சிறுவர்களைப் பற்றி யாரும் எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. எனவேதான் இவைபற்றிய சட்ட விடயங்களை அறிந்திருத்தல் சாலச் சிறந்தது அவற்றில் சிலவற்றை அவதானிப்போம்.
1956ம் ஆண்டின் 47ம் இலக்க சட்டத்தினாலும், 1984ம் ஆண்டின் 32ம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்டதன் பிரகாரம் 18 வயதிற்குட்பட்ட இளம் ஆளை (சிறுவர்களை) வேலைக்கமர்த்துவது குற்றமாகக் கருதப்படுகிறது.
மேலும் பெண்கள், இளம் ஆட்கள், பிள்ளைகள் ஆகியோரைக் கொண்டு வேலை செய்வித்தல் சட்டம் பிரிவு 17இன்படி குற்றமாகும். இதன்படி “எவரேனுமொருவர் சிறுவர் ஒருவரை பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்ற வகையில் சிறுவரை வேலைக்கமர்த்துதல் ஆகாது” என்று கூறுகிறது.
சிறுவர்கள் கட்டாயம் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்க வேண்டும். 1997ம் ஆண்டின் முதலாம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் பெற்றோர்கள் 5 வயதிலிருந்து தமது பிள்ளையை ஒரு பாடசாலைக்கு கிரமமாகச் சென்று கல்வி கற்பதற்கு ஒழுங்குகள் செய்தல் பெற்றோரது கடமையாகும்.
ஏனெனில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் உரிமையின் 9வது சரத்தில் ‘பிள்ளை பெற்றோருடன் வசிப்பதற்கான உரிமையும், 18வது சரத்தில் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் (தாயும் தந்தையும்) இருவரும் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும்.
இதனை நிறைவேற்றுவதற்கு அரசு ஆதரவளித்தல் வேண்டும்” எனவும் “பிள்ளையின் நலனிலும், வளர்ச்சியிலும் பெற்றோர் கூடுதல் கவனமெடுத்தல் அவசியம்” எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள் கல்வி பெறுவதற்கான உரிமை பற்றி சரத்து 28,29 களில் கூறப்பட்டுள்ளதுடன் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் சரத்து 32ல் குறிப்பிட்டுள்ளவாறு ‘தம் ஆரோக்கியம், கல்வி, வளர்ச்சி என்பவற்றின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாய் அமையக் கூடிய வேலைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்குண்டு.
தொழிலில் அமர்த்துவதற்குரிய குறைந்தபட்ச வயதை வரையறை செய்தலும் தொழில் நிபந்தனைகளை நெறிப்படுத்துதலும் அரசின் கடப்பாடாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இன்று இலட்சக்கணக்கான சிறுவர்கள் பல்வேறு தொழிற்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவற்றுக்கு முக்கிய காரணியாக அமைவது வறுமையாகும். பரோபகாரிகள், சமூக அமைப்புகள் முன்வருவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்து வைக்கலாம்.
இலங்கையில் கல்வி கற்றோர் விகிதமானது அதிகரித்துக் காணப்படுகின்றது.
இருப்பினும் இலங்கையின் 8(வி’கி!விt பிரதேசங்களிலும் மலையகம் போன்ற சில பின்தங்கிய பிரதேசங்களில் மட்டுமல்லாது நகரங்களில் கூட அதிகமான சிறுவர்கள் பாடசாலை செல்லாத நிலையிலும், விட்டுவிட்டு பாடசாலை செல்பவர்களாகவும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவற்றை பெரியவர்களாகிய நாம் கண்டும் காணாதது போல் இராது சம்பந்தப்பட்டவர்களிடம் இவர்களை அடையாளப்படுத்தி கற்றலின்பால் திசை திருப்ப முன்வருதலானது ஒரு சமுதாயக் கடமையல்லவா?
இன்றைய சிறுவர்களது நிலையும், சமூகத்தின் பங்களிப்பும்
உலக சிறுவர்கள் தினம் வருடா வருடம் ஒக்டோபர் 1ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. சிறுவர்கள் என்போர் யார்? அவர்களது தேவைகள், அவர்களது செயற்பாடுகள், அவர்களது ஆசாபாசங்கள் போன்ற பல்வேறு விடயங்களையும் அக்குவேராகவே அறிந்து வைத்திருக்கின்றோம்.
நமது வீடுகளில் வளருகின்ற குழந்தையின் பராமரிப்பில் பெற்றோர்கள் காட்டும் அக்கறைதான் இதில் முக்கியமானது. பெற்றோர்கள் தவறுவிடுகின்ற போதுதான் சிறவர்கள் மீதான பிரச்சினைகளே எழுகின்றன.
பிள்ளை பாடசாலை செல்லும் வயது வந்ததன் பிற்பாடு, பாடசாலை சென்றுவிட்டால் எல்லாமே முடிந்துவிடுகிறது. நமது பிள்ளையை பாடசாலையின் ஆசிரியர்கள் பாப்பார்கள் என்ற சிந்தனை இன்று பல பெற்றோர்களிடம் காணப்படுகின்ற ஒர பண்பாகவே உள்ளது.
இந்நிலை மாற வேண்டும். பொதுவாக கிராமப் புறங்களிலுள்ள குறிப்பாக கற்றலில் ஆர்வம் காட்டாத பெற்றோர்களே இவ்விடயத்தில் இவ்வாறு காணப்படுகின்றனர். இன்று நவீன உலகிற்கான ஆதாயம் தேடும் பணியில் மக்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நாம் நமது பிள்ளையின் மீதான பற்றினை தவறவிட்டுவிட்டு பின்னர் ஏமாந்து விடுகின்றோம். இதிலிருந்து விடுபட்டு, பிள்ளைகள் நமது எதிர்காலச் சொத்து என்பதை யாவருக்கும் எத்திவைக்க வேண்டிய பாரிய பொறுப்பு கற்றோர், சமூகச் சிந்தனையுள்ள மானிடர் அனைவருக்கும் உரித்தான தார்மீக கடமையுமாகவே காணப்படுகிறது.
இவ்வாறு பாராமுகமாக இருப்பதனால்தான் நாளாந்தம் இப் பாலக பிஞ்சுகளுக்கு ஏதோர் வடிவில் பிரச்சினைகளும், அவமானங்களும், துஷ்பிரயோகங்களும், உரிமை மறுதலிப்புகளும், அவர்கள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும், பாடசாலையில் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றவைகள் என பல்வேறு தரப்பாரினாலும் சிறுவர்கள் பாதிக்கப்படுவது பற்றி பத்திரிகைகள் மட்டுமல்ல சிறுவர்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கின்ற அமைப்புகள் பலவும் அறிக்கைகள் விட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் மாற்றங்கள் என்பது நடைமுறையில் குறைவாகத்தான் இருக்கின்றன. காரணம் என்ன? நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டாயமான விடயமாகும்.
18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்பதை நாம் அறிவோம். இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற, பிள்ளைகள் முகங்கொடுக்கின்ற பாதிப்புகள், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் இம்சைப் படுத்தப்படுவதானது சுகாதாரத் துறைக்குக் கூட பெரும் சவாலாகவே காணப்படுகிறது.
அண்மையில் மலையகச் சிறுமிகள் இருவர் கொழும்பில் வீட்டு வேலைக்காக சென்று அதன்பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதால் ஏற்பட்டுள்ள இவ்வாறான நிலைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்றுதல் தமது அனைவரினதும் பொறுப்பு என்பதனை மறுக்கத்தான் முடியுமா?
எந்த ஒரு பிள்ளையும் உரிய வயதை அடைந்ததும் பாடசாலைக் கல்வியைப் பெறல் வேண்டும். இன்று பாடசாலைகளில் உணவு, உடை, புத்தகங்கள் என்பவைகள் இலவசமாக வழங்கப்பட்டு பெற்றோருக்கு சுமையை ஏற்படுத்தாதவாறு அரசு கல்விப்பணியை நடாத்திக் கொண்டு வருகிறது. உண்மையில் இவ்வாறான இலவசங்கள் கிடைக்கின்ற போதிலும் கூட பல மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் விட்டுவிட்டு தந்தையுடனோ தனியாகவோ வயலிலோ, கடற்கரையிலோ, வேறு எங்காவதோ ஏதோர் இடத்தில் வேலை செய்து தனது உடல் உழைப்பை சிறுவயதில் இருந்தே விணாக்குகின்றான். இந்த நிலை மாற்றம் அடைதல் வேண்டும். இதனை மாற்றும் சக்தி சமுதாயத்தின் முன்னேதான் காணப்படுகிறது.
அது மட்டுமல்ல பாடசாலையில் காணப்படுகின்ற கட்டாயக் கல்வி அமைப்பில் பிரதேச வாசிகள், சமுர்த்தி அதிகாரிகள், பாடசாலையின் அபிவிருத்தி சபையினர் என்று பலர் காணப்படுகின்றனர்.
இவர்கள் ஊடாக பால் நாட்டம் செலுத்துகின்ற ஒரு சபையாகவே இது காணப்படுதல் வேண்டும். அதற்கு இயலாத போதுதான் வேறு மார்க்கங்களின் துணைகொண்டு அவர்களை பாடசாலையின் பக்கம் திசை திருப்புவதற்கு உதவுதல் வேண்டும்.
எவ்வாறுதான் சுதந்திரங்கள், உரிமைகள் இருந்திட்ட போதிலும் அதனைக் கொண்டு பிள்ளைகள் நாட்டிற்குகந்த நற்பிரஜையாக வரவேண்டும் என்பதுடன் அவனிடம் சமயப்பற்றும், நல்லொழுக்கமும் ஒருங்கே அமைந்து காணப்படுகின்ற போதுதான் அனைத்தும் குடிகொள்ளும். இன்று பிள்ளைகளை சமய ரீதியான கொள்கைகளுக்கும் சற்று முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.
அதனைவிடுத்து எவ்வேளையிலும் பெற்றோர் தொடக்கம் ஆசிரியர் வரையிலும் படி படி என்று நச்சரிப்பதன் காரணமாக பிள்ளைகள் உள ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டு கல்விக்கே வேட்டு வைக்கின்ற நிலைமையும் ஏற்பட்டு அதனால் இடைநடுவில் கல்வியை விடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியும் விடுகிறோம்.
ஏனெனில் தம்பிள்ளை படித்து தான் எதிர்பார்க்கும் நிலைக்கு வரவேண்டும் என பெற்றோர்கள் விரும்புகின்றனர். எவ்வித தப்பாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை.
உண்மையிலேயே தனது பிள்ளையின் சுதந்திரமான போக்கு, சுதந்திரம், உரிமைகள் பற்றிய சிந்தனையை சிந்தித்து அதன்படி ஒழுகாத போதுதான் பிள்ளையும்,தனக்கு இவர்கள் மூலமாக கஷ்டத்தையே வழங்குகின்றார்கள் என்பதை உணர்ந்து தனது தேவை எங்கே கவரப்படுகின்றதோ அங்கே தங்குவதிலும், அதன்பால் ஆசை கொள்வதிலும் மனதை பறிகொடுக்கிறார்கள்.
இந்த நிலைமை வருவதற்கு முன்னராக பிள்ளைகளின் உரிமைகள், கடமைகள் பற்றிய விடயங்களை பெற்றோர்கள் அறிந்திருத்தல் அவசியமாகும். அத்துடன் பாடசாலயின் ஆசிரியர்களும் இவ்வாறான மாணவர்களை இனங்கண்டு உதவுதல் வேண்டும்.
இளம் சிறார்கள் விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் மனித குலத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் பெரியோர்கள் அனைவரும் பொறுப்பாளிகளே! என்ற உணர்வு எமதுள்ளத்தில் ஏற்பட வேண்டும்.
“கள்ளங்கபடமற்ற குழந்தைப் பருவம் என்பது விலை மதிக்க முடியாத சொத்து இன்பம் என்று தவறாகக் கருதப்படும் ஒரு கணநேரக் கிளர்ச்சிக்காக அந்த விலை மதிப்பற்ற சொத்தை ஊதாரித்தனமாக வாரியிறைத்துவிட முடியாது” என்ற மகாத்மா காந்தி அடிகளின் மொழியின் பால் கவனம் செலுத்தி இளையோர் மீது ஏற்படுகின்ற நச்சுக் காற்றை அகற்றி நற்கல்வியின் பால் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும்.
ஒவ்வோரு பிள்ளையும் தேவைகளையும், உரிமைகளையும் கொண்டேதான் காணப்படுகின்றன. பிள்ளையினது கலாசாரம் சூழல் மற்றும் அதனைச் சூழவுள்ள அனைத்து விடயங்களும் பிள்ளையின் தேவைகள், உரிமைகள், பெறும்வகையில் வழிகாட்டும் முக்கியமான பங்கினை பெற்றோர் கொண்டுள்ளனர்.
மதம், கலாசார விழுமியங்கள் மீது பற்றுக்கொண்டு, பிள்ளைகளை தம்வசம் மீட்டெடுத்து சீர்கல்வியை சிறப்பாக வழங்குவதற் குரித்தான ஊக்கத்தை வழங்க வேண்டியதும் அவர்களது கடமையாக அமைகிறது.
குடும்பம், கல்வி நிறுவனங்கள் (பாடசாலை) சமூக அமைப்புகள் போன்றன அதிகமாக சிறுவர்களது விடயத்தில் அதீத அக்கறை செலுத்தி சிறார்களின் கவனத்தை திசைதிருப்பி குடும்பத்தில் அவர்களை ஒதுக்கிவைக்காது சம சந்தர்ப்பம் வழங்குவதுடன் பாடசாலைகளில் சிறுவர்களது உரிமைகளைப் பேணும் வகையில் கருத்தரங்குகளை அதிபர்கள், ஆசிரியர்கள் நடாத்தும் ஒழுங்கினை மேற்கொள்ளுதல், மாணவர் கலை நிகழ்வுகள் மூலம் அவர்களது உரிமைகளை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தல், போதித்தல் என்பனவற்றின் ஊடாக உதவும் சமுதாயமாக நாம் அனைவரும் மாற வேண்டும்.
பெற்றோர்களாகிய நாம் நமது பிள்ளையின் அனைத்து நடவடிக்கை களையும் அவதானித்துக் கொள்ள வேண்டும். பிள்ளையின் சுற்றுப்புற பின்னணியில் அன்புடன் கலந்த கண்டிப்பினை, அவதானத்தை செலுத்துதல் வேண்டும். பிள்ளை யாருடன் அதிகமாக கூடுகிறார்கள், இரவில் வீடு வரும் நேரம், மாலை வகுப்பு கலையும் நேரம், வயதிற்கு மூத்த நபர்களின் உறவு, வீட்டுக்கு வருகின்றவர்களினுடனான தொடர்புகள் போன்றவைகளினை பெற்றோர் அறிதல் அவசியமாகும்.
இவ்வாறாக பிள்ளையின் நடத்தையின் பால் தமது கண்ணோட்டம் செலுத்தப்படுகின்ற போது பிள்ளை தவறான வழிகளில் செல்லாது பாதுகாப்பு பெறுவது நமது கைகளிலே தங்கியுள்ளது.
எனவே, இன்றைய நிலையில் பிள்ளைகளின் நடத்தைக் கோலத்தை அவ்வப்போது சுட்டிக்காட்டி தவறுகள் எழாத வண்ணம் நமது நாளைய தலைவர்களை பூஜிக்க வேண்டிய நிலையில் ஒவ்வொருவரும் மிக கவனத்துடன் நடந்து கொள்வதன் மூலமாக இளம் சிறார்களின் உரிமைகள் விடயத்திலும், அவர்களது ஒவ்வொரு அசைவிலும் பெற்றோர்கள், சிறுவர்களை பாதுகாக்கின்ற அமைப்புக்கள் என அனைவரும் ஒத்துழைப்புடன் ஒன்று சேர்கின்ற போது எமது கண்களான இப்பாலக உள்ளங்கள் நாளைய உலகை வெற்றி கொள்ள நாம் உறுதுணையாக இருப்போம். அத்துடன் பிள்ளைகள் குடும்பத்தின் பொருளாதார உயர்வில் ஒரு முக்கிய மூலதனம் என்பதை உணர்ந்து அவர்களது வயதிற்கேற்ற உள ஆளுமைக்கேற்ப வளர்த்தெடுப்பது அனைவரினதும் கடமையாகக் கொண்டு நாளைய சமுதாயத்தை இன்றே திட்டமிட்டுச் செயற்படுவோம்.

நன்றி - தினகரன்


0 commentaires :

Post a Comment