10/13/2009

பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணை : டிசம்பரில் இந்தியா பரிசோதிக்கும்

290 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணையை டிசம்பர் மாதம் ஏவி இந்தியா பரிசோதிக்கவுள்ளது. கடலுக்கடியில் இந்த சோதனை நடத்தப்படும். இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்புதான் இந்த பிரம்மோஸ் ஏவுகணை. இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ ஆகிய இரு பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே 'பிரம்மோஸ்' என்பதாகும். நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இந்த ஏவுகணையை ஏவிப் பரிசோதிக்க பாதுகாப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மத்தியில் இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.பிரம்மோஸ் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களையும் பொருத்தி ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவின் பலத்துக்கு மேலும் வலு சேர்க்கும் எனப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தியா சமீப காலமாக நீர் வழி படை பலத்தை பெருக்கி வருகிறது. அணுசக்தியில் இயங்கக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் என்ற நீர்மூழ்கிக் கப்பலை சமீபத்தில் வடிவமைத்து, கடற்படையின் பலத்தை பெருக்கியது. முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட போர் நீர்மூழ்கிக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய கே-15 செளர்யா ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர அடுத்த ஆண்டுக்குள் ரஷ்யாவிடமிருந்து அகுலா 2 ரக அணு நீர்மூழ்கிக் கப்பலை வாங்கவும் இந்தியக் கடற்படை மும்முரமாக உள்ளது.இந்த வரிசையில் தற்போது பிரம்மோஸும் இணைகிறது. ஒரிசா மாநிலம் பாலசோர் பகுதியில், இந்த சோதனை நடைபெறும். பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே இராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது இதை விமானப்படையிலும் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் பிரம்மோஸை ஏவும் பணிகளில் விமானப்படை மும்முரமாக ஈடுபட்டுள்ளது

0 commentaires :

Post a Comment