இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களை உதாசீனம் செய்துள்ளதாகத் தமிழக மற்றும் இலங்கை முஸ்லிம்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
20 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அறிக்கையில் எதனையும் குறிப்பிடவில்லை என முஸ்லிம் சமாதான செயலக இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ஓர் இன ரீதியான ஒடுக்குமுறையாகவே நோக்க வேண்டும் என புத்தளம் இடம்பெயர் முகாமில் தங்கியிருக்கும் சிரேஷ்ட முஸ்லிம் பிரஜை ஒருவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் இடம்பெயர் முகாமுக்கு விஜயம் செய்யுமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
முஸ்லிம் இடம்பெயர் மக்கள் தொடர்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும், இதன் மூலம் அவர்களின் பக்கச் சார்பான தன்மை புலப்படுவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
வன்னி இடைத்தங்கல் முகாம்களுக்கும், மலையகத்திற்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
0 commentaires :
Post a Comment