10/20/2009

கிழக்கு மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது




கடந்த 17/10/2009 அன்று கிணணையடி வாழ் பொதுமக்களால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு கௌரவம் அளிக்கும் முகமாக பாராட்டு நிகழ்வொன்றினை அப்பரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். கிண்ணையடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்றலில்.நடைபெற்ற இப்பாராட்டு நிகழ்வில் கிண்ணையடி பிரதேச அனைத்துப் பொதுமக்களும் கலந்து கொண்டு அமோக வரவேற்பளித்தனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதற் தடவையாக தமது ஊருக்கு விஜயம் செய்த முதல்வர் சந்திரகாந்தனை அப்பிரதேச வாழ் மக்கள் மிகவும் பிரமாண்டமான முறையில் வரவேற்பளித்து கௌரவித்தார்கள். அத்தோடு கிண்ணையடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புணராவர்த்தன நிதிக்கான அதிஸ்ட லாபச் சீட்டிழுப்பு நிகழ்வு ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதனை முதலமைச்சர் சந்திரகாந்தன் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


“கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக சிந்திக்க வேண்டிய சரியான தருணத்தில் இருக்கின்றார்கள்” என கிண்ணையடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புணராவர்த்தன நிதிக்கான அதிஸ்ட லாபச் சீட்டிழுப்பு நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே முதல்வர் சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலம் காலமாக எமது கிழக்குத் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக அதிகம் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு உண்மையான காரணம் என்ன என்பதனை எமது மக்கள் யாவருமே அறிவார்கள் ஆனால் இன்று அவ்வாறானதோர் சூழல் இங்கு இல்லை கிழக்கு மாகாணம் மிகவும் திறன்படச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதுவரைகாலமும் செயலற்றுப்போய் இருந்த பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபை என்பன தற்போது திறம்படச் செயற்படுகின்றது இதனூடாக எமது மக்கள் தமது பணிகளை மற்றும் தேவைகளை செவ்வனே நிறைவேற்றக்கூடியதாய் இருக்கின்றது என்றார்.
தொடர்ந்து கருத்துத்தெரிவித்த முதலமைச்சர் எமது மக்களுக்கான அபிவிருத்திகள் என்பது தொடர்தேற்சியாக இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது, ஆனால் நாங்கள் எமது சிறுபான்மை மக்களின் அரசியல் பலத்தினைப் பற்றியே சிந்திக்க வேண்டும். இதுவரை காலமும் கிழக்கில் இருந்து ஓர் அரசியல் தலைமைத்துவம் தோற்றம் பெறுமாக இருந்தால் ஏதோ ஓர் சக்தியை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. ஆனால் இன்று அவ்வாறல்ல கிழக்கில் முழுமையாக ஜனநாயகம் தென்படுகின்றது ஆகவே ஜனநாயகக் கட்சிகள் இருக்கின்றது அந்த வகையில் எமது த.ம.வி.பு கட்சியும் ஓர் ஜனநாயகக் கட்சியே, எமது கட்சியானது தற்போது மக்கள் மயப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆயிரக் கணக்கான தொண்டர்கள் புத்தி ஜீவிகள் கல்விமான்கள், சமூகப் பற்றாளர்கள் என அனைவருமே எமது கட்சியில் இணைந்தவண்ணம் இருக்கின்றனர் எனவே நாம் அனைவரும் ஒற்றுமையோடு சிந்தித்து செயற்பட்டு உரிமை, ஒற்றுமை, தனித்துவம் என்பவற்றை பேணி சரியான நேரத்தில் பிழையான முடிவினை எடுக்காமல் சரியான முடிவையே எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


Categories: செய்திகள்

Tags:

-->

0 commentaires :

Post a Comment