ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.
இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.
அறிக்கையின் முன்பக்க அட்டையில் “காங்கிரஸ¤க்கு சம்பவங்கள் தொடர்பான அறிக்கை” என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் போர் குற்றங்கள் தொடர்பாக விபரிக்கப்படவில்லை.
இதன் மூன்றாம் பக்கத்தில் இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதற்கான எந்த சாட்சியங்களும் இல்லையென தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியிட்ட தவறான கருத்துக்களை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் இலங்கையில் போர்க் குற்றம் இடம் பெற்றிருப்பதாக விவாதத்தினை முன்னெடுத்திருக்க வேண்டுமெனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதியின் விளைவாகவே காங்கிரஸ¤க்கு இலங்கை அரசாங்கம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை மீது மட்டுமன்றி ஈராக், ஜோர்டான், பாகிஸ்தான், மெக்சிக்கோ உள்ளிட்ட பல நாடுகள் குறித்தும் காங்கிரஸ், இராஜாங்க திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதெனவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.
0 commentaires :
Post a Comment