10/20/2009

தேசத்தின் வெற்றியைக் குறிக்கும் முதலாவது நினைவுத் தூபி அநுராதபுரத்தில் நிர்மாணம்


தேசத்தின் வெற்றியைக் குறிக்கும் முதலாவது நினைவுத் தூபியான ‘ஹெல ஜய’ தாது கோபுரத்திற்கான நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அநுராதபுரம் புனித பிரதேசத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நேற்றுக்காலை அநுராதபுரம் புனிதப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி காலை 10.06 மணியளவிலான சுபவேளையில் மேற்படி தாது கோபுர நிர்மாணத்துக்கான பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்தார்.
அமைச்சர்களான ஏ. எச். எம். பெளஸி, தினேஷ் குணவர்தன, ராஜித சேனாரத்ன, பண்டுபண்டார நாயக்க, திஸ்ஸ கரலியத்த உட்பட அமைச்சர்கள், மதத் தலைவர்கள் மாகாண முதல்வர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்த வெற்றியைக் குறிக்கும் ‘ஹெல ஜய’ தாதுகோபுரங்களை ஒன்பது மாகாணங்களிலும் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேவேளை, இரண்டு இந்துக் கோவில்கள், இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள், இரண்டு கத்தோலிக்க ஆலயங்களையும் நிர்மாணிப் பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவுறும் நேற்றைய தினத்தில் அநுராதபு ரத்தில் 2, 000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது தாது கோபுரத்திற்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்ப ட்டுள்ளது.
நேற்றைய இந்நிகழ்வில் கலந்துகொண்டு அனுசாசனம் வழங்கிய மதத் தலைவர்கள், மீண்டும் இந்த நாட்டுக்கு ஒரு சிறந்த அரசன் கிடைத்துள்ளதாக ஜனாதிபதிக்குப் புகழாரம் சூடினர்.
துட்ட கைமுனு போன்ற அரசர்கள் நாட்டின் நலனை மட்டுமே கருத்திற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அளப்பரிய வெற்றிகளை ஈட்டியுள்ளனர் எனக் குறிப்பிட்ட மதத்தலைவர்கள், அரச யுகத்துக்குப் பின்னர் இலங்கைத் திருநாட்டுக்குக் கிடைத்த நேரிய துணிச்சலுள்ள தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என தெரிவித்தனர்.
தேசத்தின் வெற்றியைக் குறிக்கும் தாதுகோபுரங்கள் நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் நிர்மாணிக் கப்படுவதன் மூலம் திரும்பும் திசையெல்லாம் வெற்றியின் ஞாபகங்கள் மக்கள் மனதில் மறக்கடிக்கப்படாமல் நிலைத்து நிற்க வழிவகுக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அனுசாசனம் வழங்கிய சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் தேசத்தின் வெற்றிக்குக் காரணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் ஆயிரம் குளங்களைப் புனர்நிர்மாணம் செய்யும் பணியையும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க தமதுரையில்; ஒரு காலத்தில் இந்த நாட்டில் அபிவிருத்தியுமில்லை. யுத்தமும் இல்லை. சமாதானமும் இல்லை எனக் குறிப்பிட்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது ஆட்சியில் இவை அத்தனையையும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தி ஐக்கிய இலங்கையை உருவாக்கியுள்ளார் எனத் தெரிவித்தார். சகல மதத்தலைவர்களும் ஜனாதிபதிக்கு நல்லாசி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment