மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பாடசாலை சுகாதார மற்றும் வைத்திய பரிசோதனையின் போது வழங்கப்பட்ட விட்டமின் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் திடீர் சுகவீனமுற்ற சம்பவம் தொடர்பாக நேரில் ஆராயும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நேற்று மாலை அந்த பிரதேசத்திற்கு நேரடி விஜயம் செய்துள்ளார்.
மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் இது தொடர்பாக மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில்,”மாகாண சுகாதார அமைச்சு உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய உயர் மட்டக் குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டு ,விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.” என்றும் வலியுறுத்தி கேட்டிருந்தார்.
இதனையடுத்து இப் பிரதேசத்திறகு நேற்று மாலை விஜயம் செய்த மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஏறாவூர் வைத்தியசாலையில் சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளடக்கிய கூட்டமொன்றையும் கூட்டினார்.
இக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ,வலய கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஜெய்னுதீன் ,மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.சி.எம். பலீல், சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச.எம். தாரிக் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரினால் இச் சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரியினால் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பது என இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை முதல் சம்பவம் இடம்பெற்ற மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து தடைப்பட்டிருப்பது குறித்தும் பாடசாலை அதிபருக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.
பாடசாலையை சுமூகமாக இயங்க வைப்பதற்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரையும் பெற்றோர்களையும் சந்தித்து இதற்கான ஒழுங்குகளை செய்யும் பொறுப்பு வலய கல்விப் பணிப்பாளரிடம் இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பேரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நாளை திங்கட்கிழமை முதல் பாடசாலையை வழமை போல் இயங்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
0 commentaires :
Post a Comment