இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திற்கு இரண்டாம் தொகுதியாக ஆயிரம் பேர் மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் தொகுதியாக துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 297 குடும்பங்களில் 75 வீதமானவர்கள் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இருந்து தமது வீடுகள் காணிகளுக்குச் சென்று விட்டதாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்கியுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பத்து நாட்களுக்குள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
திருகோணமலைக்கு அனுப்பட்டவர்களில் புலி உறுப்பினர்கள் கைது - இலங்கை இராணுவம்
இராணுவத்தினர்
வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் வினவப்பட்ட போது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் திருகோணமலைக்கு கொண்டு வந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அங்கு வைத்தும் அடையாளம் காணப்படுகின்றார்கள் என்றும் அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் அவர்களை கைது செய்து வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment