அடுத்து வரும் பத்தாண்டுகளில் ஆசியாவை பலம் பொருந்திய பிராந்தியமாகக் கட்டியெழுப் புவதில் ஆசிய நாடுகள் இணைந்து செயற்படுவது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடொன்றில் இதனை வலியுறுத்திய ஜனாதிபதி, சகல துறைகளிலும் பலம்பொருந்தியதாக ஆசிய பிரா ந்தியத்தைக் கட்டியெழுப்பி சகலரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
ஆசிய ஒத்துழைப்பு - உரையாடலுக்கான அமைச்சர்களின் 8வது மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
ஆசிய ஒத்துழைப்பு - உரையாடலுக்கான அமைச்சரவை அமைப்பின் தலைவர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
ஆசிய பிராந்தியம் ஒரு காலத்தில் உலகுக்கு முன்னுதாரணமான பலம் பொருந்திய பிராந்தியமாகத் திகழ்ந்தது. எனினும், சில அதிகார வர்க்கத்தினரின் செயற்பாடுகளால் அந்நிலை மாற்றமடைந்தது. இப்பிராந்தியத்தைப் பொறுத்தவரை சிறந்த வளங்களுள்ளன. இவ்வளங்களை உச்சளவில் பிரயோசனப்படுத்தி ஆசியாவை பலம்பொருந்தியதாகக் கட்டியெழுப்ப நாம் கைகோர்த்துச் செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை ஏனைய சர்வதேச நாடுகளுக்கு முன்னுதார ணமாகத் திகழ்கிறது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நாட்டில் சிறந்த சூழல் நிலவுகிறது. இதனைப் பயன்படுத்தி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உலக நாடுகள் முன்வரவேண்டும்.
ஆசிய ஒத்துழைப்பு உரையாடலுக்கான அமைச்சரவை அமைப்புக்கு பலமானதும் விசாலமானதுமான அரசியல் தரிசனம் அவசியமாகிறது. இதற்கு அரச அல்லது நாட்டுத் தலைவர்களின் மட்டத்திலான கூட்டங்கள் சிறந்த வழிவகுக்க முடியும் என்ற ஆலோசனையை நான் முன்வைக்க விரும்புகிறேன்.
இருபதாம் நூற்றாண்டில் ஆசியா சுதந் திரமடைந்தது. எனினும், தற்போது பல் வேறு கட்டுப்பாடுகள் மட்டுப்படுத்தல்கள் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுள்ள ஆசிய பிராந்தியத்திற்கு மீள சுதந்திரத்தை வெற்றிகொள்ள நாம் உழைக்க வேண்டியுள்ளது.
ஆசிய நாடுகள் தமது மக்களின் ஐக்கியம் ஒற்றுமையைப் பலப்படுத்துவதன் மூலம் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வகையில் எமது கவனம் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் செலுத்தப்படுவதும் அவசியம்.
நாம் அனைவரும் ஆசியாவுக்கு உரித் தானவர்கள். நாம் பெருமைப்படக்கூடிய வரலாறுகள் எமக்குள்ளன. உலகில் முக்கிய சமயங்களான பெளத்தம், கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் சமயங்கள் ஆசியாவில் ஆரம்ப மானவைகளே. வரலாற்றில் சிறந்த பண்பு கள் இங்கிருந்தே உருப்பெற்றன.
உலக சனத் தொகையில் நூற்றுக்கு 60 வீதமானோர் ஆசியாவில் வாழ்கின்றனர். நடுத்தர வர்க்கத்தின் துரித வளர்ச்சியினால் உலகின் சிறந்த வர்த்தகச் சந்தையாக ஆசியா திகழ்கிறது. இதனால் சர்வதேச முதலீடுகள் ஆசியாவுக்கே உரித்தாகின்றன. உலக உற்பத்தியில் 30 வீதமானவை ஆசியா வினுடையது.
அதேபோன்று சிறந்த இயற்கை வளங்கள் கனிப்பொருட்கள் உற்பத் திக்கும் இங்கு வாய்ப்புகளுள்ளதுடன் பொரு ளாதார ரீதியிலும் பலமானதாக ஆசியா திகழ்கிறது. எனினும், நாம் பல்வேறு பிரச் சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த வகை யில், அண்மைய உலக பொருளாதார நெரு க்கடியின் போது ஏற்றுமதி பொருளாதாரத்தில் நாம் எதிர்கொண்ட அழுத்தங்கள் சிறியதல்ல.
இது ஏனைய பிராந்தியங்களினால் ஆசியா வின் மீது சுமத்தப்பட்டவை. மற்றவர்கள் தோற்றுவித்த பிரச்சினை இது என்பதால் எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் எமக்கு உறுதுணை புரியவேண்டும்.
குறிப்பிட்ட மேற்குலக நாடுகளின் அழுத்தங்களினால் ஆசிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த சவால்களுக்கு நாம் தீர்வுபெற வேண்டியுள்ளது.
கடந்த இரு தசாப்த காலமாக இலங் கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப் பாட்டுக்குமான பாதுகாப்பை உறுதிப் படுத்துவது எமது பிரதான பொறுப்பாகியது. இதனால் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம்.
ஒத்துழைப்பு உரையாடல்கள் மூலம் இணைந்த தீர்மானங்களை மேற்கொள்வதில் நாம் முழு முயற்சியுடன் செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஆசிய ஒத்துழைப்பு உரையாடலுக்கான அமைச்சரவை அமைப்பில் 33 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் 2003ம் ஆண்டு தாய்லாந்து முன்வைத்த யோசனைக்கமைய இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் நடப்பு வருட தலைவராக வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பதவி வகிப்பதுடன் நேற்றைய இம் மாநாட்டில் ஆசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment