10/05/2009

சிறுபான்மையினக் கூட்டணியும் இனப் பிரச்சினைக்கான தீர்வும்



சிறுபான்மையினக் கட்சிகளின் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்ற தாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுதல், வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், இவ்விரு மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுத்தல் போன்றவற்றைப் பிரதான விடயங்களாகக் கொண்டு இக் கூட்டணி செயற்படும் என்று அச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இக் கூட்டணியின் செயற்பாட்டுக்குரிய விடயங்களில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இடம் பெறாமலிருப்பது ஏமாற்றமளிக்கின்றது.
மேலே சொல்லப்பட்ட மூன்று விடயங்களும் தமிழ் பேசும் மக்களின் நாளாந்த வாழ்வில் முக்கியமானவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதேநேரம் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது முக்கியத்துவத்தைப் பொறுத்த வரையில் இவற்றிலும் பார்க்க எவ்விதத்திலும் குறைவானதல்ல.
இவற்றிலும் பார்க்கக் கூடுதலான முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறலாம். இனப் பிரச்சினை தீர்வின்றித் தொடர்வதாலேயே மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.
இனப் பிரச்சி னைக்குத் தீர்வு காணப்படும் பட்சத்தில் மற்றைய பிரச்சினைகள் மறைந்துவிடலாம்.
இனப் பிரச்சினைக்கான தீர்வில் சிறுபான்மையினக் கட்சிகள் மத்தியில் உடன்பாடு ஏற்பட வேண்டியதன் அவசியத்தை அண்மைக்கால அனுபவம் வலியுறுத்துகின்றது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் களத்துக்கு வந்த தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் வாழ் நிலைக்குப் பொருத்தமற்றதும் நடைமுறைச் சாத்திய மற்றதுமான தனி நாட்டைத் தீர்வாக ஏற்றுச் செயற்பட்டதால் ஏற்பட்ட அவலங்களைக் கண் கூடாகக் கண்டுவிட்டோம்.
இதைப் படிப்பினையாகக் கொண்டு நியாயமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்று தொடர்பாகச் சிறுபான்மையினக் கட்சிகள் உடன்பாட்டுக்கு வர வேண்டியது தவிர்க்க முடியாத தேவை.
இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பின்தள்ளிப் போட்டு விட்டு வேறு விடயங்களில் கவனம் செலுத்திச் செயற்ப டுவது தமிழ் மக்களின் பிரதான நலனைக் கைகழுவி விடுவதற்குச் சமன். மீள் குடியேற்றம், காணிப் பிரச்சினை, சட்டவிரோதக் குடியேற்றம் ஆகியவற்றில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை ஏற்படுத்திச் செயற்படுகின்ற அதேநேரம் இனப் பிரச்சினைக்கான தீர்விலும் அத்தகைய நிலைப்பாட் டுக்குச் சிறுபான்மையினக் கட்சிகள் வந்தாக வேண்டும்.
அரசியல் அரங்கில் வேறொரு கூட்டணிக்கான பேச்சுவார்த் தையும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைமையிலான எதிரணிக் கூட்டணி யொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி யையே குறிப்பிடுகின்றோம்.
இந்தக் கூட்டணியை அமைப் பதில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருப்பவர்கள் சிறு பான்மையினக் கட்சிகளின் கூட்டணியிலும் தீவிரமான ஈடுபாடு செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் காங்கிரஸ¤ம் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிப்பவை.
சிறுபான்மையினக் கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணைய வைப்பதற்கான பொறுப்பை ரவூப் ஹக்கீமும் மனோ கணேசனும் ஏற்றிருக்கின்றார்கள். இது தொடர்பாக ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலை மையுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.
சிறுபான் மையினக் கட்சிகளின் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையில் முஸ்லிம் காங்கிரஸின் மூன்று தலைவர்களும் மனோ கணேசனும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றார்கள்.
உத்தேச சிறுபான்மையினக் கூட்டணி தமிழ் பேசும் மக்களின் நலனுக்குப் புறம்பான அரசியல் நோக்கத்தைக் கொண்டி ருக்கலாம் என்ற சந்தேகம் இவற்றை ஒன்று சேர்த்துப் பார்ப்பவர்களிடம் தோன்றாமலிருக்காது. இனப் பிரச்சினைக் கான தீர்வில் உடன்பாடு காண முற்படாமை இச் சந்தே கத்தை வலுப்படுத்தவே செய்யும்.
நன்றி- தினகரன்


0 commentaires :

Post a Comment