தென்மாகாண சபைத் தேர்தல் இன்று சனிக்கிழமை 10ம் திகதி நடைபெறுகிறது.
காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும்.
இரு போனஸ் உறுப்பினர்கள் அடங்களாக 55 பேரைத் தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்தத் தேர்தலில், 18 அரசியல் கட்சிகளிலும் 13 சுயேச்சைக் குழுக்களிலுமாக 1,091 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கவென 1479 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடாத்துவதற்கென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு மேலதிகமாக சுமார் ஏழாயிரம் பொலிஸார் கடமையில் அபமர்த்தப்பட்டுள்ளனர்.
சூழ்நிலைகளைப் பொறுத்து வாக்குச்சாவடிகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்தது. தேர்தல் கடமைகளில் பத்தாயிரம் அரச ஊழியர்கள் அமர்த்தப்பட் டுள்ளனர். வாக்குச் சாவடிகளுக்கு நேற்றுக் காலையே வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச் சாவடிகளுக்குக் கையடக்கத் தொலைபேசிகள் கமராக்கள் கொண்டு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களை நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறு சிறு சம்பவங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய, அமைதியான தேர்தலை நடத்தும் பொருட்டு, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, கரந்தெனிய, பெந்தர-எல்பிடிய, ஹினிதும, பத்தேகம, ரத்கம, காலி, அக்மீமன, ஹபராதுவ ஆகிய 10 தொகுதிகளில் 761,815 பேர் 670 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.
மாத்தறை மாவட்டத்தின் தெனியாய, ஹக்மன, அகுரஸ்ஸ, கம்புறுபிட்டிய, தெவிநுவர, மாத்தறை, வெலிகம ஆகிய தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 578,858 பேர் 436 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல, பெலியத்த, தங்காலை, திஸ்ஸமஹராம ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 421,186 வாக்காளர்கள் 373 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,158 அரச ஊழியர்கள் 85% வாக்களித்துள்ளனர்.
காலி மாவட்டத்தில் 23 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும், இரண்டு போனஸ் உறுப்பினர்களுமாகத் தென்மாகாணத்தில் 55 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
வாக்குகளை எண்ணுவதற்காக 168 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்காகப் 15 நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment