10/03/2009

அம்பாறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகின்றது - மாகாண சபை உறுப்பினர் எஸ்.புஸ்ப்பராஜா


அம்பாறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. விடுதலைப்புலிகளின் கால கட்டத்தை விட அம்பாறை மாவட்டம் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். புஸ்ப்பராஜா தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நாவிதன் வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் சந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மாகாண சபை உறுப்பினர் எஸ்.புஸ்ப்பராஜா அங்கு தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது:- இலங்கையில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் நிம்மதி, சந்தோசத்துடன் வாழலாம் என புலம் பெயர்ந்தவர்களைக் கூட ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அறைகூவல் விடுத்து அழைக்கின்ற அதேவேளை அம்பாறை மாவட்டம் அதற்கு மாறாக சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவது ஜனாதிபதியின் திட்டத்திற்கு மாறான செயற்பாடாகும்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து எவர் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.விலை மதிக்க முடியாத இழப்புக்களுக்கு பின்னர் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த ஒரு சில அதிகாரங்களைக் கூட சுதந்திரமாக அனுபவிப்பதற்கும் சிலர் தடையாக செயற்படுகின்றனர்.
இந்த நாட்டின் ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் போன்று கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சருக்கு மாகாண அதிகாரம் உள்ளது. அதனை யாரும் தடுத்து விட முடியாது.
அமைதிச் சூழல் நிலவும் கிழக்கில் சமீப காலமாக பாடசாலைகள் மூடப்பட்டு, வீதிகளில் தடை ஏற்படுத்தப்பட்டு, டயர்கள் எரிக்கப்பட்டு கட்டாயத்தின் பேரில் உண்ணாவிரதம் இருக்கச் செய்யும் செயற்பாடானது ஜனாதிபதி அறை கூவல் விடுக்கும் சமாதான செயற்பாட்டுக்கு முற்றிலும் மாற்றமானது.

0 commentaires :

Post a Comment