10/05/2009

379 குடும்பங்களை வவுனியாவில் - அமைச்சர் ரிஷாட்

வவுனியா மாவட்டம் சாளம்பைக் குளத்தில் 379 குடும்பங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்குமாறு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சாளம்பைக் குளத்திலிருந்து கடந்த 90 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள இக்கிரிகொல்லாவை என்ற இடத்தில் தற்காலிகமாக தங்கி வாழ்கின்றனர்.
இவர்களுள் முதற்கட்டமாக 21 குடும்பங்கள் அண்மையில் சாளம்பைக் குளத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இக்கிரிகொல்லாவையில் தங்கியிருக்கும் ஏனைய 379 குடும்பங்களையும் அடுத்த மாதத்திற்கு முன்னதாக அவர்களது சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துவதே அமைச்சரின் விருப்பமாகும். அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக அமைச்சர் தலைமையில் விசேட கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர், பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட மீள்குடியேற்றத்துடன் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதேவேளை இக்கிரிகொல்லாவையில் தற்போது இடம்பெயர்ந்து வசித்து வரும் மக்கள் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று முதல் தடவையாக தமது சொந்த இடமான சாளம்பைக்குளத்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தின்போது சாளம்பைக்குளத்திலிருக்கும் 10 குடிதண்ணீர் கிணறுகளையும் சுத்திகரிக்குமாறும் மின்சார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் ரிசாட் மேலதிக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.


0 commentaires :

Post a Comment