10/21/2009

இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும். சுவிஸ் இல் நடந்த 28வது பெண்கள் சந்திப்பில் பெண்ணியவாதியான தில்லை அவர்களால் வாசிக்கப்பட்ட கட்டுரை.

அறிமுகம்
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.
இலங்கைப் பெண்கள் குறித்து சிந்திக்கின்ற போது நமது பெண்கள் எவ்வாறு விசேடத்துக்குரியவர்கள் என்பதை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
ஐரோப்பாவில் கூட பலநாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்பே 1931 இலங்கை பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்து விட்டது. பெண்ணை அரசியல் தலைமைக்கு கொண்டுவந்த முதலாவது நாடு நம் நாடு இலங்கையில் ஆண்களைவிட பெண்களே கல்வியறிவு வீதத்தில் கூடியவர்களாகவும் உள்ளனர். இலங்கையின் பிரதான வருவாயைத் தீர்மானிக்கின்ற மூன்று பெருந்துறைகளான பெருந்தோட்டத்துறை சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்ட ஆடை உற்பத்தித்துறை வெளிநாட்டுப் பணித்துறை போன்றவற்றில் பெண்களே பெரும் தொழிற்படையினராக உள்ளனர்.
இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு பெண்களின் நிலை இலங்கையில் ஆரோக்கியமாக உள்ளதென பொதுவிலக்காகக் காட்டி விதண்டாவாதம் பண்ணுவோர் சமூகத்தில் ஒரு தளத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும் பெண்களுக்காக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் இன்னொரு தளத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எழுதியும், பேசியும், செயற்பட்டும் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் அவர்களாலும் நாளாந்தம் பலநூறு அடக்குமுறைகளைச் சந்திக்கும் இந்தப் பெண்களின் நிலைமைகளை விபரிக்கவோ, காட்சியாகக் காட்டவோ முடியாத நிலையே இன்றுவரையுள்ளது.
இதற்கான காரணங்கள் என்ன என நான் அவ்வப்போது புரிந்து வைத்திருந்த விடயங்களை ஆராயும் போது நான் வாழ்ந்த பிரதேசத்தினுள்ளும் நான் அனுபவித்த அடக்குமுறைகளுக்குள்ளும், நான் சந்தித்த நபர்களுக்குள்ளும், அதற்கு வெளியிலும் இருக்கக் கூடிய விடயங்களையிட்டே உங்களுடன் உரையாட விரும்புகிறேன்.
இலங்கையில் ஆரம்பகாலங்களில் பொதுவாக நான் புரிந்து வைத்திருந்த இடதுசாரியம் மற்றும் பெண்ணியம் என்பது மேட்டுக்குடியைச் சேர்ந்த உயர்வர்க்க, சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய உயர்கல்வி கற்ற பெண்களின் பெண்ணியத்தைத்தான் பெண்ணியம் என்றும் நினைத்துக் கொண்டேன்.
89, 90 களின் பிற்பகுதிகளில் இவ்வாறான பெண்களின் மிக மிக அதிகமான செயற்பாடுகளையும் எழுத்துக்களையும் அறிந்திருந்தேன்.
அதனைத் தொடர்ந்து எனக்கு கிடைத்த ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் அவ்வாறான சில பெண்களோடு நேரடியாகப் பெற்ற அனுபவங்களும் சமூகத்தில் ஒரு பெண்ணாக அடைந்த சொந்த அனுபவங்களோடும் தொடர்ச்சியாகப் பெண்களுக்காக இயங்குதல் என்ற தூரநோக்கத்தை புரிந்து கொள்ளவும் அதற்கான தேடல்கைளை விரிவு படுத்தவும் தொடங்கினேன்.
அதன் பெறுபேறாக பெண்களுடனான வேலைத்திட்டத்தில் நேரடியாக எனக்கு கிடைத்திருந்த அனுபவங்களுடாக ஒன்றை மட்டும் நான் மிகக் கறாராகப் புரிந்து கொண்டேன்
இல்லை.
இல்லவே இல்லை.
இன்றைய சூழலில் சிலர் தெரிந்திருந்த போதும் பலர் கண்டுகொள்ளாதஇ இன்னுமொரு சமூகத்தால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட என்னைப் போன்ற பெண்களிடம் உள்ள பெண்ணியம் வேறுஇ எனது சமூகப் பெண்களுக்கான பிரச்சனை வேறு என்பதைப் புரிந்து கொண்டேன்.
இதன் தொடர்ச்சியாகவே இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலுமுள்ள பெண்ணியங்களின் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். எனது சமூகத்துப் பெண்களின் பிரச்சனைகளை இனம் காண்பதற்கூடாகவே எனக்கான பெண்ணியத்தை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன்.
அவ்வாறெனில் நான் புரிந்து கொண்டிருந்த பெண்ணியம் இவ்வளவு காலமும் பெண்களுக்காக இயங்கவில்லையா?
அந்தப் பெண்களுக்காகக் கதைத்தோம், இந்தா இவர்களுக்காக இதைக் கதைத்திருக்கிறோம், இவர்களுக்காக இதைச் செய்திருக்கிறோம்
என விதிவிலக்காக உள்ள விடயங்களை எல்லாம் பொத்தம் பொதுவாக கொண்டுவந்து சேர்த்து, இந்தா இருக்கிறது இவர்களுக்காக நாங்கள் இவ்வளவு செய்திருக்கிறோம் என தங்கள் நலன்சார் நியாயங்களைப் படார் எனச் சபைகளில் தூக்கிப் போட்டு விடுகிறோம்.
நாங்கள் பெண்களாக ஒன்றுபடும் பொழுது நமது எதிரியிடம் வேண்டுமானால் இவற்றிலிருந்து தப்பிப்பதற்கான வாதங்களை முன்வைத்துவிட்டு கடந்துவிடலாம். அது நமக்கு வசதியாகவும் இருக்கும்.
நாங்கள் யார் யாரால் ஒடுக்கப்படுகிறோம் எந்த வர்க்கத்தினரால் அடக்கப்படுகிறோம் எந்தெந்த சக்தியினரால் ஓரம் கட்டப்படுகின்றோம்
போன்றவற்றை தெளிவாகத் தெரிந்த பெண்களிடமே இவ்வாறு சொல்வதுதான் வேடிக்கையானது இந்த சுயவிமர்சனத்தை நாம் ஏனையோரிடம் பகிரத்தேவையில்லை… குறைந்தது இவ்வாறான பெண் செயற்பாட்டாளர்கள் கூடும் இடங்களிலாவது நாம் விவாதித்து சரியான திசைவழியைக் கண்டடைய வேண்டிய தருணம் இது.
சரி…, பெண்கள் விடயத்தில் பிரதான பேசுபொருளை ஊடறுத்து உப விடயங்களிலும் கவனக்குவிப்பை செய்யவேண்டிய பொறுப்புடையவர்கள் நாம் அல்லவா? அந்த பொறுப்பு எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது? அதற்கு தடையாக இருந்த நலன்கள் என்ன? பின்புல சித்தாந்தங்கள் என்ன? எதிராக இருந்த சக்திகள் யார்? அவர்கள் கண்ட வெற்றிகள் தான் என்ன?
சமூக மாற்றத்தை நிகழ்த்தும் போக்கில் பேரரசியலிலிருந்து இந்த நுண் விடயங்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டது ஒன்றும் தற்செயலாக நிகழவில்லை. அதற்குப் பின்னால் பொறுப்பற்ற நலன்கள் நிச்சயமாக இருந்தேவந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தனித்தும் ஐக்கியப்பட்டும்
கடந்தகாலங்களில் நாங்கள் பெண்களுடைய பிரச்சனைகளுக்காகத் தனித்தும் பேரரசியலில் ஐக்கியப்பட்டும் செயற்பட்டபோது
சமூகத்திலுள்ள அனைத்து நுண் விடயங்களிலும் அக்கறை செலுத்தினோமா? அவற்றை குறைந்த பட்சமேனும் புரிந்து கொண்டோமா?
அவ்வாறு இருந்திருப்போமானால் எங்கள் மேலான தற்கொலையை நாங்களே நிகழ்த்த வேண்டி இருந்திருக்காது.
இலங்கையில் யுத்தத்தால் முதலாவது பாதிக்கப்பட்டவளும்
பெண் இரண்டாவது பாதிக்கப்பட்டவளும் பெண்
மூன்றாவதாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவளும் பெண்
என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாங்கள்
1.அந்தப் பெண்களின் பிரேத்தியேக நலன்களிலும் அடக்கு முறைகளிலும் சவால்களிலும் எவ்வாறு பங்களித்தோம்?
2.இந்தப் பெண்களின் எந்த நிலைமைகளுக்கு ஆதரவாக இருந்தோம்?
3.சமூகத்தின் எந்த சக்திகளின் கருத்துக்களுக்குச் சாதகமாக இருந்திருக்கிறோம்? இருந்துவருகிறோம்?
4.ஒடுக்கப்படும் சமூக சக்திகளின் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாமே போராடமுற்படுகையிலெல்லாம் அதற்கான அனுமதி மறுத்து „அதனை நாங்கள் பேசுகிறோம்…. நாங்கள் மட்டும்தான் பேசுவோம்…“ என்று கையிலெடுத்தவர்கள் குறைந்த பட்சம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன பேச விரும்புகிறார்கள் என்றாவது கேட்டார்களா?
இவ்வாறான கேள்விகளை உருவாக்கும் போதுதான்
யார் தவறவிட்டார்கள்? எதைத் தவறவிட்டார்கள்?, எதற்காகத் தவறவிட்டார்கள்? என்ற பதில்களையும் பெற முடியும்.
உதாரணங்களுக்காக நான் சந்தித்தவைகளும் அனுபவித்தவைகளும் அறிந்தவைகளும் சில
பிரதேச ரீதியாக தான் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் அங்குள்ள பெண்களுக்குள்ள பிரத்தியேகப் பிரச்சனைகளையும் உதாரணத்திற்கு அம்பாறை அல்லது மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கதைத்தால் அதனை ஒரே அடியில் பிரிவினைவாதம் கதைக்கிறாள் கிழக்குத்தேசியம் கதைக்கிறாள் என்கிறோம் .அந்தப் பெண்களுக்குப் பிரிவினைவாதம் தெரிந்திருந்தால் தங்களது கணவர்கள் செய்யும் அத்தனை கொடுமைகளையும் கொடூரங்களையும் தாங்கிக் கொண்டு வீடுகளில் இருந்திருப்பார்களா?
தான் வாழும் சமூகத்தால் தலித் என்கிற ஒரு காரணத்திற்காக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் தனக்கு எதிரான ஒடுக்குமுறையை கதைத்தால் அதையும் ஒரே அடியில் எதிர்த்து எதற்காக இந்த இடத்தில் இதைக் கதைக்கிறாள்? சாதியம் கதைக்க வந்திட்டாள் என்கிறோம் அந்தப் பெண் என்ன உயர்சாதியமா கதைத்தாள்? இல்லையே தனக்கான சமூக நீதியை மட்டுமல்லவா அவள் கோரினாள்.
காலங்காலமாக சொந்த வாழ்வாதாரப் சிக்கல்களை மலையகப் பெண்கள் முன்வைக்கும் போது இன்றுள்ள நிலையில் எரியும் பிரச்சனை இவர்களுடையதா? என்று அந்தப் பெண்களின் குரலையும் உணர்வையும் ஓரே அடியில் மடக்குகிறோம்.
அவளுடைய சமூகத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் இழப்புக்களையும் துரோகங்களையும் முஸ்லிம் பெண்கள் விபரிக்கும் போது முஸ்லிம் தேசியம் கதைக்க கிளம்பிட்டாள் மதஅடிப்படை வாதி என்கிறோம்.
இவ்வாறான நுண் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தெரிந்தும் புரிந்தும் கொண்ட ஒரு பெண் தனக்கான பிரத்தியேகப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்துவிட்டு பிரதான நீரோட்டத்திலுள்ள விடயங்களைக் கதைக்கும் போது அவளையும் ஒரே அடியில் புறக்கணித்தும், சந்தேகித்தும் அவள் மீது இலகுவாக முத்திரை குத்தி உலகம் புராவுமுள்ள நண்பர்களுக்கு அறிவித்தும், உறவுகளாலும் அவளைக் கைவிடுகிறோம்.
சமூகத்திலே இருக்கக்கூடிய அனைத்து அடக்கு முறைகளுக்காவும் குரல் கொடுக்கப் போகிறோம்.
என்று சொல்லிக் கொண்டு மேலெழுந்தவர்களால் எப்படி இவைகள் எல்லாவற்றையும் இவ்வாறு பார்க்க முடிந்தது?
தனித்து பெண்களின் பிரச்சனைகளை பேசும் அதேவேளை ஏனைய விடயங்களில் ஐக்கியப்பட்டும் செயற்பட வேண்டிய பொறுப்பு நம்முடையது… இதில்… தமக்காகவும் கதைத்துக்கொண்டு மற்றவர்களுக்காகவும் குரல் கொடுக்க எங்கு தவறினார்கள்?
இவ்வாறாக கடந்த காலங்களில் என்னுடைய சமூகத்துக்குள்ளும் நுண் தளங்களுக்குள்ளும் பல்வேறுவகையான முரண்பாடுகளைச் சந்திக்க நேர்ந்த போதுதான் அதனை ஆராயும் பக்குவமும் வித்தியாசங்களைக் கண்டுகொள்ளும் பக்குவமும் மேற்கிளம்பியது.
ஆகவே இன்றைய அடையாள அரசியலின் பிரத்தியேகங்களை அடையாளங் காண்பதிலும், பிரக்ஞைகொள்வதிலும் எங்கு தவறிழைத்திருக்கிறோம் என்பதை சுயவிசாரணை செய்யவேண்டியிருக்கிறது.
ஆணாதிக்க கட்டமைப்பு அதன் சித்தாந்தம், அதன் புனைவு அதன் அத்தனை ஆதிக்க கட்டுமானங்களையும் தகர்த்தெறிவதற்கான போராட்டத்தை மேற்கொள்ளும் அதேவேளை ஆணாதிக்கத்திற்கு அடுத்ததாக பெண்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் சமகாலத்தில் நிற்கவேண்டிய தேவை உள்ளதையே இங்கு அதிகம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பெண், பெண்ணானதாலேயே பிரச்சினை என்றால், ஒடுக்கப்படும் வர்க்கத்தை சேர்ந்த பெண்ணானதாலேயே வேறு பிரச்சினையை எதிர்கொள்கிறாள், தலித்தாக பிறந்ததாலேயே தலித் பெண் பாதிக்கப்படுகிறாள், ஆதிக்க சமயமொன்றில் பிறக்காததற்காகவே அவள் இன்ன சமயமென்பதற்காகவே பாரபட்சத்திற்குள்ளாகிறாள், இன்ன பிரதேசத்தில் பிறந்ததற்காகவே பிரதேசவாத வேறுபாடுகளுக்கு பலியாகிறாள். இன்ன இனத்தவளானதாலேயே அவள் சீரழிக்கப்படுகிறாள்.
ஆணும் பெண்ணும் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினை என கூறி இதனை நிராகரித்துவிடாதீர்கள். பெண் இந்த அடையாளங்களால் மேலும் விசேடமாக ஆண்களை விட பாதிக்கப்படுகிறாள் என்பதையே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கை அரசியலின் பிரதான நீரோட்டத்தில் பேரரசியலாக ஆக்கப்பட்ட பிரச்சனைகளின் போது கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட நுண் பிரச்சனைகளும் அவைசார்ந்த நுண் அரசியலும் நம்முடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் வர்க்கப்பிரச்சனை, தேசியப்பிரச்சனை, சாதியப் பிரச்சனை, சமயப்பிரச்சனை ஆகியவற்றுக்குத் தனித்த வடிவமும், தனித்த பண்புகளும், தனித்த பாத்திரமும் உண்டு இதை யாரும் மறுக்க முடியாது.
எனவே வர்க்கம், சாதி, பிரதேச, மற்றும் தேசிய எல்லைகளோடு பேரரசியலில் ஜக்கியப்பட்டவர்கள், தனித்து பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமது ஆதிக்க மனோபாவத்தால் அடக்கப்பட்ட சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் அவர்களுடைய பிரத்தியேகப் பிரச்சனைகளை கடந்த முப்பது ஆண்டுகளாக ஏன் கண்டுகொள்ளாதிருந்தனர்?
பேரரசியல் எவ்வாறு தனது ஆதிக்க நலன்களுக்காக அப்பெண்களையும் அவர்களுடைய தனித்துவங்களையும் அடக்கி ஒடுக்கியதோ அதிலிருந்து இம்மியளவும் வித்தியாசங்கள் இன்றி, இதர ஒடுக்கப்பட்ட சக்திகளும் அப்பெண்களின் குரல்களை அடக்கித்தான் வந்துள்ளது.
இவ்வாறான ஒற்றைச் சிந்தனையும் அடக்குமுறையுமே எமது ஒட்டுமொத்த புரட்சிகரமாற்றத்துக்கான அரசியல் சீரழியக் காரணமாக இருந்தது.
ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினர்களுக்காக இயங்குவதாக அறியப்பட்ட பல சக்திகள் அவரவர் நிலையில் பரஸ்பரம் ஏனைய அடக்குமுறைகளுக்கும் எதிராக கைகோர்த்து நிற்பதில் தவறிழைத்தே வந்திருக்கிறார்கள்.
ஆகவே ஆரம்ப காலங்களில் நாம் தவறவிட்ட விடயங்களையும் அனைத்துப் பெண்களினது பிரத்தியேகங்களையும் அவர்களுடைய தனித்துவங்களையும் அடையாளம் கண்டு அவற்றையும் சேர்த்துக்கொண்டு செல்லக்கூடிய உரையாடல்களையும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதே இன்று ஆரோக்கியமானதாகும்.
திறந்த பெண்ணிய உரையாடல்களுக்கும் சமூகத்தில் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் விசேட பிரச்சனைகளுக்கும் இந்தக் காலகட்டத்தைப் பெண்ணியச்
செயற்பாட்டளர்கள் தமது கைகளில் எடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
நிறைவாக
ஆரம்பகாலங்களில் தமது சிந்தனைகளாலும் தீவிரமான பெண்ணியச் செயற்பாட்டாலும், பெண்ணிய எழுத்துக்களாலும் இலங்கைக்குள்ளும் அதற்கு வெளியிலும் நன்கு அறியப்பட்ட, பெண்ணிய செயற்பாட்டாளர்கள், இன்றுள்ள புதிய கருத்தியல் போக்குகளுடன் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டும் புதியவர்களை இணைத்துக் கொண்டும் செயலாற்றவேண்டிய காலமிது. நாம் பெண்களின் கூட்டிணைவிற்கான மனோநிலைகளை ஊக்குவிப்பவர்களாகவும், வளர்ப்பவர்களாகவும் செயற்படுபவர்கள் என்பதை உறுதிசெய்துகொள்வோம்.
நாம் நமக்குள் தனித்தும், ஏனைய போராட்டங்களில் ஐக்கியப்பட்டும் முன்னேறுவோம் விடுதலை நோக்கி….


0 commentaires :

Post a Comment