10/12/2009

2/3 ஐ.ம.சு.மு அமோக வெற்றிஐ.தே.க, ஜே.வி.பி, மு.கா படுதோல்வி

தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. போனஸ் ஆசனங்கள் இரண்டு உட்பட 55 ஆசனங்களைக் கொண்ட தென் மாகாண சபையில் 38 ஆசனங்களை ஐ.ம.சு.மு. தனதாக்கி மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி பெற்றிருக்கின்றது.
இந்தப் பெருவெற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைக்கும், மஹிந்த சிந்தனை திட்டத்திற்கும் கிடைக்கப் பெற்றிருக்கும் மீள் ஆணை என்று அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய தென் மாகாண சபை பிரதேசத்திலுள்ள 21 தேர்தல் தொகுதிகளிலும் ஐ.ம.சு. முன்னணியே வெற்றி பெற்றிருக்கின்றது.
ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் ஸ்ரீல.மு.கா சகல தொகுதிகளிலும் தோல்விய டைந்துள்ளன. தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 12 இலட்சத்து 20 ஆயிரத்து 2 பேர் வாக்களித்தனர். என்றாலும் 35 ஆயிரத்து 537 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
செல்லுபடியான வாக்குகளில் 8 இலட்சத்து 4 ஆயிரத்து 71 வாக்குகளை ஐ.ம.சு.மு. பெற்றுக்கொண்டது.
இது 67.88 சதவீதமாகும். தென் மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு. 5 இலட்சத்து 6 ஆயிரத்து 891 மேலதிக வாக்குகளைப் பெற்று பெரு வெற்றி பெற்றிருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கப் பெற்றதோ 2 இலட்சத்து 97 ஆயிரத்து 180 வாக்குகள் மாத்திரமே. அதேநேரம் மக்கள் விடுதலை முன்னணி 72 ஆயிரத்து 379 வாக்குகளையே இத்தேர்தலில் பெற்றது.
தென் மாகாண சபையில் 38 ஆசனங்களை ஐ.ம.சு.மு. தனதாக்கிக்கொண்டிருக்கின்ற இதேவேளை யில், ஐ.தே.க. 14 ஆசனங்களையும், ஜே.வி.பி. 3 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றன. இத் தேர்தலில் ஐ.ம.சு.மு.க்கு அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலுமே அதிகப்படியான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
என்றாலும் தென் மாகாணத்திலுள்ள 21 தேர்தல் தொகுதிகளிலும் திஸ்ஸமகராம தேர்தல் தொகுதியிலேயே ஐ.ம.சு.முன்னணிக்கு அதிகப்படியான வாக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இதற்கடுத்தபடியாக ஐ.ம.சு.மு. அதிக வாக்கு பெற்ற தொகுதியாக தங்கல்ல விளங்குகின்றது.
இந்த 21 தேர்தல் தொகுதிகளிலும் காலி மாவட்டத்திலுள்ள, காலித் தொகுதியைத் தவிர சகல தொகுதிகளிலும் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.ம.சு. முன்னணி ஒவ்வொரு தொகுதியையும் வெற்றிபெற்றிருக்கின்றது. காலி தொகுதியை 4 ஆயிரத்து 824 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது.
திஸ்ஸமகராம தொகுதியில் 40 ஆயிரத்து 841 வாக்குகள் வித்தியாசத்திலும், தங்கல்ல தொகுதியில் 38 ஆயிரத்து 916 வாக்குகள் வித்தியாசத்திலும், காலி மாவட்டத்தின் கினிதும தொகுதியில் 31 ஆயிரத்து 172 வாக்குகள் வித்தியாசத்திலும், காலி மாவட்டத்தின் ஹக்மன தொகுதியில் 28 ஆயிரத்து 774 வாக்குகள் வித்தியாசத்திலும், தெனியாய தொகுதியில் 28 ஆயிரத்து 627 வாக்குகள் வித்தியாசத்திலும் என்றபடி அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.ம.சு.மு. வெற்றி பெற்றிருக்கின்றது.
தென் மாகாணத்திலுள்ள சகல தொகுதிகளிலும் ஐ.தே.க. தோல்வி அடைந்துள்ள போதிலும், திஸ்ஸமகராம, மாத்தறை, அக்மீமன, காலி, பத்தேகம ஆகிய தொகுதிகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியோ (ஜே.வி.பி.) திஸ்ஸமகராம தொகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.


0 commentaires :

Post a Comment