9/28/2009

இலங்கை அகதிகள் நிரந்தரமாகத் தங்க உதவி: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்


காஞ்சிபுரம், செப்.26: தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாகவும், நிரந்தரமாகவும் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவில நிறைவேற்றப்பட்ட 8 தீர்மானங்கள்: இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாக தங்குவதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் 115 முகாம்களில் மொத்தம் 73 ஆயிரத்து 572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்காமல் வெளியே தங்கியுள்ளனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவில் இலங்கையில் அவர்களது வீடுகளுக்கு திரும்புவதுதான் தாற்காலிக முகாம்களில் அவர்கள் அனுபவித்து வரும் துயரங்களைக் களையும் ஒரே தீர்வாகும் என்று இலங்கை உணர்த்திடும் வகையில் மத்திய அரசு தேவையான அழுத்தத்தைக் கொடுத்திட வேண்டும். இலங்கைக் கடற்படையினர் நடத்தும் அத்துமீறல்கள், தாக்குதல்கள், வன்முறைகளால் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாவதற்கு நிரந்தரமாக முடிவு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க...: கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் தடை ஏதுமின்றி செல்வதற்கும் அதையொட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்டு எடுப்பதற்கும் கச்சத்தீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். தமிழ்மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகள் நிரந்தரமாக காப்பாற்றப்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய ஆட்சி மொழியாக ஆக்கப்படவேண்டும். இந்தியாவில் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானல் முதல் கட்டமாக திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்திய கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசு அமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்திய நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 commentaires :

Post a Comment