9/09/2009

இலங்கை - இந்தியக் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் : இந். கப்பல்துறை அதிகாரிகள்


இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பயணிகள் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய கப்பல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச சேவை தொடர்பான இறுதி அறிவுறுத்தலை மத்திய அரசாங்கத்திடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாக கொச்சின் துறைமுக ஆணையக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்புக்கும் தென்னிந்திய கொச்சின் துறைமுகத்திற்கும் இடையேயான இந்த சேவையினை ஆரம்பிப்பது குறித்து சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டிலும் ஆராயப்பட்டது
. இதனையடுத்தே தற்சமயம் இந்த சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கொச்சின் துறைமுக ஆணையக தலைவர் என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கப்பலில் வரும் பயணிகளை எதிர்கொள்;வதற்கான சகல வசதிகளையும் தரத்தையும் கொச்சின் துறைமுகம் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர் ஏற்கனவே பல வெளிநாட்டு சிறிய மற்றும் நடுத்தர பயணிகள் கப்பல்கள் இந்தத் துறைமுகத்திற்கு வருகை தருவதாகவும் தெரிவித்தார். இலங்கையுடன் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள் கப்பல் சேவைகள் போன்றவை அந்தமான் தீவுகளுடன் ஏற்கனவே இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையின் மூலம் இந்திய - இலங்கை வர்த்தக சமூகங்களுக்கிடையில் மேலும் நெருக்கமானதும் உறுதியானதுமான உறவுகளை மேம்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 commentaires :

Post a Comment