ஒருபோதும் தோற்கடிக்க முடியாதென உலக நாடுகளால் கருதப்பட்ட எல். ரி. ரி. ஈ. அமைப்பினை தோற்கடித்திருப்பதன் மூலம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதம் நிலவும் நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதாக வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் தெரிவித்துள்ளார்.
லிபியாவின் 40வது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று முன்தினம் (02) அங்கு வைத்து சந்தித்த போதே நேற்று தனது கருத்தை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.
இலங்கையின் பொருளாதாரம் பேணப்படும் முறையை உலக நாடுகளுக்கு விளக்குவதற்கு இதுவே சிறந்த தருணமெனக் கூறிய வெனிசூலா ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கை கனியவள உற்பத்தியில் முன்னணியில் திகழும் நாடாக வருமெனவும் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ரீதியான உறவு வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இச்சந்திப்பின் போது தெளிவுபடுத்தினார்.
இலங்கை பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாகும். அந்த வகையில் கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளின் சிறந்த பொருளாதார மையமாக விளங்குவதனையும் வெனிசூலா ஜனாதிபதி சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.இதேவேளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெனிசூலா ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment