மட்டக்களப்பு நாவற்காடு அரசினர் வைத்தியசாலையில் சேவையாற்றிய சிங்கள மருத்துவரான சமரதிவாகர விக்கிரமசங்களாகே பாலித பத்மகுமார (வயது 28 ) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடரபுடைய விடுதலைப் புலி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி தனது கடமையின் நிமித்தம் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த போது குறித்த வைத்தியரும், வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கூலித் தொழிலாளி சக்தி எனப்படும் பேரின்பராஜா யோகேந்திரன் (35 வயது) என்பவர் அவரது வீட்டில் வைத்தும் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். சித்தாண்டியைச் சேர்ந்த 29 வயதான விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறப்படும் தர்மலிங்கம் குமார் என்ற சந்தேக நபர் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே இக்கொலைகளுடன் தொடர்புடைய நபர் என்பது தெரியவந்ததாகவும். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மறைவிடமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்நபர் கொடுத்த தகவலின் பேரில் கரடியனாறு - ஆயித்தியமலை வீதியிலுள்ள சிவப்பு பாலத்திற்கு அருகிலுள்ள நாவல் மரத்திற்கு கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி - 56 ரக துப்பாக்கிகள் - 03, அதற்கான மகசீன்கள் - 04, ரவைகள் 197, நான்கு பக்கமும் சிதறி வெடிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட 20 கிலோ எடையுடைய நவீன ரக கண்ணி வெடி - 01 போன்ற ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் பியரத்ன தெரிவித்தார்.9 வருடங்களாக விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்து செயல்பட்ட இந்நபர் அந்த அமைப்பில் கண்ணி வெடி தயாரிப்புத் துறையில் இரண்டு வருட கால அனுபவம் பெற்றவர் என்றும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் மட்டக்களப்பு பிராந்திய பொறுப்பாளர் கீர்த்தியின் உத்தரவுக்கு அமையவே சிங்கள மருத்துவரைத் தான் படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். வடக்கில் யுத்தம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் படையினரின் அவதானத்தை திருப்புவதற்காக சிங்கள உயர் அதிகாரி ஒருவரைக் கொலை செய்யுமாறு கீர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் குறித்த சந்தேக நபர் தமது விசாரணைகளின் போது தெரிவித்தார் எனவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர். இந்நபர் அவசரகால சட்ட விதிகளின் கீழ் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு விசாரணைக்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
0 commentaires :
Post a Comment