9/05/2009

திருக்கோணேஸ்வரத்திலிருந்து வேல் நடைபவனி ஆரம்பம்

திருகோணமலை மாவட்டம் வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி திருப்பதிக்கான வேல் நடை பவளி நேற்று திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது. எட்டாவது ஆண்டாக நடைபெறும் வேல்நடை பவனி திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆரம்ப பூசைகளை அடுத்து காலை ஆரம்பமாகி, திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், ஆலடி விநாயகர் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ ரெட்ணசிங்க பிள்ளையார் ஆலயம் என்பவற்றை தரிசித்து காலை 10.30 மணிக்கு வில்லூன்றி கந்த சுவாமி கோவிலை வந்தடைந்தது. அடுத்து அங்கு நடைபெற்ற விசேட கூட்டுப் பிரார்த்தனை மற்றும் பஜனை என்பவற்றையடுத்து சுங்க வீதியூடாக ஆரம்பமான நடைபவனி திருகோணமலை இறங்குதுறை வரை நடைபெற்றது.
11.15இற்கு திருகோணமலை மூதூர் படகு சேவை யூடாக வேல்நடை பவனியில் சென்ற அடியார்கள் மூதூர் சென்று மூதூர் இறங்கு துறையில் இருந்து வெருகலம்பதி வரை மீண்டும் நடைபவனியில் செல்கின்றனர்.
நேற்று 4ந் திகதி ஆரம்பமான இவ் நடை பவனி எதிர்வரும் 8ந் திகதி வெருகலம்பதியை சென்றடையும் எனவும், அடுத்த நாள் நடைபெறும். ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தீர்த்த உற்சவத்தில் நடை பவனியில் சென்ற முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் கூறுகின்றனர்.
சின்னக் கதிர்காமம் என்று முருக பக்தர்களால் அழைக்கப்படும் வெகுகலம்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிக்கு புகழ்பெற்ற மகாவலி கங்கைக் கரையில் 9ந் திகதி தீர்த்த உற்சவம் நடைபெற உள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அமைதிச் சூழலை அடுத்து பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மிகப் பெருந் தொகையான முருக பக்தர்கள் கிழக்கு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இம்முறை வெருகலம்பதிக்கு யாத்திரையாக வந்து கொண்டுள்ளனர்.
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோயில் திருமுருக தொண்டர் சபையினர், வேல்நடை பவனி பஜனைக் குழுவினர், இந்து இளைஞர் பேரவையினர் ஆகியோர் இணைந்து நடாத்தும் இவ் வருடாந்த வேல் நடைபவனியில் இம்முறை திருகோணமலையில் இருந்து பெருந் தொகையான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 commentaires :

Post a Comment