9/06/2009

ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு : அமைச்சர் ஆறுமுகன்



தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :"கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இவ்வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. இதன் பிறகு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன் போது தோட்டத்தொழிலாளர்களுக்கு 12.5 வீத சம்பள உயர்வை வழங்குவதற்கே முன்வந்தனர். இந்தச் சம்மேளனத்துடன் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதாக இல்லை.
இதனைத்தொடர்ந்து கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களின் தீர்மானத்தின்படி தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்தினை வலியுறுத்தி தோட்ட நிர்வாகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத வகையில் ஒத்துழையாமைப் போராட்டத்தினை கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர். அதாவது வேலை நிறுத்தம், மெதுவாக வேலை செய்தல் போன்ற போராட்டங்களைத் தவிர்த்து இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினை தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ளனர். காரணம்: வேலை நிறுத்தப் போராட்டம் செய்தால் தொழிலாளர்கள் தமது சம்பளத்தினை இழக்க நேரிடும். இதனைக் கருத்திற்கொண்டு தான் இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினைத் தொழிலாளர்கள் ஒற்றுமையாக முன்னெடுத்து வருகின்றனர்.கடந்த முறை சம்பள உயர்வை வலியுறுத்தித் தொழிலாளர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தினை மேற்கொண்ட போது, சில சக்திகள் அதனை, வேலை நிறுத்தப் போராட்டமாக மாற்றியது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறான சக்திகள் தமது சுய விளம்பரத்துக்காக இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினைத் திசை திருப்புவதற்கு எத்தனிக்கலாம். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமது கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.இதற்காக இ.தொ.கா.முழுமூச்சாக செயற்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment