9/05/2009

ஐ. நா. செயலாளருடன் அமைச்சர் சமரசிங்க சந்திப்பு

அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பென் கீ மூனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் காலநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள அமைச்சர் அங்கு ஐ. நா. செயலாளரைச் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது; இலங்கையின் தற்போதைய சூழ்நிலை சம்பந்தமாக ஐ. நா. செயலாளர் நாயகத்துக்குத் தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் சமரசிங்க பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கியுள்ளார்.
வடக்கில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அம்மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் சமரசிங்க விளக்கியுள்ளார். மிதிவெடிகள் அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அப் பணிகள் நிறைவுற்றதும் மீள்குடியேற்றம் விரைவுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பின்போது செனல் 4 மற்றும் ஊடகவியலளர் திஸ்ஸநாயகம் விவகாரம் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
செனல் 4 விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் சமரசிங்க, செனல் 4 வெளியிட்டுள்ள வீடியோ படங்கள் கூற்றுக்களில் எந்த வித உண்மையும் இல்லையெனவும் அவை உண்மைக்குப் புறம்பானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.


0 commentaires :

Post a Comment