9/20/2009

கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நோம்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி.

இன்று ஈத்துல் பித்ர் நோம்புப்பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பண்டிகையானது வெறும் சடங்காகவோ கேளிக்கையாகவோ அல்லாமல் பல தத்துவங்களையும் மனிதனின் சுபிற்சமான எழுச்சிக்கான வழிகாட்டுதல்களாக இருப்பதையும் நான் அவதானிக்கின்றேன்.
முப்பது நாட்கள் ஆகாரமின்றி ஆசையைக்கட்டுப்படுத்தி ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள், இதன் மூலம் ஒரு மிகப்பெரும் யதார்த்தமான தத்துவத்தை எடுத்து இயம்புகின்றனர்.
அது யாதெனின் மனதை ஒருமைப்படுத்தி இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுவதாகும் இதன்மூலம் பிறரை மதித்தல், பிறருக்கான உரிமைகளை வழங்குதல் மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடன் பழகுவதால் பல நன்மைகள் கிட்டுகின்றன. இவ்வாறான இத்தத்துவங்களும். குணாதிசயங்களுமே இன்று எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. மதங்கள் அனைத்துமே மனிதனின் மனங்களை ஒருநிலைப்டுத்தி நல்வாழ்வுக்காக வழிகாட்டுகின்றன. ஆனால் துரதிஸ்ட்ட வசமாக எல்லா மதங்களிலும் மத விழுமியங்களை துறந்து தமது சுயபோகங்களுக்கும் அளவுகடந்த ஆசைகளுக்கும் மற்றவர்களை துன்பப்படுத்தி, காயப்படுத்தி வாழ்பவர்கள் உள்ளனர்.
எமது நாட்டை பொறுத்தளவில் பல்லின பல கலாச்சார பரம்பரை கொண்டவர்களே வாழ்கின்றனர். இச்சூழலில் நாம் எமது மதவிழுமியங்களையும் சகோதர மதங்கள் கூறும் நல்லொழுக்கங்களை கடைப்பிடிப்போமாக இருந்தால், பிரச்சினைகள் என்பது எம்மை எள்ளளவும் நெருங்காது அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக சுமார் 03 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது உடமைகளை உறவுகளை இழந்து நிற்கதியான நிலையில் அகதி முகாம்களில் அல்லல் பட்டு கொண்டு இருக்கின்றனர் இம்மக்களின் வாழ்வில், நிம்மதியும் மகிழ்ச்சியும் விரவில் கிடைக்கப்பெற இந்நன்நாளில் அனைவரும் உறுதி பூணுவதுடன் எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு அடிகோலாய் திகழும் தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப்பெற வழிகள் பிறக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.

0 commentaires :

Post a Comment