9/28/2009

கல்லடிக் கரையில் திரண்டு ஒரு இலட்சம் மக்கள் குதுகலிப்பு.



எவ்வித பாதுகாப்புக் கெடுபிடிகளும் இல்லாது மட்டக்களப்பில் கல்லடிக் கரையில் நேற்று (26-09-2009) திரண்ட ஒரு இலட்சம் மக்கள் கிழக்கின் முழக்கம் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு தமது இராப்பொழுதைக்கழித்து குதுகலித்தனர்;. கடந்த சுமார் 30 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறானதோர் நிகழ்வு இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் மனங்களில் புதிய சிந்தனையில் தோற்றம் பெறுகின்ற இந்நேரத்தில் இன ஐக்கியங்களுடன் கூடிய நல்லுறவு களியாட்ட கலை நிகழ்ச்சிகளை நடடாத்தி மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துவதும் கடந்த கால கசப்பான உணர்வுகளை மறக்க வைப்பதுமே இந் நிகழ்ச்சியின் நோக்கங்களாகும்.
அதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிங்கள் முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு வாழ் மக்களுடன் ஒன்றித்து நீணட காலத்தின் பின்னர் அளவலாவும் வாய்ப்புகளும் கிடைத்தன. யுத்த பீதியிலும் மரன ஓலத்திலும் இறுகிக்கிடந்த மனித மனங்கள் இந்நிகழ்வின் ஊடாக விடுதலை அடைந்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.
காலையில் ஆரம்பித்த நீச்சலோட்டத்துடன் கலந்த மரதன் ஓட்டம் மட்டக்களப்பு நகர் காந்தி சிலையடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கல்லடி கடற்கரையில் நிறைவடைந்தது. மட்டக்களப்பு வாவியைக் கடந்து நீச்சல் அடித்து ஓடிச்சென்ற மரதன் ஓட்டம் பார்ப்போர் மனதை கொள்ளைகொண்டது. கல்லடிக் கடலோரத்தில் இடம்பெற்ற படகுச் சவாரி ஒரு புறமும் கடற்கரையில் இடம்பெற்ற உதைபந்தாட்டப்போட்டி இன்னொரு புறமுமாக பகல்வேளையில் நிகழ்வுகள் களைகட்டியது. மாலை பொழுதிலிருந்து ஆரம்பித்து கலை நிகழ்ச்சிகளும் வானவேடிக்கைகளும் இரவு ஒரு மணிவரை நீடித்தது. இசைக்கச்சேரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பு சோதனைகள் ஏதுமின்றி அங்கு வந்திருந்த ஒரு இலட்சம் மக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மற்றைய அரசியல் முக்கியஸ்த்தர்களும் அளவளாவி மக்களோடு மக்களாக இருந்து நிகழ்ச்சிகளை கண்டு கழித்தனர். இறுதியில் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் நிலை வகித்த வீரர்களுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் ரொக்கமும் இந்தியா சென்று வருவதற்கான விமானச் சீட்டுக்களும் பரிசளிக்கப்பட்டன. பெண் வீராங்கனைகளின் வரிசையில் பரிசு பெற்ற அனைவரும் மட்- ஜீவயோதி இல்ல மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் கடந்த கால கசப்புணர்வுகளை மறக்கச் செய்து மகிழ்ச்சிகளை விதைத்து புதிய உலகை நோக்கி எமது மக்களை அழைத்துச் செல்ல கிழக்கில் முழங்கிய இந்;த நிகழ்வை ஏற்பாடு செய்த சிறி ரிவி நிறுவனத்தினரும் கிழக்கு மாகாண சபையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

0 commentaires :

Post a Comment